“கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும். கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார். அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்”