உழுவதற்கு முன் நிலத்தை பேணுதல் :
உழவர்களுக்கு நிலமும் நீரும் வாழ்வின் முதலீடுகளாகும். நிலத்தைத் தன் உயிரினும்மேலாகக் கருதினர். வயலை நாள்தோறும் பேணிக் காக்க தவறினால் ஏற்பட்ட இடர்பாட்டைவள்ளுவர் கூறுகையில்,
“செல்லான் கிழவ னிருப்புனிலம் புலன்ந்
தில்லாளி னூடி விடும்” (குறள்: 1039)
- என்று படம்பிடித்துக் காட்டுகிறார். ”நாட்டையாளுகின்ற மன்னனும் நிலத்தைப் போற்றும்உழவனைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற குறிப்பும் மறைமுகமாகஉணர்த்தப்படுவதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். இக்கருத்தை அரண் செய்யும்வகையில் மண்ணின் மகத்துவத்தை,
“காணி அலங்கார மாம்
காணி காலு சிங்காரமாம்
காணி சுத்தி இருக்கும்
வரப்புகளும் ஒய்யாரமாம்”
- என்று குளித்தலை வட்டார வழக்குப் பாடல்கள் புலப்படுகின்றன.
மாட்டின் நலம் காக்க வேண்டுதல் :
நாட்டுப்புற மக்கள் உழவுத் தொழில் தொடங்குவதற்கு முன் தங்களின் வாழ்விற்காகத்தன்னையே அர்ப்பணிக்கும் மாடுகளின் நலத்திற்கு இறைஞ்சுகின்ற வழக்கம்காணப்படுகிறது. தங்களோடு சேர்ந்து வாழ்ந்து மரணமடையும் மாடுகளைத் தங்களின்உறவாகக் கருதி அவற்றிற்கு உழவுத்தொழில் நடைபெறும்போது துன்பம் வந்திடாதிருக்கஇறைவனிடம் வேண்டுகின்றனர். ”காக்கை குருவிகள் எங்கள் சாதி” என்று இந்நூற்றாண்டில்எண்ணுவதற்கு முன்பே நாட்டுமக்கள் மாடுகளைத் தமது உறவாகக் கொண்டு பழகியமைகாணப்படுகிறது.
“பூட்டின மாட்டுக்கு
பிழைமேலும் வாராமல்
கட்டின மாட்டுக்குக்
கலகம் வந்து சேராமல்
காரும் கணபதியே”
- எனும் வேண்டலிலிருந்து அறிய முடிகின்றது.
மழை வேண்டல் :
உழவர்கள் பயிர்வளர, விளைச்சல் பெருக மழையைப் பெரிதும் எதிர்நோக்குவர், நீரின்றிப்போனால் மனிதனுக்கு வாழ்வின்றிப் போகும். நாட்டில் வளம் குன்றிப்போகும். இந்தஏக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்,
“இருபதியா லெட்டால் இன்னைக்கு
இருட்டாதோ மானம்
இருட்டாதோ மானம் – அந்த
பிரட்டாசி மாசம்
பிரட்டாசி மாசம் – அங்கே
பேயாதோ மானம்
பேயாதோ மானம் – இன்னிக்கு
பெருகாதோ ஏரி”- என்ற புரட்டாசி மாதத்தில் மழை எதிர்பார்த்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மழை சோறு உண்ணல் :
வேளாண் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது மழை. மழையைக் குறித்துப்பலவிதமான நம்பிக்கைகள் காணப்பெறுகின்றன. கிராம மக்களிடம் மழைபொழியமழைச்சோறு உண்ணும் பழக்கம் காணப்படுகிறது. பருவமழை பெய்யாது பொய்த்துவிட்டால் வருணபகவானிடம் வேண்டுதலும் வழிபாடும் நடத்துவர்.
மழை பொய்த்த காலத்தில் பெண்கள் வீடுவீடாகச் சென்று அரிசி, கம்பு, சோளம், கேழ்வரகுமுதலியவற்றைப் பெற்று ஒன்றாகச் சேர்ததுச் சமைத்து உப்பிடாது உண்பர். இதனைமழைச்சோறு என்றும் குறிப்பிடுவர். எல்லோரும் உண்டபின் பெண்கள் தங்கள்குழந்தைகளுடன் பரதேசம் போவதாகப் பாவனை செய்வர். வயது முதிர்ந்த பெண்கள்மாரடித்துக் கெண்டு இடுகாட்டை நோக்கிப் பாடிக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்தால்மழை பொழியும் என்னும் நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்பதைநினைவூட்டும் வகையில்,
“வருண பகவானே
உரிய மழை பெய்யவேணும்
மழை பெய்யலையே
மானமே போகுதடி
என்சோட்டு பெண்டுகளே
விரதங்கொள வாருங்கடி
மழைச்சோறு ஆக்கி
மனசாரக் குடிச்ச பின்னே
இடுகாட்டை பார்த்து
மாரடிச்சுப் போவோமடி
மனமிரங்கி மழைமேகம்
மழை பெய்ய வேணுமடி”
- என்று பெரம்பலூர் வட்டப் பாடல் அமைந்துள்ளது.