Madurai Days in Tamil
ஏதேதோ எழுதவேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு. ஆனால் எழுதுவதுதான் இல்லை. திரும்பிப்பார்ப்பதற்குள் பலப்பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவ்வாறு ஓடும்போது என்னுடைய நினைவுகள் பலவும் அவற்றோடு ஓடிவிட்டது போல் தோன்றுகிறது. ஏனென்றால் என்னால் பல விஷயங்களை நினைவு படுத்திப்பார்க்க இயலவில்லை. சமீபத்தில் பிரபாகர் மிக அழகாக ஒரு சிறிய எண்ண ஓட்டத்தை எழுதியிருந்தான். அவ்வாறு என்னால் யோசிக்கக்கூட இயலவில்லை.
எனக்கு மூன்றரை வயது இருக்கும். இது மோகன் என்னிடம் கூறியது. அப்பொழுது குஞ்சம்மாள் டீச்சர் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் என்னை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டார்களாம். என் அம்மாவோ எனக்கு வயது ஐந்து ஆகவில்லை என்று கூறினார்களாம். ஆனால் டீச்சரோ பரவாயில்லை அனுப்புங்கள் என்று கூற என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள். முதல் நாள் பள்ளிக்குச்செல்ல என்னை என் அம்மா கூட்டிக்கொடு போய் வகுப்பில் உட்காரவைக்க நான் பெரிதாக அழுதேனாம். ஏன் என்று கேட்க எனக்கு அந்த டீச்சரைப்பிடிக்கவில்லை என்று கூறினேனாம். உடனே என்னை அடுத்த டீச்சரிடம் அனுப்பிவைத்தார்களாம். அவ்வாறு தான் என்னுடைய கல்விப்பயணம் ஆரம்பமாயிற்று. இது தவிர இன்னொன்றும் என் நினைவில் உள்ளது. தி வி எஸ் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் நான் என் தகப்பனாரின் மடியில் உட்கார்ந்து இருக்க, என் கையைப்பிடித்து அகரத்தை தாம்பாளத்தில் இருந்த அரிசியில் எழுதியதும் என் நினைவில் பசுமையாக உள்ளது. அது விஜயதசமி என்று கூட ஞாபகம் இருக்கிறது. என் தந்தையைப்பற்றிய எனக்கு நினைவில் உள்ள ஒரு சில சம்பவங்களில் இதுவும் ஒன்று.
குண்டு:
இந்த வார்த்தையைக்கேட்டாலே உங்களுக்கு ஒரு வடிவம் மனதில் வருகிறதல்லவா? அதற்க்கு நேர் எதிர்மாறாக ஒருவரை நினைத்துக்கொண்டால் அதுதான் குண்டு. அவருடைய உண்மையான பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றுதான் நினைக்கிறேன். தி வி எஸ் நகரில் குண்டு என்றால் எல்லோருக்கும் தெரியும் அந்தக்காலத்தில். எடுபிடி வேலைகள் ஏதாவது இருந்தால் குண்டுவைத்தான் பலரும் விளிப்பார்கள். என்னுடைய அப்பாவிற்கும் ஒரு தேவை இருந்தது, எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்டமான கல் இருந்தது, அது கொஞ்சம் கனமானது, அந்தக்கல் பழைய செப்டிக் டாங்க்கினுடைய மூடி. செப்டிக் டாங்க் இல்லாத காரணத்தினால் அது உபயோகமில்லாமல் இருந்தது, அதை வீட்டின் முன்புறம் கொண்டுவந்து ஒரு மேடை போல் அமைக்கவேண்டும் என்று என் அப்பா நினைத்திருந்தார். அந்தக்கல்லை அதற்காக வீட்டின் முன்புறம் கொண்டுவந்து போடத்தான் குண்டுவை அழைத்தார். குண்டுவும் 25 ரூபாய்க்கு அந்த வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டான். சரியான ரூபாய் கணக்கு எனக்கு ஞாபகம் இல்லை. 