Puthumaitheni Ma. Anbalagan
[Masilamani Anbalagan]
மா. அன்பழகன்
சிங்கப்பூர்
ma.anbalagan@gmail.com
வரலாறு
கவிஞர், எழுத்தாளர், கதாசிரியர், கட்டுரையாளர், பேச்சாளர், இதழாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, சமூக, இலக்கியச் சிந்தனையாளர், வணிகர், பொதுத்தொண்டர் - இப்படியான பன்முகம் கொண்டவர்.
தமிழகத்தின் இப்போதைய நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 2 எனும் கிராமத்தில் மாசிலாமணி – செல்லம்மாள் இணையருக்கு ஏழாவது மகனாக 21.01.1943-இல் பிறந்தவர். பிறந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்து அதிராம்பட்டினத்தில் புகுமுக வகுப்பையும், கும்பகோணத்தில் அறிவியல் இளங்கலை முதலாண்டையும், சென்னை மருத்துவக் கல்லூரியில் பல்மருத்துவத்தின் முதலாண்டிலும் படித்தும் பட்டமேதும் பெறாதவர்.
இவர் திரைப்படத் துறையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரிடம் உதவியாளராய் 15 படங்களுக்குப் பணியாற்றிய பின்னர் இரண்டு படங்களைத் தயாரித்தார். இவரது குறும்புக்காரி எனும் படத்தின் கதாநாயகி ஜெயலலிதாவின் (பின்னாளில் தமிழக முதல்வர்) ஒத்துழைப்பு இன்மையால் அத்தொழிலில் தொடர்ந்து இருக்கமுடியாமல் திணறினார். இருந்தாலும் அதே படத்தை பாதபூஜை என்ற பெயரில் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஜெயலலிதாவுக்குப் பதில் ஜெயச்சித்ராவை நாயகியாக நடிக்க வைத்து, முத்துராமனுக்குப் பதில் சிவக்குமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து 1974-இல் படத்தை வெளியிட்டார்.
அன்பழகனின் நண்பர் முன்னாள் அமைச்சர் திரு க. இராஜாராம் அவர்களின் ஆலோசனையின் பேரில் மீண்டும் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் கதை வசனம் எழுதிய 'புதுச் செருப்பு கடிக்கும்' என்ற திரைப்படத்தைத் தயாரித்ததோடு இணைந்தும் இயக்கினார்.
சென்னையில் செல்லாஸ் எனும் உணவகம் நடத்தினார். தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கம் கொண்ட இவர், நேர்மையான அரசியலில் ஈடுபட்டார். மாநிலம் தழுவிய அளவில் தி மு கழக இலக்கிய அணியின் பொருளாளரானார். மைலாப்பூர் தொகுதி சட்ட மன்ற இடைத் தேர்தலில் போட்டியிட ம தி மு கழகத் தலைவர் திரு வைகோ அவர்களால் அழைப்பு விடுக்கும் நிலைக்கு வளர்ந்தார். தன்னலம் பாராது பிறர் நலம் பேணுபவர், பொதுச் சேவையில் தம்மை இணைத்துக்கொண்டு சமுதாயத் தொண்டு செய்தார். புகழைப் பெற்ற அளவிற்கு, பொருளை ஈட்ட முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் க. இராசாராம் அவர்களுடன் கொண்டிருந்த இணைபிரியா நட்பினாலும், அண்ணன் மா. மீனாட்சிசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும், இதழாசிரியர் என்பதாலும் அமைச்சர்களிடம்; அதிகார மேல்நிலையினரிடம் கொண்டிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்குக் கல்லூரியில் இடம், வேலைவாய்ப்பு, இடம் மாறுதல் போன்ற சேவைகளைக் கைம்மாறு கருதாது செய்துகொடுத்தார்.
