இவ்வூரில் வரலாற்றுச் சிறப்பு வாயந்த மூன்று சின்னங்கள் உள்ளன.
1. முருகன் கோயில்
2. சமணர் பள்ளி
3. வெட்டுவான் கோயில்
மலையின் பெயர்: பழம்பெயர்: அரைமலை. இன்றைய பெயர்: கழுகுமலை
ஊர் பெயர்: பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.
நாட்டுப்பிரிவு: இராஜ இராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு நெச்சுற நாட்டு நெச்சுறம்.
ஊரில் குறிக்கப்பட்ட்டுள்ள அரசர்கள்:
1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகநெடுஞ்சடையன்)
2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்)
3. சுந்தரசோழ பாண்டியன்
இவ்வூரில் மங்கல ஏனாதி என்னும் தானைத் தலைவர் இருந்தார். அவருடைய இருசேவகர்கள் பாண்டியன் மாறஞ்சடையன் ஆய்மன்னன் கருநந்தன் மீது படையெடுத்த போது பாண்டியனுக்காக சென்று அருவி ஊர் கோட்டை அழித்து போரில் இறந்தனர். அவர்களுக்காக நிலம் அளித்ததை குசக்குடி தெரு கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ளது. மேலும் திருமலை வீரர், பராந்தக வீரர், பராந்தக வீரர் என்னும் பெயர் பெற்ற படைகள் பாண்டியன் பராந்தக வீரநாரயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தன. வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன.
ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளது போல கழுமலையில் சமணர் பள்ளியும் முக்கியாமான ஒன்று. அதைக் குறித்தான புகைப்படம் கீழே உள்ளது.
அதில் உள்ள செய்தி இதுதான:
இங்குள்ள சமணச் சிற்பங்கள் யாரால் செய்யப்பட்டன என்று இங்குள்ள என்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. மலையில் சிறப்பாக வழிபாடு பெற்ற சமணர் தெய்வத்துக்கு 'அரைமலை ஆழ்வார்' என்றும் 'மலைமேல் திருமலைத் தேவர்' என்றும், இருந்தது. இதனருகில் பலர் சமணர் உருவங்களை செய்திருக்கிருக்கிறார்கள். கோட்டாறு, மிழலூர், வெண்பைக் குடி முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இறந்து போன குடவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமணத் துறவிகள் குரவர்கள் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண்ணாக இருப்பின் மாணாத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர். எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப்பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளாண், குயவர், கொல்லர், முதலிய பல தொழில் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல 'வயிராக்கியர்'களும் இங்கு வாழ்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி 768 - 800 ) தோற்றுவிக்கப்பட்டவை.
தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்று. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுற்ற முடியாது. ஏனெனில் சாமியை குகைச் சுவற்றில் செதுக்கீருப்பார்கள். எனவே சுற்ற விரும்பினால் முழு மலையையும் சுற்ற வேண்டும். எனவே கழுகுமலையில் பக்தர்கள் மலைவலம் வருவது வழக்கம். வழக்கமாக அனைத்து முருகன் கோயில்களிலும், மயில் மேல் அமர்ந்த முருகன் வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பி இருக்கும். ஆனால் இங்கு கழுகுமலையில் இடப்பக்கமாக திரும்பி இருக்கும்.
தமிழ்நாட்டில் பெரிய கோயில்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அறநிலையத்துறை உடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. சில பழைய கோயில்கள்தான் தனியார் வசம் இருக்குகிறது. கழுகுமலையும் அதில் ஒன்று. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. அண்ணாமலை ரெட்டியார் கழுகுமலை முருகப்பெருமான் குறித்து 'காவடிச் சிந்து' பாடியுள்ளார்.
இவ்வூருக்கு தென்பழனி, சம்பாதி க்ஷத்திரம், கஜமுகபர்வதம், கழுகாசலம், உவனகிரி என்று பலபெயர்கள் உள்ளன. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணகதை சொல்லப்படுகிறது.