25 என்று வைத்துக்கொள்வோம். குண்டுவும் அந்தக்கல்லை உருட்டிக்கொண்டு வந்து வீட்டின் முன்புறம் வைத்தான். வைத்த பிறகு 50 வேண்டும் என்று கேட்க, என் தந்தையர் மறுக்க, விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. என் அப்பாவும் கொஞ்சம் அதிகம் தருவதாகச்சொன்னார். ஆனால் 50 க்குக்குறைவாக. ஆனால் குண்டுவோ 50 தான் வேண்டும் எனப்பிடிவாதம் பிடித்தான். ஒரு காலகட்டத்தில் 50 ரூபாய் தராவிட்டால் கல்லை மறுபடியும் பின்புறம் போட்டுவிடுவதாகாப்பி பயமுறுத்தினான். என் அப்பாவும் 50 ரூபாய் கொடுக்க விருப்பப்படவில்லை. குண்டுவோ அந்தக்கல்லை மறுபடியும் வீட்டின் பின்புறம் கொண்டுபோய் போட்டுவிட்டுப்போய் விட்டான். இதுதான் குண்டு. மெல்லிய கருப்பு நிறமான உடம்பு. தலையில் வேலை செய்யும்போது கட்டிக்கொள்ளும் முண்டாசுடன் தான் எனக்கு குண்டு நினைவுக்கு வருகிறான். அவன் இவன் என்று எழுதுவதைப்பற்றி தவறாக நினைக்க வேண்டாம். அச்சமயத்தில் அவ்வாறுதான் எல்லோரும் குண்டுவை அழைப்பார்கள். இந்த சம்பவத்தை நினைக்கும் பொழுதெல்லாம் சிரிப்பும் சோகமும் என்னை வந்தடையும். இப்பொழுது இருக்கும் வசதி அப்பொழுதில்லாமல் இருந்தது என் மனதை வாட்டுகிறது. அந்த சிறிய தொகை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கிறது. அதே சமயம் அப்பொழுது இருந்த மனத்தூய்மையோ மனநிம்மதியோ இப்பொழுது இல்லை. எப்பொழுதும் இருக்குமோ என்ற சந்தேகமும் வருகிறது. வசதிகள் பெறுக நிம்மதி குறைந்துகொண்டே போகிறது. இப்பொழுது இருக்கும் சௌகரியங்களை விட தாய் தந்தையர் இல்லையே என்ற வருத்தம் மனதை வாட்டுகிறது. நாம் சந்தோஷமாக இருந்த காலத்தை அவ்வாறே பிடித்து வைத்திருக்கக்கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.
என் எஸ்:
இந்தப்பெயரைக்கேட்டாலே ஒரு பயம் வரும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஓரிரு வருடங்களுக்கு இந்தப்பயம் எனக்கு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் எஸ் என்று - பிரியமுடன் என்று நான் எழுதினால் அது பொய்யாகத்தான் இருக்கும் - அழைக்கப்படும் என் சுந்தர ஸ்ரீநிவாசன் என்னும் கிளாஸ் டீச்சர் தான் அவர்.எனக்கு இரண்டு மூன்று வருடங்கள் பாடங்கள் நடத்தினார். பயங்கள் நடத்தினார் என்று எழுதுவதே சரியாக இருக்கும். பதினொன்றாவது சி பிரிவின் கிளாஸ் வாத்தியார் அவர்தான். மோகன் எனக்கு நன்றாகவே பயம் காட்டி வைத்திருந்தான். அதனால் எனக்கு எல்லோரையும் விட கொஞ்சம் ஜாஸ்தியே பயம். அது மட்டும் அல்ல. நான் சரியாகப்படிக்காத கூட்டத்தில் இருந்தேன் அப்போது. கூட்டத்தில் சேர்ந்ததால் நான் அவ்வாறு