சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன.
வட்டக் கெண்டை, பால் கெண்டை, பாம்புக் கெண்டை, கூனக் கெண்டை, விளிச்சிக் கெண்டை, அயிரை, நரிக் கெழுறு, மஞ்சக் கெழுறு, ஆரா, உளுவை, விலாங்கு, விரால், குரவை என்று பல வகை உண்டு.
மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.
வேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக 'ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை.
மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே போதும்.