முக்கிய இடங்கள்  

English 

 கழுகுமலைக்கு வருபவர்கள் நிச்சயம் பார்த்துச் செல்ல வேண்டிய இடங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் சார்ந்த வரலாறு மற்றும் புராண, செவி வழிக் கதைகள் 'வரலாறு' என்ற பக்கத்தில் அமையப் பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு இடமாக விரிவாகப் பார்க்கலாம்.

வெட்டுவான் கோயில்

 

சமணர் பள்ளி 

 

முருகன் கோயில்

கழுகுமலையிலுள்ள கற்பாறையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடைவரைக் கோயிலாகும்.இக்கோயிலுக்கு விமானமோ, சுற்றுப் பிரகாரமோ இல்லை. சுமார் 300 அடி உயரமும், 36 அடி நீளமும் உள்ள மலையைச் சுற்றிக் கரிவலம் மட்டுமே வரமுடியும். மலையைக் குடைந்து கருவறையும், அர்த்த மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையில் வீற்றிருக்கும் கந்தப்பெருமான் கழுகாசல மூர்த்தி என அழைக்கப்படுகிறார். இவரின் திருவுருவம் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு. ஒரு தலையுடனும், ஆறு கைகளுடனும் அபூர்வமாகத் தோற்றம் கொண்டுள்ள இப்பெருமான் மயிலுடன் காட்சியளிக்கிறார். பின் இடக்கைகள் இரண்டில் கேடயம், வச்சிரம் ஆகிய ஆயுதங்கள் மிளிர்கின்றன. பின் வலக்கரங்கள் இரண்டில் சக்தியாயுதமும், கத்தியும் உள்ளன.

பழனியில் உள்ளது போலவே முருகப்பெருமானின் சன்னதி இங்கும் மேற்குமுகமாக அமைந்திருப்பதால் இத்தலத்தினை தென்பழனி என்று அழைப்பதாக சொல்லப்படுகிறது.

முன் வலக்கரம் ஒன்று அபயமுத்திரையையும், பின் இடது கரம் ஒன்று வரதமுத்திரையையும் அளிக்கின்றன. திருசெந்தூரில் உள்ளது போல் இங்கு இலை விபூதி பிரசாதம் கொடுக்கப்படுகிறது. முருகனின் வல, இடப்பக்கங்களில் வள்ளி, தெய்வயானை இடம் பெற்றுள்ளனர். முருகனின் வாகனமான மயில் வலது புறத்தில் காணப்படாமல், இடது புறத்தில் காணப்படுவது இங்கு விசேஷம். தாருகாசுரனை வதம் செய்வதற்காகவே குமரப் பெருமான் இப்படி தோற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் இராஜபோகமாக முருகன் காட்சியளிப்பது சிறப்பு ஆகும்.

இங்கு மலையோரமாக அமைந்துள்ள தடாகம் ஆம்பல் நதி எனப்படும் புண்ணிய தீர்த்தமாகும். இதனருகேயுள்ள 'வள்ளி சுனை' என்ற நீர் ஊற்றில் நீர் வற்றியதே இல்லை என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்கு அருகே 'குமார தெப்பம்' என்ற அழகிய தெப்பம் உண்டு. அப்ரேக் என்ற உலோக சக்தி இந்நீரில் உள்ளதால் இந்நீர் மருத்துவத் தன்மை பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.

மகாமண்டபத்தின் இருபுறங்களிலும் கலையழகு மிக்க துவாரபாலகர்கள் உள்ளனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள் வாளி, சுக்ரீவன் யுத்தக் காட்சி காணத்தக்கது. இராமர், கோபாலகிருஷ்ணர் ஆகிய திருவுருவங்களும் உள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழில் கழுகாசல மூர்த்தி பற்றி பாடல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் சங்கீத மும்மணிகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதரும் இவ்விடத்தில்தான் சுத்த தன்னியாசி ராகத்தில் அமைந்துள்ள 'கங்கைசல' என்ற கீர்த்தனையை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கோயில் காலை 6 முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும். இக்கோயிலில் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.

ஐப்பசி கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவற்றை ஒட்டி இங்கு கூடும் மாட்டுத்தாவணி தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்றது.

காவடி எடுத்தல், முடி இறக்குதல், திருமணம் ஆகியவைகள் இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றன. கழுகுமலை கந்தனை காணாத கண்கள் என்ன கண்கள் என்கிற பெருமையை பெறற இத்திருத்தலத்திற்கு பக்தர்கள் அதிகம் வருவதும், தங்கள் மனக்குறைகளை தீர்த்து நல்வாழ்வு வைப்பான் முருகன் என்ற எண்ணம் பக்தர்களிடம் அதிகம் நிலவுவதும் இங்கு காணும் காட்சி.

© 2007-2008  www.kalugumalai.com,  last updated January 05, 2008