Other articles 

யாழ்பல்கலை அறிவியல் நகர் அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகப்பெருமான் :

வரலாறும் எழுந்தருளலும்                                                                                                                              9.02.2023

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த காரணத்தினால் பல்கலைக்கழகத்தின் வன்னி நிலப்பரப்பினை நோக்கிய அபிவிருத்தியை அடியொட்டி கிளிநொச்சியை மையப்படுத்தி விவசாய பீடமும் பொறியியல் பீடமும் ஆரம்பத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தன. வடமாகாணத்தின் நடுமையமாக கிளிநொச்சி அமைந்திருந்ததனால் அப்போதிருந்த பல்கலைப் பேரவையில் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலான வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலான முன்மொழிவினூடாக இவ்விரு பீடங்களையும் உருவாக்கும் ஆரம்பப்புள்ளி குறித்து வைக்கப்பட்டது. பொறியியல் பீடத்தை உருவாக்கும் முயற்சியில் பலர் தங்களது பங்களிப்பை செலுத்தியிருந்தும் இதற்காக பொறியியலாளர் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக இணைக்கப்பட்ட பின்னும்கூட இலங்கையின் முன்னணி பொறியியலாளரும் இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவுமிருந்த அமரர் பேராசிரியர் துரைராசா அவர்களால் 3.12.1990ம் திகதி ஊரடங்கிய வேளையில் முதன்முதலாக விவசாய பீடத்தை இரணைமடு சந்தியிலமைந்துள்ள மாகாண ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் அப்போதய பணிப்பாளராயிருந்தவரும் பேரவை உறுப்பினருமான அமரர் கலாநிதி விவேகானந்தன் அவர்களால் மனமுவந்து  பீடத்திற்காக தரப்பட்ட கட்டடத்தில் ஆரம்பிக்கவே யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் லேடி லீலாவதி இராமநாதன் அம்மையாரால் உருவாக்கப்பட்ட ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபரமேஸ்வரப்பெருமான் அனுக்கிரகம் கிடைத்தது. சிவப்பிரம்மத்தின் அருளாட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து அறிவியியல் நகரையும் உள்ளடக்கியிருக்கின்றது. எத்துணை மகிழ்ச்சி, எமக்கெல்லாம் கிடைத்த அருட்கடாட்சம், துணிவு, துயரத்திலும் துவண்டுவிடாது தன்னம்பிக்கையை தமது தும்பிக்கையால் காட்சிதந்தருளும் இறையை எமக்குள்ளே உருவகித்த அருளாளரை ஆலயமாக்கியிருக்கும் சிறப்பு எம்எல்லோருக்கும் கிடைத்த வரம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓரங்கமான அறிவியல் நகரில் உள்ள கிளிநொச்சி வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகப்பெருமான் 8.03.2023 இல் கும்பாபிஷேகத்துடன் பிரமாண்டமாக எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கின்றார். கல்விப்புலம் சார்ந்த அனைத்து பல்கலைக்கழக சமூகத்தினதும் நல்லாசி வேண்டி அனைவரதும் பங்களிப்பினால் உருவாகியிருக்கும் அழகிய ஆலயத்தை ஒப்போற்றியிருப்பதும் நின்று நிமிர்ந்து கண்கொள்ளா காட்சிதந்திருக்கும் வரம் கிடைத்திருப்பதும் அனைவருக்கும் திருப்தியையும் மனநிம்மதியையும் தந்திருக்கின்றது. நமது ஆன்மா மகிழ்ந்திருக்கும் இவ்வேளையில் இது பற்றிய வரலாறு ஆவணப்படுத்தல் வேண்டும் என்னும் கோரிக்கையை பொறியியல் பீடத்து கலாநிதி கதிர்காமநாதன் அவர்கள் விடுத்த போது முதலில் சற்று தயங்கினாலும் இறைபணியாக அவர் உருக்கொண்டதை உள்ளதை உணர்ந்ததை ஆதிமொழியில் எழுத்துருக்கொடுக்க வேண்டும் என இறைவன் பணித்ததை மனமார ஏற்று இதனை எழுத முற்பட்டிருக்கின்றேன். எம்பெருமானின் நல்லாசியுடன் கிளிநொச்சியில் விவசாய பீடம் ஆரம்பித்த 3.10.1990ம் நாளிலிருந்து 33 வருடங்களாக பணிபுரிய கிடைத்த  பெருமையுடன் இக்காலத்தில் எல்லோருக்கும் சித்தி தந்து உயர்வடைய வைத்து உவகை கொண்டு ஆனந்தமாக பள்ளி கொண்டிருக்கும் எம்பெருமான் எழுந்தருளிய வரலாற்றை அந்த பிரமாண்டத்தை சுருக்கியிருக்கின்றேன்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். எமது அனைத்து செயற்பாட்டுக்கும் ஆரம்பத்தை ஸ்ரீசித்தி விநாயகப்பெருமானிலிருந்து அவர்தம் அருளாசியிலிருந்தே ஆரம்பிக்கின்றோம். அனைத்திற்கும் சுழிபோட்டு ஆரம்பித்தவர் தாமமர்ந்து அருள்பாலிக்க அழகிய ஆலயத்தை அமைக்கச் செய்து ஆலயத்து அருளொலி இசைத்து அனைவருக்கும் காட்சிதரும் இடத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.  இதற்கொரு வரலாறு உண்டு. எம்பெருமான் பள்ளிகொண்ட சிறிய ஆலயத்தின் உருவாக்கத்தோடு தொடர்புபட்டதால் என்னை தெரிவுசெய்து எனக்கறிவித்து எடுத்துரை என்று பணித்ததை சிரமேற்கொண்டு என்சிற்றறிவுக்கு எட்டியவரை தொகுத்தெடுத்து எழுதியிருக்கின்றேன். இதை எழுதும் போது எனக்குள்ளே 1991ம் ஆண்டு ஏ9 வீதிக்கருகில் அருட்கொண்ட அந்த மூலிகை தோட்டத்து விநாயப்பெருமானை நினைவில் கொண்டு எழுதவே மனம் உந்துதலானது. ஆதலால் தற்போது அமைந்திருக்கும் ஆலயத்தை சுற்றி வடமாகாணத்து அனைத்து மூலிகைத் தாவரங்களையும் வளர்த்து பூக்களால் சோலையாக்கி அவர்தம் திருப்பணியை நிறைவேற்ற வேண்டும்;.