இருந்தேன் என்று கூற வரவில்லை. நான் சரியாகப்படிக்காத காரணத்தினால் படிக்காத கூட்டத்தில் ஒருவனாகச்சேர்க்கப்பட்டேன். அது எதற்கி இப்போது. முக்கிய கதாபாத்திரத்திற்கு வருவோம். அவருடைய பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை ஒரு தனி விதமாக இருக்கும். அப்படியென்றால் எனக்குப்பிடிக்கவில்லை என்று அர்த்தம். ஆங்கிலம் நடத்தும் பொழுது கட்டுரையை அவர் எழுதுவார். நாங்கள் அதை எழுதிக்கொண்டு மனப்பாடம் செய்து அதை அப்படியே பரீட்சையில் எழுத வேண்டும். இதில் எனக்கு உடன்பாடில்லை. மனப்பாடமும் எனக்குப்பிடிக்காது. படிக்கவும் அப்போது எனக்குப்பிடிக்காது. அதனால் தான் இதில் எனக்கு உடன்பாடில்லை. இவர் பாடம் நடத்தும் போது என்ன நினைத்துக்கொண்டிருந்தேன் என்று எனக்கு நினைவில்லை. அவர் பாடம் நடத்தியதும் எனக்கு நினைவில்லை. உதாரணமாக டாம் சாயர் செவிற்றிற்கு வெள்ளை அடித்ததைப்பற்றி ஒரு வாரம் முழுவதும் பாடம் நடத்தினார். அந்த நேரத்தில் பள்ளி முழுவதற்கும் வெள்ளை அடித்து முடித்திருக்கலாம். திங்கட்கிழமை அன்று யாருக்கும் முதல் வரிசையில் உட்கார மனம் வராது. மனம் வராது என்பதை விட உட்கார பயம் என்று கூறுவதே மேல். ஏனென்றால் வாரத்தில் அன்றுதான் அவர் முகச்சவரம் செய்து கொண்டு வருவார். அந்த எரிச்சலினாலோ என்னவோ அன்று அடி கொஞ்சம் பலமாகவே இருக்கும். அந்தப்பதினோறாவது வகுப்பில் அவர் எங்களுக்கு கணக்கு மற்றும் ஆங்கிலம் நடத்துவார். வாரத்தில் ஒரு நாள் - புதன்கிழமை என்று வைத்துக்கொள்வோம் - அவருக்கு மதிய உணவுக்குப் பினபு கிளாஸ் இல்லை. பல மாணவர்கள் சில சமயம் புதன் கிழமைகளில் மதியம் மட்டும் பள்ளிக்கு வருவார்கள். இதனால் அவர்களுக்கு அடிவாங்கும் தொல்லை இருக்காது. நான் அப்படி செய்தேனா என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். ஆனால் அவ்வப்பொழுது அவர் மதிய உணவு சமயத்தின் ஆரம்ப நிமிடங்களில் ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவார். அன்றும் அப்படித்தான் அவர் ஸ்பெஷல் கிளாஸ் என்று எங்களை உட்கார வைத்துவிட்டார். இது பற்றித்தெரியாத மாணவன் ஒருவன் கிளாஸ்ஸிற்கு மதிய உணவு வேளையில் வந்தான். அந்த நாட்களில் இப்போது போன்று செல் போன் இல்லாத காரணத்தினால் மற்றும் அவனுடைய போறாத காலத்தினாலும் அவன் அகப்பட்டுக்கொண்டான். அந்த மாணவன் அவரைப்பார்த்தகணத்தில் பின் வாங்க முயற்சி செய்து தோற்றான். அவர் அவனைப்பார்த்துவிட அவன் மாட்டிக்கொண்டான். என் எஸ் அவனை "என்னடா என் லேட்" என்று கேட்டார்.
"சார், எனக்கு உடம்பு சரியில்லாததினால் நான் டாக்டரைப்பார்க்கவேண்டியிருந்தது"
"டேய், உண்மையைச்சொல். நீ இந்தியா ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேட்ச் தானே பார்த்துவிட்டு வருகிறாய்".
