அனுபவத்தின் குரல்
" முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்" .
-என்பது வள்ளுவரின் வாக்கு . இக்குறள் என் வாழ்வின் ஒரு பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய அந்நிகழ்வை உங்களிடம் பகிர விரும்புகிறேன் .நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதல் பருவத் தேர்வு நடந்தது . அப்போது எனக்கு அனைத்து பாடங்களும் கடினமாகத் தோன்றின. ஏனென்றால் எட்டாம் வகுப்பில் படித்த பாடத்திற்கும் ஒன்பதாம் வகுப்பில் படித்த பாடத்திற்கும் நிறைய வேறுபாடு இருந்தன. காரணம் அப்பொழுது தான் புதிய பாடத் திட்டம் அறிமுகமானது . அதனால் நான் அனைத்துப் பாடங்களையும் கடினமாக உணர்ந்தேன். குறிப்பாக கணிதப் பாடம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.அதனால் முதல் பருவத்தேர்வில் கணிதப் பாடத்தில் தோல்வி அடைந்தேன். நான் மிகவும் மனம் நொந்து வருந்தினேன். அப்போது என் பெற்றோர் அரவணைத்து எனக்கு ஆறுதல் கூறினர். எனது பெற்றோர் மட்டுமின்றி எனது ஆசிரியர்களும் ,தலைமை ஆசிரியரும் என்னை ஊக்கப்படுத்தினர். அதுமட்டுமின்றி தினமும் மாலையில் என்னைப்போல் உள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியர் பாடத்தை மீண்டும் சொல்லிக்கொடுத்தார் . அதனால் எனக்கு கணிதப் பாடம் பிடித்துவிட்டது. இவர்கள் அனைவரின் ஆதரவால் தான் ஒன்பதாம் வகுப்பில் இறுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றேன் . இவை அனைத்திற்கும் எனது முயற்சியும், எனது ஆசிரியர்களும் பெற்றோரும் தந்த ஆதரவே காரணமாகும்.
" முயற்சி திருவினையாக்கும்" " முயன்றால் சாதிக்க முடியும் "
என்பது என் வாழ்வில் உண்மையானது. என்னைப் போன்ற மாணவர்கள் கடினமானது என்று எதையும் எண்ணிவிடாமல் முயற்சி செய்து வெற்றிபெறுங்கள். நன்றி!