Published on Dinakaran (May 23, 2013)
Thanks to Dinakaran for the Article:
Web Link: http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2658&Cat=3
'வைகாசி விசாகம்' - இந்துக்களும் பெளத்தர்களும் புனிதமாக போற்றும் திருநாள்
“அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
- கந்தபுராணம்
ஒவ்வொரு மாதமும் பூரண சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ் மாதத்தின் பெயராக அமைகின்றது. வைகாசி மாதத்தில் உச்சம் பெற்ற சந்திரன் முழுநிலவாக தோற்றமளிக்கும் பௌர்ணமி நாளில் ”விசாக” நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். அதனாலேயே இந்த மாதம் 'வைசாக மாதம்” என்றிருந்து பின்னாளில் 'வைகாசி மாதம்” என்றானது.
இந்த வைகாசிமாத பௌர்ணமி நாளை 'வைகாசி விசாகம்” என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 'வி' என்றால் 'பட்சி' (மயில்), 'சாகன்' என்றால் 'சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் 'விசாகன்” என்றும் அழைக்கின்றனர்.
”அவதாரம்” என்ற வடமொழி சொல்லுக்கு 'கீழே இறங்கி வருதல்” என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழேஇறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்
உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும் பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.
சிறப்புப் பொருந்திய இப் புனித திருநாளை மூலமாக கொண்டு சுழிபுரம் பறாளை சிவசுப்பிரமணியர் ஆலயம் முதலாக பல முருகன் ஆலயங்களில் மஹோற்சவ விழாக்களும் சிறப்புப் பூசைகளும் நடைபெற்று வருகின்றன. இத் தினம் எதிர்வரும் 24.05.2013 அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. அன்றைய தினம் குருபகவானும் (28.05.2013 வரை) இடப ராசியில் சஞ்சரிப்பது சிறப்பம்சமாகும்.
முருகனுடைய வாகனமான மயிலாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். தன்னை எதிர்த்து போரிட்ட சூரபத்மன் ஆணவத்தை அடக்கிமயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்டார் என கந்தபுராணம் கூறுகின்றது. சூரபத்மன்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும்நம்மை காப்பவர்களாம்.
வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடதுகண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.
வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில்இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால், முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்குமணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்.
குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தைதவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனைதியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம்என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.
முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய, ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்ததுஉள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது.
பத்மாசுரன் (சூரன்) என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும்என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.
இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத்துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன்நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.
இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளைஎன்பதால் இந்தப் பெயர் வந்தது.
முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ்மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாகமலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.
பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.
* மாதம் தோறும் விசாக நட்சத்திரம் வந்தாலும், தமிழ் மாதமான வைகாசியில் வரும் இந்த நட்சத்திரம் வைகாசி விசாகம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
* வைகாசி விசாகம் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றல், அன்றைய தினம் அவர் அவதரித்தார்.
* இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக திருச்செந்தூரில் இந்த விழா இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
* வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய ஸ்தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று நீராட முடியாதவர்கள், தங்கள்பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
* எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனிபூஜை செய்கிறார்கள். அவ்வாறு பூஜை செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
* ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான்.
* குழந்தை பாக்கியத்திற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அந்த் பாக்கியம் உடனேகிடைக்கும் என்பது ஐதீகம்.
* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்
ஆறெழுத்து ஆறு ஆதாரங்கள்:
முருகப் பெருமான் நமக்கு வீடுபேற்றை அளிக்கவல்லவன். இந்த வீடுபேற்றை பெற தடையாக இருக்கும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் என்ற ஆறு பகைவர்களை அழித்து வீடுபேறு அடைய நினைப்பவர்கள்ஆறுமுகனின் ஆறெழுத்தை ஓதவேண்டும். ஆறுபடை வீடுகளை சேவிக்க வேண்டும். அதிலும் வைகாசி விசாகத்தன்று செய்வது சிறப்பு.
நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் அடையாளமாய் விளங்குவது ஆறுபடை வீடுகள். மூலாதாரம்- திருப்பரங்குன்றம்; தெய்வானையை மணந்து உல்லாசமான தலம். சுவாதிஷ்டானம்- திருச்செந்தூர்; சிந்தனை அலைமோதி துன்பம் துடைக்கும் தலம். மணிபூரகம்- பழனி; ஞானதண்டபாணி உள்ள யோகத்தலம். அநாகதம்- திருவேரகம் என்ற சுவாமிமலை; தந்தைக்கு உபதேசித்த தலம். விசுக்தி- திருத்தணி; சல்லாபமாய்குறிஞ்சியில் விளையாடும் தலம். ஆக்ஞை- பழமுதிர்சோலை; ஞானப்பழம் உதிரும் சோலையாகிய தலம். இதை, 'உல்லாச நீராகுல யோக இத சல்லாப விநோதனும் நீ மலையே' என கந்தரனுபூதியில் அருணகிரிநாதர்கூறுகிறார்.
வேலனுக்கு சிவன் உபதேசம் செய்த தலம் தென்சேரிகிரி. இது பொள்ளாச்சி- திருப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு மலைமேல் உள்ள கோவிலில் வள்ளி, தேவசேனாவுடன் வேலாயுதசாமி கோவில் கொண்டுள்ளார். இங்குதான் பகைவர்களை வெல்ல சிவன் வேலனுக்கு உபதேசம் செய்தார். முருகன் வாகனம் இடப்பக்கம் தலை திருப்பி இருக்கும். இடப்பக்கம் சேவற் கொடிக்குப் பதில் சேவலே உள்ளது.
முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்ததுபோல் செம்பனார் கோவில் தலத்தில் அன்னை பார்வதிக்கு உபதேசம் செய்ததாக புராணம் கூறுகிறது.
திரையில் தோன்றும் முருகன்
இலங்கை கதிர்காமத்தில் செம்பு ஓடால் வேயப்பட்ட கொட்டகைதான் முருகன் ஆலயம். இங்கு முன்வாசலில் ஏழு திரைகள் உள்ளன. இதில் ஏழாவது திரையில் முருகன் இரு தேவியருடன் மயில்மீது அமர்ந்த ஓவியம்தீட்டப்பட்டுள்ளது. திரைக்குப்பின் ஒரு பெட்டியில் சடாட்சர மந்திர வடிவ யந்திரம் உள்ளது. மரகத வேலுக்குதான் அபிஷேகம், ஆராதனை, பூஜை நடத்துவர். இங்கு வைகாசி விசாக விழாவைப் பிரபலமாக நடத்துகின்றனர். இதற்கு 'ஆறுமுகம் புறப்பாடு' என பெயர்.
குன்றுதோறாடும் அந்தக் குமரக் கடவுளை வைகாசி விசாக நாளில் வழிபட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுவோம்.
வைகாசி விசாக திருநாளில் புத்தபெருமானின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழவுகள் இடம்பெறும். இந்துக்கள் ”வைகாசி விசாகம்” என கொண்டாடும் இப் புனிதநாளை பௌத்தர்கள் ”வெசாக்பண்டிகை” என கொண்டாடுகின்றனர்.
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களைக் கொண்ட நாளாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
1. சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் லும்பினி (நேபாள்) என்னுமிடத்தில் அவதரித்த நாளாகவும்,
2. புத்தகயா எனும் இடத்தில் அவர் தவம் புரிந்து புத்த நிலை (ஞானம்) அடைந்த நாளாகவும்.
3. புத்தரபிரான் பரிநிர்மாணம் அடைந்த நாளாகவும் இன்நாள் அமைந்து நிற்கின்றது.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாக பெளத்தர்கள் நம்புகின்றனர்.
இக்காலப் பகுதியில் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான உணவு வழங்கும் பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக் கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். நேபாளத்தின் லும்பினி என்ற இடத்தில் கி. மு. 560 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுத்தோதன மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர். இளமைக் காலத்தின் சுகபோகங்களை அனுபவிக்கும் தனது 29 ஆவது வயதில் வாழ்க்கையில் மூன்று முக்கியதத்துவங்களான மூப்பு, பிணி, மரணம் ஆகியவற்றை நேரில் கண்டார்.