விவசாய பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு வணங்குவதற்காக சுற்றிவர பல ஆலயங்களிருந்தும் ஏ9 பாதையில் விவசாய உயிரியல் துறையினால் தற்போதிருக்கும் IOM இடத்தில் இறைவனின் கருணையினால் அழகான மூலிகைத் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பல்வகைத் தாவரங்களை உள்ளடக்கியிருந்த அந்த மூலிகைத் தோட்டத்தின் மேற்கு மூலையில் ஸ்ரீசித்தி விநாயகப்பொருமான் எழுந்தருளியிருந்தார். அப்பகுதி மக்களின் விருப்பத்தில் அங்கு எழுந்தருளியிருந்த எம்பெருமானுக்கு மூலிகைப் பிள்ளையார் என நாமமிட்டு நாமும் வணங்கிவந்தோம். பீடம் யாழ்ப்பாணத்திற்கு தற்காலிகமாக நகர்த்தப்பட்ட போது மூலிகைத் தோட்ட நிலத்தை IOM என்னும் நிறுவனம் கையேற்ற போது தமது பகுதியை வேலியமைத்து வரையறைசெய்ய மூலிகைப் பிள்ளையாருக்கு அப்பகுதி மக்கள் வணங்குவதற்காக அழகான சிறுஆலயம் அமைத்து தற்போது சிறந்து எழுந்தருளியிருக்கின்றார். மூலிகைத் தோட்டத்தில் வளர்த்த அக்கேசியா மாஞ்சியம் என்னும் பிறநாட்டு மரங்கள் அனைத்தும் போரில் எறிகணைக்குள் அழிந்தொழிய இரு மரங்களை இன்னமும் அங்கே அடையாளத்திற்காக விட்டு வைத்திருக்கின்றனர்.

போரின் உக்கிரத்தில் 2016 இல் பீடம் கரிப்பட்ட முறிப்புக்கு நகர்ந்து பின்னர் அனைத்தையும் இழந்து யாழ்ப்பாணத்தில் மருத்துவபீடத்தின் விருந்தினர் விடுதியிலும் தனியார் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தது. ஏறக்குறைய 17 ஆண்டுகள் அங்கிருந்து அல்லல் பட்டு பின்னர் அறிவியல் நகருக்கு 2013 இல் எம்மைக் கருவியாக்கி பீடத்தின் பீடாதிபதியாக்கி விவசாய பீடத்தை அறிவியல் நகருக்கு இறைவனே நகர்த்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அறிவியல் நகரில் அமைந்திருக்கின்றது.  கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத்தின் அபிவிருத்தியினை குறித்து நகர்ப்புற அபிவிருத்தி ஆணைத்தினால் (Urban Development Agency-UDA) வரையறுக்கப்பட்ட திட்டத்தின் படி மேற்படி கிளிநொச்சி வளாகம் அறிவுக்கான தளமாக கருதப்பட்டு கல்விசார் நடவடிக்கைக்காக கட்டப்பட்ட கட்டடங்களில் விவசாய பீடத்தின் உள்வருகையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அன்றிலிருந்து கிளிநொச்சி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை செய்வதற்கு பல்கலைக்கழக நகர்ப்புற திட்ட குழுவின் தலைவராக மீண்டும் அமர்த்தி அதில் வணக்கத்துக்குரிய தலங்கள் நான்கையும் ஒன்றாக பேதமின்றி ஓரிடத்தில் உருவாக்க வேண்டுமென்ற விருப்பினை எம்பெருமான் இறைவனே எமக்குள் உருவாக்கி அதனை பூர்த்தி செய்யும் வாய்ப்பையும் கொடுத்திருக்கின்றார். முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்துடன் ஆலய திருப்பணியில் முக்கிய பங்களித்த அறிவியல்நகர் வளாகத்தின் அபிவிருத்தியில் பல அற்புதங்களை செய்த அன்றைய பொறியியல் பீடாதிபதியும் பேராசிரியருமான அற்புதராசாவை அவசியம் நினைவில் வைத்தல் தகும். விநாயகப்பொருமானின் கருவியாகவே அற்புதராசா செயற்பட்டார் என்பதனை அனைவரும் அறிந்திருப்பர்.