இதற்கு மேலும் அவனால் பொய் சொல்ல வழியில்லாமல் அவனும் ஒத்துக்கொண்டான்.
"சரி, என்ன ரிசல்ட் என்றாவது சொல்"
"ஸ்ரீலங்கா தோத்துப்போச்சு, சார்"
இதைக்கேட்டவுடனே முதல் அடி அவனுக்கு விழுந்தது.
"ஏண்டா, இந்தியா ஜெயித்ததுன்னு சொல்லக்கூடாதா" என்று என்னும் பல அடிகள் விழுந்தன.
அவர் இறந்த செய்தி கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் இன்று இந்நிலைமையில் இருப்பதற்கு இவர் போன்ற ஆசிரியர்கள் தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.
சீதாராம ஐயர்:
இந்தப்பெயரைக்கேட்டவுடனேயே என் கண்கள் பனிக்கின்றன. எனக்கு பி யு சி இலிருந்து இவர் பல வருடங்கள் கற்பித்திருக்கிறார். இவர் மாணவர்களின் மீது மிகுந்த அன்புடையவர். நான் பி யு சி முடித்த பிறகு காலேஜ் அட்மிஷன் பொருட்டு ஒரு வரிசையில் நின்றிருந்தேன். அப்பொழுது சி ஏ ரொம்பப்பிரபலமாக இருந்த காலம். கிஷோர், ஹரி மற்றும் என்னுடைய பல நண்பர்கள் பி காம் சேருவதற்காக நின்றிருந்த வரிசையில் நானும் நின்றிருந்தேன். சீதாராம ஐயர் என்னைப்பார்த்து அழைத்து நான் ஏன் அங்கு னிந்திருக்கிறேன் என்று கேட்க நான் பி காம் சேருவதற்காக நின்றிருக்கிறேன் என்று கூறினேன். அவர் உடனே பக்கத்தில் நின்றிருந்த ப்ரோபஸ்ஸோர் ஆர் வெங்கட்ராமனிடம் ஆர் வீ இவனைக்கொண்டு போய் அந்த வரிசையில் நிறுத்து என்று மற்றொரு வரிசையைக்காட்டினார். ஆர் வீ யும் என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் அந்த வரிசையில் நிறுத்தினார். எனக்கு சீதாராமையர் மேல் இருந்த மரியாதையினால் ஒன்றும் கூறாமல் அந்த வரிசையில் நின்றிருந்தேன். அது இதற்கான வரிசை என்பது பற்றி ஒன்றும் தெரியாது. கவுன்டருக்குச்சென்றபின் தான் அது பி எஸ் சி மத்தமட்டிக்ஸிற்கான வரிசை என்று தெரிந்தது.
சாரி:
திருவேங்கடாச்சாரி என்பது முழுப்பெயர் என்று நினைக்கிறேன். இவரும் எனக்கு ப்ரோபஸ்சோராக இருந்தார் மதுரைக்கல்லூரியில்.
