தமிழகத்தின் தெற்கே கோவில்பட்டியிலிருந்து சுமார் 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கழுகுமலை என்கிற சிற்றூர். இவ்வூர் சங்கரன்கோயிலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் புகழ்பெற்ற கழுகாசலமூர்த்தி திருக்கோவில் அமையப் பெற்றுள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலாலும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தாலும் கழுகுமலை சிறப்பு பெற்றுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு அடுத்த பெரும் பேறு பெறுவது கழுகுமலை என்றால மிகையல்ல. தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தளமும் ஆகும்.
திருக்கழுகாசல மூர்த்தி திருக்கோவிலைத் தவிர்த்து பல சிறப்பு பெற்ற பிற கோவில்களும் உள. பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சேர்ந்த 'தூய லூர்து அன்னை ஆலயம்' ஒன்று உள்ளது. இத்திருக்கோயிலின் கோபுரமானது பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் திருக்கோயிலின் வடிவில் கட்டப்பட்டுள்ளது.
கழுகுமலையில் உள்ள அரைமலையில் கி.பி 7 மற்றும் 8 நூற்றாண்டைச் சார்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சமண சமயத்தைச் சார்ந்த தீர்த்தங்காரர்களின் கல்வெட்டுச் சிற்பங்கள் பொலிவுற கல்வெட்டில் அமைக்கப்பட்டுள்ளன. 'வெட்டுவான் கோயில்' என்றழைக்கப்படும் கல்வெட்டில் பாறையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கோயிலானது கல்லில் அமைந்த கலைப்பெட்டகம். ஜைனவர்களின் ஜெயின் குடவரைக் கோயிலுக்கும், அவர்களது கட்டடக் கலைக்கு சான்று பகரும் வண்ணமாய் இக்கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. மலையினைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்களும், அவற்றை ஒட்டிய வயல் வெளியும் காண்போரைக் கவரும்.
தீப்பெட்டி தொழிற்சாலை, பருத்தி, கடலை தொழிற்சாலைகள் கழுகுமலையில் பிரசித்தி பெற்றவை.
கழுகுமலைக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த இணைய தளத்தில், கழுகுமலை குறித்த பல்வேறு தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நகரின் மற்றும் சிற்பங்களின் அழகிய புகைப்படங்கள் ஒளிக் கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளது.
© 2007-2008 www.kalugumalai.com, last updated January 05, 2008