புலம்பெயர்ந்த பல உறவுகள் எம்பெருமானின் ஆலயதிருப்பணியுடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.  நிதி வளம் இன்றி எதுவும் நடவாது என்னும்போது இறைதிருப்பணியின் அவசியம் உணர்ந்து அவரவர் பங்களிப்பை மனமுவந்து செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எம்பெருமான் இறைவனின் அருட்கடாட்சம் நிச்சயம் கிடைக்கும். அதேபோல அறிவியல் நகரில் உள்ள அனைத்து பீடங்களிலும் கல்விகற்றும் மாணவ மாணவியர்கள் பலருக்கு நிதிப்பிரச்சனை இருப்பதனை அறிந்திருக்கின்றோம். ஒருவேளை உணவின்றி அதற்கு பணமின்றி கல்விகற்கும் காலங்களும் இருப்பதாக மாணவர்கள் கூறக்கேட்டு இறையோடு இருக்கும் அனைவரும் துன்பப்படுகின்றோம். ஆதலினால் இறைவனின் திருப்பெயரில் நிதியமொன்று உருவாக்கி நிதிசார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு காண எம்பெருமானின் அன்பர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்னும் பதிவையும் இதில் இட்டுவைக்கின்றேன்.

முன்னைநாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் காலத்தில் இவ்வாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டி நாளாகி வருடங்களுமாகி பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஆலயப்பணி நிறைவடைந்திருக்கின்றது. எம்பெருமானின் இவ்வாலய இருப்புக்கு பலர் முன்னின்று உழைத்திருக்கின்றனர். அதில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இருந்த தற்போதும் இருக்கின்ற கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களின் பங்களிப்பும் அளப்பரியது. இவ்வாலயத் திருப்பணியில் ஆரம்பித்தும் தாமதமாகினாலும் இந்துகற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பத்மநாதன் ஐயா அவர்களின் காலத்தில் அவர்கொண்ட சிரத்தையின் பலனாக இவ்வாலயத்தின் அருட்கடாட்சம் தற்போது கிடைத்திருக்கின்றது. தற்போதய துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசாவின் மேற்பார்வையில் நடைபெற்ற திருப்பணியாகியதால் அவருடனிணைந்த அத்துணை திருப்பணி உறுப்பினர்களுக்கும் எம்பெருமான் அருட்கடாட்சம் கிடைக்கட்டும். தலைமையின் கனதியை தகுதியாய் தெரிந்து தாமிருத்தி தம்பணிதனை ஒப்பேற்றிய இறைவனின் கருணையை என்னவென்பது.

ஆலயந்தொழுவது சாலவும் நன்று என்னும் அருள்வாக்குக்கிணங்க அறிவியல் நகர் வாழ் சமூகத்தின் நல்வாழ்வுக்கு எம்பெருமான் என்றும் பக்கபலமாகவும் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவார். அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் நாள் அனைவருக்கும் பொன்னாள். இறைவனை துதித்தலும் அவர் அருட்கடாட்சம் பெறுதலும் எமது வாழ்நாள் புண்ணியம். பல்கலையின் அறிவியல் நகர் வளாகத்தின் அருட்கதவு திறக்கப்பட்டிருக்கின்றது. எம்பெருமான் அனைத்து மதத்தவர்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவர். முயற்சி செய்யும் அனைவருக்கும் முன்னின்று துணைபுரிபவர். அனைவரும் இணைந்து அறிவியர் நகர் வளாகத்தின் கல்விவளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். இங்கு கற்று வெளியேறும் அனைத்து பட்டதாரி மாணவர்களுக்கும் எம்பெருமான் அருட்கடாட்சம் என்றும் கிடைக்கும். அனைத்து பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரதும் குடும்ப உறுப்பினர்களின் நலன்களும் இறையின் துணையுடன் சிறந்திருக்க என்றென்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

[அருள்மிகு சித்திவிநாயகர் ஆலய கும்பாபிசேக மலரிலிருந்து.......]