ஆஜானுபாஹுவான கரிய தோற்றம். வகுப்பில் பாடம் நடத்தும் போது குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே பேசுவார். குரலோ மூக்கினால் பேசுவது போல் இருக்கும். நல்ல மனிதர் இவரும். ஆனால் எனோ இவருக்கும் சீதாராம யிருக்கும் ஒத்துப்போவதில்லை. சீதாராம ஐயர் இவரைப்பற்றி எதுவும் சொல்லமாட்டார். அனால் இவரோ சீதாராம ஐயர் பற்றி தூற்றிக்கொண்டே இருப்பார். மதுரைக்கல்லூரியில் பல வகுப்பறைகளில் ஜன்னலில் கம்பிகளோ இல்லை கதவுகளோ இருக்காது. ஜன்னல்களும் மிகப்பபெரிதாக இருக்கும். அட்டெண்டன்ஸ் எடுத்த பிற்பாடு அவர் நடந்துகொண்டே பாடம் நடத்தும் பொழுது சில மாணவர்கள் அவர் பார்க்காத பொழுது ஜன்னல் மூலம் வெளியில் சென்று விடுவார்கள். அவர் சில நேரம் கழித்து என்னடா நான் ஆரம்பித்த பொழுது இருந்ததை விட குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கிறார்களே என்று கேட்பார். அவரை நான் மறக்கமுடியாததற்கு மற்றொரு காரணமும் உண்டு. அவருக்கு நான் மிக மிக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எல்லா ஆசிரியர்களுக்கும் தான். நான் பி எஸ் சி படிக்கும்பொழுது, முதல் செமஸ்டர் நடக்கும்பொழுது சில மதுரைக்கல்லூரி மாணவர்கள் பி ஆர் சி பஸ் கண்டக்டரை அடித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒரு நாள் சுமார் காலை பத்து மணி இருக்கும் என்று நினைக்கிறேன், ஒரு பஸ் நிறைய பி ஆர் சி மக்கள் தடிக்கம்புகளுடன் காலேஜிற்கு வந்துவிட்டார்கள். என்னுடைய வகுப்பு காலேஜின் முன் பகுதியில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் அதைப்பார்க்க முடிந்தது. ஒரு சூட்டிகையான மாணவன் ஓடிப்போய் வாசலில் இருந்த பெரிய இரும்புக்கதவை மூடி தாழ்பாள் போட்டுவிட்டு ஓடிவிட்டான். இது எங்களுக்கு கொஞ்சம் நேரம் கிடைக்க வாய்ப்பளித்தது. சீதாராம ஐயர் தான் அப்பொழுது ஆக்ட்டிங் ப்ரின்சிபாலாக இருந்தார். அவர் எல்லா மாணவர்களையும் காலேஜின் பின்பக்கமாக செல்லப்பணித்தார். நானும் ஓடிப்போய் என்னுடைய சைக்கிள்இ எடுத்துக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தில் ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். பி ஆர் சி இலிருந்து வந்தவர்கள் காலேஜில் இருந்த லபரட்டோரி சாமான்களையும் பல மாணவர்களையும் அடித்து விட்டார்கள். என்னுடை சமஸ்க்ருத ப்ரோபஸ்ஸோரையும் முடித்துவிட்டார்கள். இதனால் காலேஜிற்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட காலேஜை காலவரையறையின்றி மூடிவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் மதுரை யூனிவர்சிட்டி இலிருந்து செமஸ்டர் எக்ஸாம் நடத்துவார்கள். நாங்கள் எல்லோரும் மதுரை யூனிவெர்சிட்டிக்குச்சென்று அந்த பரீட்சைகளை தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். விஸ் சன்செல்லாரோ முடியாது என்று கூறி விட்டார். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் சாரி அவர்களின் வீட்டிற்குச்சென்றோம். அவரிடம் எங்களுக்கு உதவுமாறு கேட்டோம். அவரும் பெரிய மனது வைத்து ஒத்துக்கொண்டார். அவர் ஏற்கனவே மேலமாசி வீதி என்று நினைக்கிறேன். அங்கு ஒரு அறையில் பலருக்கு டுய்ட்டின் நடத்திக்கொண்டிருந்தார். எங்களை அங்கு வருமாறும், மிக குறைவான பணமும் கேட்டார். அந்தப்பணம் அவருடைய அறையின் வாடகைக்கு மட்டும் தான் உதவியிருக்கும். நாங்கள் பலர் அந்த அறைக்கு சாயங்காலம் செல்வோம். அவரும் எங்களுக்கு எல்லாப்பாடங்களும் நடத்துவார். அவரின் உதவியால் நாங்கள் எல்லோரும் நன்றாக பரீட்சைகளை எழுதித்தேர்வு பெற்றோம். என் தாயார் ஏன்டா அவரிடமே போய்ப் படியுங்களேன் இனிமேல் என்று கூறும் அளவிற்கு அவர் எங்களுக்கு உதவி புரிந்தார். இப்பொழுது சொல்லுங்கள். அவரை எப்படி மறக்கமுடியும். இதை எழுதும்போது கூட என் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது. ஆச்சார்ய தேவோ பவ.