சுமார் 100 திருமண இணைப்புகளை முன்னின்று ஏற்பாடு செய்துகொடுத்தவர். ‘உறவு மலர்’ எனும் திங்களிதழைச் சிங்கைக்குப் புலம் பெயரும் வரையில் ஆசிரியராய் இருந்து ஒரு சமூக அமைப்புக்கு நடத்திக் கொடுத்தவர்.
திலகவதி என்பவரின் தந்தை திரு சி. இராமையா அவர்கள், அன்பழகன் பிறந்த அதே ஆயக்காரன்புலத்தில் பிறந்து தன் ஆறு வயதில், உலகப்போருக்கு முன்னமே சிங்கை வந்தவர். அன்பழகனின் அண்ணன்கள் காசிநாதன், செகதீசன் இருவரும் 1950களில் பொருள் தேடிச் சிங்கை வந்தவர்கள். ஆக இவருடைய அண்ணன்களும், இராமையாவும் சேர்ந்து அன்பழகனின் திருமணத்தைச் சிங்கப்பூரிலேயே முடிவு செய்தார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்த திலகவதியை 02.09.1971-ல் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில், மக்கள் திலகம் எம்ஜியார் முன்னிலையில் சென்னையில் மணம்புரிந்து அங்கேயே வாழத் தலைப்பட்டார். 25 ஆண்டுகள் கழித்து 1994 அக்டோபரில் புலம் பெயர்ந்து இங்கு வந்தவர்.
சகோதரருடைய மளிகைக் கடையில் உதவியாளராய் வேலையைத் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, செல்வி ஸ்டோர் டிரேடிங் எனும் தனிக் கடைக்கு உரிமையாளராகியதோடு ’செல்லாஸ்’ எனுமோர் உணவகத்திற்கும் அதிபரானார். வேண்டிய அளவுக்குச் செல்வம் சேர்ந்தது. ஆனால் பிள்ளைகள் தொழில்களைத் தொடர்ந்து நடத்திட விரும்பாததால், கடைகளை விற்றுவிட்டார்.
கவிமாலை எனும் அமைப்புக்கு எட்டு ஆண்டுகள் காப்பாளராக விளங்கி, அதைச் சிங்கையில் உள்ள சிறந்த தமிழ் அமைப்புகளில் ஒன்றாக்கினார். அவ்வமைப்பின் சார்பில் 140க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுக் கொடுத்துச் சிங்கையில் ஒரு சாதனை படைத்தவர்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், மாணவர் கடித இலக்கியம், வரலாறு என 37 பல்வகைப் படைப்புகளை இதுவரை எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய கவிதைகளுக்காகவும், நூல்களுக்காகவும் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
2003 சனவரியில் மணிவிழாவைக் கொண்டாடியவர், அண்மையில் (2018 சனவரி) பவளவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தவர். எந்த நூலையும், நிகழ்வையும் புதுமையாகச் செய்வதால் இவர் 'புதுமைத்தேனீ' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
History
He is born in Tamilnadu on 21. 01. 1943. After finishing his College education, he entered into the Film industry. He produced and directed Tamil films. He wrote stage play and acted too. When he was there, he wrote seven books. He created and was an author of a monthly magazine. He worked there for the Tamil society for about 25 years.
Because of his wife was a Singapore citizen, he came to Singapore on 1994 and became citizen at 2004. He was a famous grocery and restaurant businessman in Serangoon Road. When he was in Tamil Nadu, Chennai he wrote 7 books; here in Singapore, he wrote 28 books. Altogether he wrote 35 books so far including Poetry, Short Stories, Novels, Essays, Children & Students Literary.
Kavimaalai a non-profitable institution through the poetries to develop Tamil Language. He was fully in charge of that Kavimaalai for eight years and developed and made it as one amongst the best institutions in Singapore Tamils. Whatever his thinking and execute anything in a different style, all the Tamils are calling him as “Puthumaitheni“ He is not only a writer but also a platform speaker. Above all he is a grassroot social reformer.