எளிமை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் கக்கன். அடக்கத்தின் மறு பெயர் .கக்கன். தமிழ்நாட்டு அமைச்சரவையில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர். சொந்தமாக ஒரு கார்கூட இல்லாதவர். வெளி இடங்களுக்குப் போக பேருந்துப் பயணத்தையே நம்பியிருந்தவர், இப்படியெல்லாம் இவரைப்பற்றி மக்கள் சொல்லியும் எழுதியும் வந்ததை நாம் அறிவோம். அந்த எளிய மனிதரை இந்த மாதக் கட்டுரையில் பார்ப்போம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தும்பைப்பட்டி எனும் ஊரில் பூசாரி கக்கன், பெரும்பி அம்மாள் ஆகியோரின் மகனாக 1909ஆம் வருஷம் ஜூன் 18இல் பிறந்தவர் கக்கன். இந்த பூசாரி கக்கன் நகர சுத்தித் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வாழ்ந்தவர். இளமைக் கல்வி மேலூரிலும், பின்னர் வறுமை காரணமாக திருமங்கலத்தையடுத்த காகாதிராய நாடார் உயர் நிலைப் பள்ளியில், விடுதியில் தங்கி படித்தார். பின்னர் பசுமலையில் இருந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் படித்து முடித்தார்.
ஆசிரியர் பயிற்சி முடித்ததும் ஹரிஜனங்கள் வாழும் சேரிகளுக்குச் சென்று அங்குள்ள பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி கற்பித்தார். இவரது ஹரிஜன சேவையைக் கேள்விப்பட்டு, மதுரையில் ஹரிஜன சேவையில் முன்னிலையில் இருந்த மதுரை ஏ.வைத்தியநாத அய்யர் இவரை அழைத்துப் பாராட்டித் தம்முடன் சேர்த்துக் கொண்டார். மதுரை ஏ.வி.அவர்கள் கக்கனை மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்வித்தார். அவரது ஹரிஜன சேவையை மகாத்மாவும் பாராட்டி வாழ்த்தினார். மதுரை ஏ.வி.ஐயர் வீட்டில் எடுபிடி வேலை முதல், சமையலறை வரை எல்லா நிர்வாகமும் கக்கன் செய்து வந்தார். ஏ.வி.ஐயரின் மனைவு அகிலாண்டத்தம்மாளும் தேச சேவையில் ஈடுபட்டு சிறை சென்றதால் கக்கன் நிர்வாகத்தைக் கவனித்தார். நாட்டு சேவையில் மட்டுமே இவருக்கு நாட்டம் இருந்த காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். எனினும் பெரியோர்கள் நிர்ப்பந்தப்படுத்தி 1938 செப்டம்பர் 6இல் எளிய திருமணம் செய்து கொண்டார். மனைவி சிவகங்கையைச் சேர்ந்த சொர்ணபார்வதி.
1937இல் நடந்த சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜாஜி பிரதமர் (முதல்வர்) ஆனார். இந்த அரசு 15-7-1937 முதல் 29-10-1939 வரை இருந்தது. இந்த குறுகிய காலகட்டத்தைல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் ஏராளம் ஏராளம். அவ்வளவுக்கும் ராஜாஜியே காரணம் என்பதை உலகம் அறியும். அதில் முதல்படி, ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம். இதனை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தலைமை ஏற்று நடத்தியவர் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர். அவருக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் கக்கன். இந்த ஆலயப் பிரவேசத்தில் கக்கனோடு பங்குகொண்ட மற்ற ஹரிஜன காங்கிரஸ் தலைவர்கள் சாமி.முருகானந்தம், முத்து, வி.எஸ்.சின்னையா, வி.ஆர்.பூவலிங்கம் ஆகியோராவர். இவர்களோடு ஆலயப்பிரவேசம் செய்தவர் எஸ்.எஸ்.சண்முக நாடார் என்பவர். இந்த இரத்தக் களறி இல்லாத போரை நடத்த கக்கனும் உதவியாக இருந்தார்.