இச்சம்பவத்தின் பின் இம்மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து நிலையான மெய்ஞ்ஞானத்தைத் தேடி முற்றும் துறந்த துறவியாக மாறி “கெளதம புத்தர்” என்ற பெயரைப் பெற்றார் இளவரசராகிய சித்தார்த்தர்.
தான் மரணிக்கும் வரைக்கும் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து பொருளுக்கும் போகத்திற்கும் போராடும் மாந்தர்களுக்கு வாழ்வின் உண்மையான அர்த்தங்களைப் போதித்து வந்தவர் புத்த பிரான்.
வாழ்வில் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு முதன்மைக் காரணம் மெய்ப்பொருள் பற்றிய அறிவின்மை. நிரந்தரமாற்ற சிற்றின்பங்களின் மீதான பற்றே அறியாமை உருவாக வழிசமைக்கின்றது. அகிம்சையைப் பின்பற்றும்தியான வழிமுறை ஊடாக மன அமைதியையும் தெளிவையும் பெறுவதன் மூலம் அறியாமை இருள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியும் என்பதை கெளதம புத்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன.
வெசாக் பண்டிகை பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் ஒரு வார காலத்திற்கு மேலாக அனுஷ்டிக்கப்படுகின்றது. நாடு தழுவிய ரீதியில் மத நிகழ்வுகள் இடம்பெறும். இக்காலப் பகுதியில் மக்கள்கேளிக்கை கொண்டாட்டங்களைத் தவிர்த்து அமைதி, தியானம், வழிபாடு ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
போதி மாதவனின் போதனைகளை நினைவுறுத்தும் வெசாக் வெளிச்சக் கூடுகள் எங்கும் காணப்படுகின்றன. வெசாக் என்றால் எல்லோர் மனதிலும் தோன்றுவது காற்றில் மிதக்கும் வண்ண வண்ண வெளிச்சக்கூடுகள்தான் பெளத்த மதத்தவர்கள் மட்டுமன்றி அனைவருமே வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்வதை ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
இல்லங்கள், வீதிகள், பொதுவிடங்கள் மற்றும் நகரின் மையப்பகுதிகளில் கலைநயம் மிகுந்த வெசாக் வெளிச்சக் கூடுகள் எண்ணெய் விளக்குகளாலும் மின் குமிழ்களாலும் ஒளியூட்டப்பட்டு உயரமாகக் கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் நாடே விழாக் கோலம் பூண்டிருப்பது போன்ற உற்சாக உணர்வு அனைத்து மக்கள் மனதிலும் ஊற்றெடுக்கும்.
எளிமையான எண்கோணத்தில் அமைந்த வெசாக் கூடுகள் முதல் வியக்க வைக்கும் நுட்பமான கலைப்படைப்புகள் அனைத்தும் ஒளி வெள்ளத்தில் மிதப்பதைப் பார்க்கும் பொழுது எம் மனது உவகையில் பூரிப்பதைஉணரலாம். பல வர்ணக் கடதாசிகளாலும் மூங்கில் பிரம்பு, தென்னம் ஈர்க்கு, சரட்டை முதுலான தென்னை மரத்தின் பாகங்களைக் கொண்டும் மெல்லிய உலோகப் பொருட்களைக் கொண்டும் மிகவும் பிரமாண்டமானவெசாக் கூடுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வெளிச்சக் கூடுகள் பெரும்பாலும் பெளத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு மலர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வடிவங்களில் அமைந்திருப்பதனால்பார்வையாளர்களை அதிகளவில் கவர்கின்றன.
மெய்ஞ்ஞானத்தை அடைந்த மனிதனின் வாழ்வில் அறியாமை இருள் நீங்கி நிலையான மகிழ்ச்சியும் அமைதியும் குடியிருக்கும் என்ற பெளத்த மதத்தின் தத்துவத்தை வெசாக் வெளிச்சக் கூடுகள் எடுத்துக்கூறுகின்றன. வெசாக் கூடுகளைப் போன்று மக்களின் ரசனைக்கு விருந்தாகக் காணப்படுபவை பிரதான சந்திகளில் வைக்கப்பட்டிருக்கும் வானுயர்ந்த மாபெரும் வெசாக் பந்தல்கள். கண்களைக் கொள்ளை கொள்ளும்வர்ண ஜாலமும் பிரமாண்டத் தன்மையும் மக்களிடம் இவை அதிக வரவேற்பைப் பெறுவதற்குக் காரணமாகின்றன.