பாண்டியநாட்டிலுள்ள 'பழங்கோட்டை' என்ற பகுதியை தலைநகரமாகக் கொண்டு அதிமதுர பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனையின் அருகே உவனவனம் என்ற கானகம் இருந்தது. அக்கானகத்தி 300 அடி உயரத்தில் உவனகிரி என்ற மலை கம்பீரமாகக் காட்சியளித்தது. மன்னன் அதிமதுர பாண்டியன் ஒருநாள் காட்டிற்குள் வேட்டையாட சென்றான். வேட்டையாடி மிகவும் களைத்துப் போன மன்னன், அங்குள்ள ஒரு வேப்பமரத்தினடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான். அப்போது பசு ஒன்று அங்குள்ள ஒரு பாறை மீது பால் சுரந்து கொண்டிருப்பதை கண்ட மன்னன் ஆச்சர்யமடைந்தான். அதே நேரத்தில் மணியோசை ஒலி கேட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன் ஆச்சர்யத்துடன் அந்தப் பாறையை நோக்கி ஓடினான். அவன் வருவதை கண்ட பசு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது. அதே நேரத்தில் அதுவரை கேட்டுக்கொண்டிருந்த மணியோசையும் நின்றது. மன்னனும் அரண்மனைக்கு திரும்பினான்.
அன்று இரவு இரு முருகனடியார்கள் கனவில் முருகன் தோன்றினார். அவர்களிடம் காட்டில் நடந்த நிகழ்ச்சிகளை கூறிய இறைவன் அந்த முருகனடியார்களிடம், மன்னன் அதிமதுர பாண்டியனிடம் சென்று பசு பால் சுரந்த இடத்தில் ஒரு கோயில் கட்டதான் விரும்புவதாக தெரிவிக்குமாறு கூறி கனவிலிருந்து மறைந்தார். முருகன் கனவில் கூறியதை அடியார்கள் மன்னனிடம் தெரிவிக்க, மன்னன், கானகத்துக்கு விரைந்தான். பசு பால் சொரிந்த பாறையைத் தோண்டினான். அங்கு ஒரு குகை புதைந்து கிடந்தது. அந்த குகையில் மயில்வாகனத்தின் மீதமர்ந்த குமரப்பெருமானின் திருவுருவம் கிடைத்தது. மன்னன் மகிழ்ச்சியடைந்தான். அந்த கானகத்தை நகரமாக மாற்றிய மன்னன் அந்த கானத்திற்கு கழுகுமலை என்று பெயரிட்டான். அங்கு முருகபெருமானுக்கு அழகிய கோயிலெழுப்பி, அதில் குகையில் கிடைத்த உருவத்தைப் பிரதிஷ்டை செய்தான். கர்ணபரம்பரைக் கதையில் இக்கோயிலைப் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கதை:
சீதையை ராவணன் தூக்கி சென்ற போது கண்ட ஜடாயு அவனுடன் போராடி தன் உயிரை விட்டான் என்ற செய்தியைக் கேட்ட ராமர் மிகவும் துயருற்றதாகவும், தன் தந்தைப் போல் தன் மேல் பரிவுகாட்டிய ஜடாயுவுக்கு¡ன ஈமக்கடன்களை ராமரே செய்ததாகவும் கூறப்படுகிறது. ராமரின் இச்செயல்களை வானரர்கள் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரரான சம்பாதி மனம் வருந்தி ராமரிடம், சகோதரனின் ஈமக்கிரியைகளைக்கூடச் செய்ய முடியாமல் போனதால் தன்னைச் சண்டாளத்துவம் வந்தடைந்ததாகவும், தான் மீண்டும் பழைய நிலையையடைய வழிகாட்டுமாறு வேண்டினான். உடனே ராமர் அவனிடம் தெற்கேயுள்ள கஜமுக பர்வதத்திற்கு அருகிலுள்ள ஆம்பல் நதியில் நீராடி, அம்மலையில் குடிகொண்டுள்ள முருகப் பெருமானைப் வணங்கினால் சண்டாளத்துவம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறே செய்த சம்பாதியின் சண்டாளத்துவம் நீங்கியது. ஆக சம்பாதி என்ற கழுகரசன் தவம்புரிந்த இடமானதால் இத்தலம் கழுகுமலை என்று பெயர் பெற்றது.
© 2007-2009 www.kalugumalai.com, last updated March 12, 2009