நான் இன்று இந்நிலைமைக்கு வருவதற்கு இவர்களைப்போல ஆசிரியர்களும் காரணமென்றால் அது மிகையாகாது. என்னுடைய குடும்பமும் மற்றும் என்னுடைய நண்பர்களும் எனக்கு மற்ற தூண்களாக இருந்தார்கள், இருந்துகொண்டு இருக்கிறார்கள்.
எம் எஸ் டி
இவர் கல்யாணராமனுடைய தகப்பனார். என்னுடைய தந்தையார் காலமான பிறகு எனக்கு நல்ல அறிவுரைகள் கூறும் நல்ல நண்பராக இவர் இருந்தார். நானும் இவரும் பேசாத நாட்களே இல்லை என்று கூறலாம். என்னுடைய பக்கத்து வீடு இவருடையது. இவர் ஆர் எம் எஸ் இல் அப்பொழுது வேலை பார்த்துக்கொண்டிருந்தார். மிக மிக எளிமையான, புத்தி கூர்மையுள்ள, நல்ல மனிதர். அவ்வப்பொழுது இப்பொழுதும் இவருடனும் - நான் இவரை அன்புடன் மாமா என்று அழைப்பேன் - இவருடைய மனைவி உமா அக்காவிடமும் பேசுவேன். இன்னும் அதிகம் இவருடன் பேச வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கிறது.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இவரும் நானும் மிதிவண்டியில் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச்செல்வோம். அதுவும் அதிகாலை ஐந்து மணிக்கு. இரவு நேரங்களில் மிகவும் அமைதியாக இருக்கும் நேரத்தில் இவரும் நானும் அவருடைய வீட்டு வாசலில் உட்கார்ந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்போம். வாரத்தில் ஒரு நாள் என்று நினைக்கிறேன். அப்பொழுது சென்னை வானொலியில் அன்றைய வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரஹங்கள் பற்றி ஒருவர் கூறுவார். நானும் இவரும் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருப்போம்.
என்னடா ராதா என்று இவருடைய கம்பீரமான குரல் இப்பொழுதும் எனக்குக்கேட்கிறது. இவரைப்போன்ற நண்பர்கள், ஆசான்கள் கிடைத்ததற்கு நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.சமீபத்தில் ஒளித்தொலைபேசியில் இவரைப்பார்த்துப்பேசியது, உமா அக்காவைப்பார்த்துப்பேசியது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.
Raleigh சைக்கிள்
முதன் முதலாக எங்கள் வீட்டில் இந்த raleigh சைக்கிள் வாங்கினார்கள். அதுவும் எனக்கில்லை. மிகவும் அழகான அந்த சைக்கிள் ஐ எனக்கு ஓட்டவேண்டும் என்று ஆசை. ஆனால் அதற்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லை என்பது பொதுவாக எனக்குத் தடையாக இருந்தது இல்லை என்றே கூறலாம். இங்கும் அப்படித்தான். யாரும் பார்க்காத பொழுது இந்த வண்டியை குரங்குப்பெடல் போட்டு ஓட்டுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் அதை ஓட்டும்பொழுது நானும் அதுவும் கீழே விழ, அடியும் விழுந்தது எனக்கு. பாழாய்ப்போன அந்த செயின் guard வளைந்து போனதினால் வந்த வினை. மிதிவண்டியை வாங்கின ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணமூர்த்தி மாமா வந்து அதை சுற்றி ச் சுற்றி பார்த்தது இப்பொழுதும் நினைவில் உள்ளது. அந்த நினைவே எனக்கு இப்போது சந்தோஷத்தைக்கொடுத்ததென்றால், அதை வாங்கிய அன்று இருந்த சந்தோஷத்தை நீங்கள் மிகவும் எளிதாக எண்ணிவிடலாம்.அன்றைய raleigh இன்றைய மெர்சிடிஸ்.
