ஏற்றம் :
உழுதொழிலின் தொடக்கமாக ஏற்றம் இறைத்தல் காணப்படுகிறது. ஏற்றம் இறைத்தலின்மூன்று வகைகளை வழக்கத்தில் கொண்டுள்ளனர். (1) கவலை ஏற்றம் (2) ஆளேறும் ஏற்றம்(3) பரி ஏற்றம். ஏற்றம் இறைக்கும்போது பாடல் பாடும் பழக்கமும் இருந்தது என்பதை,
“ஏழை எல்லாம் கூடி
ஏத்திறைப்போம் வாங்க
பஞ்சை எல்லாம் கூடி
பரி இறைப்போம் வாங்க”
- என்று பரியேற்றப்பாடல் துறையூர் வட்டத்தில் காண முடிகின்றது.
மழைக்குரிய பயிரிடுதல் :
கிராமங்களில் வானம் வழங்கும் நீரின் அளவிற்கேற்பப் பயிரிடும் வழக்கம் இருந்துவருகிறது. மழையின் அளவைப் பொறுத்து அதற்குரிய பயிர் விளையச் செய்கின்றனர்.நாள்தோறும் மழை பொழிந்தால் நெல்லைப் பயிரிடுவர். விட்டுவிட்டு மழைப் பொழிந்தால்சோளத்தை பயிர் செய்வர். கம்பி போன்று மழை பொழிந்தால் கம்பு பயிரிடுவர்.
“நித்தம் மழை பேஞ்சா
நம்ம நெல்லு பயிரேறும்
சோனை மழை பேஞ்சா
நம்ம சோளம் பயிரேறும்
கம்பி மழை பேஞ்சா
அங்கே கம்பு பயிரேறும்”
- என்று முசிறிவட்ட வழக்கு பாடல்கள் சித்திரிக்கின்றன.
குலவைப்பாட்டு :
வயலில் இறங்கி வேலை செய்யும் போதும், நாற்று நடும்போதும், அறுவடையின் போதும்குலவைப்பாடல் பாடுவது வழக்கம். குலவ ஒலி பெண்கள் உதடுகளைக் குவித்து நாவினார்உரசி ஒருவகை ஒலியைக் குரலில் கொடுப்பர். இவ்வொலி கேட்பதற்கு மிகவும்இனிமையாக இருக்கும்.
“எஞ்சோட்டுப் பெண்டுகளா
எடுத்துக் குலவ போடுங்கடி”
- என்று இரண்டு வரிகள் பாடியதும் மற்ற பெண்கள் குலவை இடுவர்.
உழத்தியர்களை உபசரித்தல் :
வித்துக்கள் நாற்றுகளாய் வளர்ந்த நிலையில் நாற்றுகளைப் பறித்து வரிசைப்படுத்தி நடுவர்.இப்பணிக்காகப் பெண்கள் மட்டுமே வருவர். நாற்று நடலின் முதல்நாள் அனைவருக்கும்உணவளிப்பர், பூவும், குங்குமமும் கொடுப்பார்கள். நடவுப்பணி மகிழ்வுடனும்செம்மையாகவும் நடைபெற இவ்வாறு உபசரிக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
“ஏலேலம்மா ஏலம்
ஏலோலங்கிடி ஏலம்
ஓல்த்தூ பண்ணை
எங்க நல்ல பண்ணை
நாத்து நட போவேருக்கு
சோறு போடும் பண்ணை
பூவும் பொட்டும் பணமும்
அள்ளிதரும் பண்ணை”
உழத்தியரை உபசரிப்பதோடு பண்ணையாரையும் பாராட்டுகின்ற பண்பு கிராம மக்களிடம்இருந்தது என்பதும் புலனாகிறது.
விலங்கினம் கொண்டு தாள் அடித்தல் :
அறுவடை செய்தலின் போரடிப்பர். போரடிப்பதற்கு மாடும், யானையும், பயன்படுத்தப்பட்டவழக்கம் பழங்காலத்திலேயே இருந்துள்ளது. இவ்வழக்கம் இன்றும் கிராம மக்களிடம்காணப்படுகிறது.
“மாடு கட்டி தாளடிக்க
மவராசன் பண்ணையிலே
கண்ணு கட்டி தாளடிக்க
காராழன் பண்ணையிலே
ஆனைகட்டி தாளடிக்க
ஆறுமாசம் செல்லும்
மாடுகட்டி தாளடிக்க
மறுவருசம் செல்லும்
குதிரை கட்டி தாளடிக்க
கோடிநாள் செல்லும்”
-என்று நாட்டின் வளத்தை அறியும் முகமாக விலங்கினங்களைப் போரடிக்க பயன்படுத்திவந்தமையை அறியலாம்.