1942ஆம் ஆண்டில் நடந்த பம்பாய் காங்கிரசை அடுத்து, 'வெள்ளையனே வெளியேறு' எனும் ஆகஸ்ட் புரட்சியின்போது கக்கன் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறையில் ஒன்றரையாண்டு காலம் வைக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் தேசபக்தர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், சிறைக்குள்ளே கடுமையாக அடித்தும் நொறுக்கினர். இந்தத் தாக்குதலுக்கு மிகப் பெரிய தலைவர்கள்கூட தப்பவில்லை. ராஜாஜியைக்கூட அப்போதைய ஆங்கில ஜெயிலர் அவமதித்த செய்திகள் உண்டு. கக்கனை கம்பத்தில் கட்டிவைத்து கசையடி கொடுத்தனர். தன் உடலில் விழுந்த ஒவ்வொரு அடிக்கும் கக்கன் "மகாத்மா காந்திக்கு ஜே" "காமராஜுக்கு ஜே" "ராஜாஜிக்கு ஜே" என்றுதான் கோஷமிட்டாரே தவிர அடிக்கு பணிந்து போகவில்லை. இவரது இந்த வீரச் செயல் காமராஜரையும் கவர்ந்து விட்டதால் காங்கிரசில் கக்கனுக்கு உரிய மரியாதையும் இடமும் கொடுத்தார். 1955இல் ஆவடி காங்கிரஸ் நடந்தபோது தமிழ்நாடு காங்கிரசுக்கு கக்கன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
In 1946, he was elected to the Constituent Assembly.[3] and served from 1946 to 1950.
Kakkan, , served as a member of the Lok Sabha from 1952 to 1957.
When K. Kamaraj resigned as the President of the Tamil Nadu Congress Committee to take office as the Chief Minister of Tamil Nadu, Kakkan was elected as the President of the Tamil Nadu Congress Committee. He also held various ministerial posts in the State Cabinet.
இவர் 1952 தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்.
அடுத்து 1957இல் சென்னை சட்டசபைக்கு மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது காமராஜ் தலைமையில் உருவான அமைச்சரவையில் கக்கன் அமைச்சராகி, ஹரிஜனநலம், வேளாண்மை, பொதுப்பணி, உணவு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்றார். முழுமையாக ஐந்தாண்டுகள் திறம்பட நிர்வகித்தார். 1962இல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சர் ஆகி, காமராஜ் முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப்பணிக்குச் சென்றபோது, எம்.பக்தவத்ஸலம் முதல்வரான போதும், இவர் அமைச்சர் ஆனார். இம்முறையும் பல துறைகளிலும் இவரது திறமையும் நேர்மையும், எளிமையும் வெளிப்பட்டது. மக்கள் நலன் ஒன்றுதான் இவரது நோக்கமாக இருந்தது. சுயநலம் என்பது ஒரு ஊசிமுனை அளவுகூட இவரிடம் இருந்தது இல்லை.
ஐந்தாண்டு நாடாளுமன்ற பதவி, ஒன்பது ஆண்டுகள் அமைச்சர் பதவி இவ்வளவும் வகித்தும் கரை படியாத கரமுடையார் என்று மக்களால் போற்றப்பட்டார். காங்கிரஸ், காந்தியடிகள், காமராஜ் ஆகிய மூன்று "கா" மட்டுமே இவர் எண்ணத்தில் கடவுளாக இருந்தன. இம்மூன்றும்தான் ஹரிஜனங்களை முன்னேற்றியது என்பது இவரது அசைக்கமுடியாத கருத்து. 1975இல் காமராஜ் மறைவுக்குப் பிறகு இவர் அரசியலில் இருந்து விலகிவிட்டார். தன் தனி வாழ்வுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட இவர் விரும்பவில்லை.
1967இல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு 1970 வரை இவர் சென்னை ராயப்பேட்டையில் கிருஷ்ணாபுரம் எனுமிடத்தில் மாதம் ரூ.110 வாடகையில் குடியிருந்தார். 1971இல் தி.நகர், சி.ஐ.டி. நகர் அரசு குடியிருப்புக்கு மாறினார். அந்த காலகட்டத்தில் இவரது பயணம் அனைத்தும் நகரப் பேருந்துகளில்தான். நாலு முழ கதர் வேட்டி, எளிய கதர் சட்டை, ஒரு கதர் துண்டு இவைதான் இவரது உடை. 26-1-1979 குடியரசு தினத்தை யொட்டி இவருக்கு இலவச வீடு, பேருந்துப் பயணத்துக்கு இலவச பாஸ், இலவச மருத்துவச் சலுகை தவிர மாதம் ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் ஆகியவை அப்போதைய அரசால் வழங்கப்பட்டது. 28-12-1981ஆம் ஆண்டு இந்தத் தியாகச் சுடர் அணைந்தது. வாழ்க கக்கன் புகழ்!