பிரமாண்டமான வெசாக் கூடுகளைத் தயாரிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி விடுகின்றனர். சிறந்த அலங்காரத்தை உருவாக்குவதற்காக இவர்கள் காட்டும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பாராட்டுதற்குரியது. இதற்கப்பால், மக்களின் கலாரசனையைக் கட்டியெழுப்பும் நிகழ்வாகவும் அமைகின்றன.
ஒவ்வொரு வருடத்திலும் முன்னைய வருடத்தை விடவும் பல புதிய, மேம்பட்ட கலைப்படைப்புகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தயாராகின்றன. மக்களுக்குப் புத்த பகவானின் உன்னத பண்புகளையும் அவரின்போதனைகளையும் நினைவுறுத்துவதை முதன்மை நோக்காகக் கொண்டவை. வெசாக் அலங்காரங்கள், அனைத்து இன மக்களும் பெளத்த மதத்தின் பெருமையையும் வரலாறையும் எளிமையான வடிவில் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இது உள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் உண்மையான ஆன்மிகத் தேடல் உடையவர்கள் கண்களில் ஒவ்வொரு வெசாக் வெளிச்சக் கூடும் பரிநிர்வாணமடைந்த ஒரு போதி மாதவனை மனக்கண் முன்கொண்டு வருகின்றது. வண்ண மயமான வெசாக் கூடுகளைப் பார்த்து மகிழ்ந்த பின் அன்றிரவு தனது இல்லம் திரும்பும் ஒவ்வொரு பக்தனும் மன இறுக்கம் தளர்ந்து தெளிவான சிந்தையுடன் செல்கின்றான்.
அன்பு ஒன்றை மட்டுமே போதித்து வந்த போதி மாதவனின், பிறப்பு, பரி நிர்வாணமடைதல், இறப்பு ஆகிய முப்பரிமாணங்களை நினைவுகூரும் தினமே வெசாக் பண்டிகை. இந்தியாவின் பல மாநிலங்களிலும் 'விசாகப்பண்டிகை' யாக இது கொண்டாடப்படுகிறது.
மணிமேகலை காவியத்திலும் இப்பாண்டிகைபற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும்பெயர் கொண்ட புத்த பெருமான். அப்பெருமானின் பொன்மொழிகளே போதும், ஒரு வீடும் சமூகமும் நாடும் ஏன், உலகமும் சுபீட்சம் பெற. இதோ அவரது பொன்மொழிகள் சில :
* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.
* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும் போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போதுஇன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான்.
* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.
* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன்,கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்துசெல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.
* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து மீட்டுக்கொள்.
* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக் கழுவுவதே எனக்குத் தேவை.
* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை,தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள், சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால்,துன்பங்களை விரட்டி விடலாம்.
புத்தரின் கடைசிக் காலம். இது தெரிந்த உடன் புத்தருடைய அன்புச் சீடனான ஆனந்தன் அழுதான். கெளதம புத்தர், 'ஏன் அழுகிறாய்? எனக்கு மரணமில்லை. நான்தான் மறுபடியும் பிறப்பேன் என்று உனக்குச்சொல்லியிருக்கிறேனே?'
'சுவாமி நீங்கள் பிறப்பீர்கள். ஆனால் எங்கே, எப்படிப் பிறப்பீர்கள்? நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுபிடிப்பேன்?' என்று ஆனந்தன் கேட்டான்.
புத்தர் புன்னகை செய்தபடி, 'ஆனந்தா! என்னை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அன்புடைய எல்லோரும் புத்தன்தானே...?'' என்று கேட்டார்.
புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், 'இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.
அதற்கு புத்தர், 'முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்' என்று சொல்லிவிட்டார்.