மழை டிப்ளமசி
சிறுவனாக இருக்கும்பொழுது நிறைய மழை பெய்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு அது கொஞ்சம் கவலையையை கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் எப்பொழுது வீட்டிற்குள் வந்துவிடுமோ என்ற பயம் இருக்கலாம். எனக்கோ அப்பொழுது மிகவும் குஷி. மழை பெய்து முடிந்தவுடன், வீட்டின் வாசலில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஓடுவதை விட நின்று கொண்டிருக்கும் என்று சொல்லலாம். முக்கால்வாசி வீடுகளின் முன் அந்த வாய்க்கால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் மூடியிருக்கும். அந்த வாய்க்காலகளை வெட்டி வழி செய்ய நான் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு முன்னால் நிற்பேன். வீட்டிற்குள் இருந்தால் படி என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். இது எதற்கு வம்பு என்று நான் வெளியில் வந்து விடுவேன்.இதில் இன்னொரு இன்பமும் இருந்தது. என்னைப்போல பலரும் வந்துவிடுவார்கள். அவர்களுக்கு என்ன வீட்டிற்குள் தொந்தரவோ எனக்குத்தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்த மட்டில் அது ஒரு விழாக்காலம். பல மாமாக்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அங்கு வெட்டு இங்கு வெட்டு என்று மேற்பார்வை பார்த்துக்கொண்டிருப்பார்கள். நடுவில் சிறிது நேரம் எல்லோரும் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நடுவில் நின்று பல விஷயங்களைக்கேட்டுக்கொண்டிருப்பேன். வீட்டிற்குள் செல்வதை எவ்வளவு நேரம் தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு தூரம் நல்லது தானே. அவர்கள் சென்ற பின்போ அல்லது மழை பெய்து கொண்டிருக்கும் பொழுதோ நான் பல பேப்பர் கப்பல்களை தண்ணீரில் விட்டு விளையாடிக்கொண்டிருப்பேன். மோகன் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தான் என்று எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. என்னை சும்மா விட்டால் போதும் என்று இருந்தேன் என்றே நினைக்கிறேன். ஏதாவதொரு சமயத்தில் ஒரு பாம்பு வந்துவிட்டால், அவ்வளவுதான், அதைக்கொல்லும் வரை எல்லோரும் அதைத்தேடிக்கொண்டிருப்பார்கள். எனக்கோ பாம்பைப்பார்த்தால் பயம். இப்பொழுதும் கூட. நான் இப்பொழுது இருக்கும் வீட்டின் பின்புறத்தில் குளிர் காலம் தவிர மற்ற காலங்களில் சில பாம்புகளைப்பார்ப்பேன். நான் இருக்கும் ஊரில் விஷமில்லாத பாம்புகள்தான் என்று இந்த ஊர்க்காரர்கள் சொன்னாலும் எனக்கு பயம்தான். எனக்கு ஒரு ஆசை. ஒரு பாம்பைப்பார்த்தவுடன் அது விஷமுள்ளதா அல்லது விஷமில்லாததா என்று தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்த பிறகு அதன் வாலைப்பிடித்து அதைக்கொண்டு போய் தூரத்தில் உள்ள செடிகளுக்கு நடுவில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று ஆசை. எதற்கு இந்த வேண்டாத வேலையெல்லாம் என்று நீங்கள் நினைப்பது எனக்குத்தெரிகிறது.
எபினேசர்
எபினேசர் கிறிஸ்துதாஸ் என்பது இவரது முழுப்பெயர். பல வருடங்கள் எனக்கு இவருடைய முழுப்பெயர் தெரிந்திருக்கவில்லை. இவர் எனக்கு பல வருடங்கள் பாடம் நடத்தியிருக்கிறார். எனக்கு இவரைப்பிடிக்கும். எதையுமே லேசாக எடுத்துக்கொள்பவர். அதிகம் கோபம் இல்லை. எப்பொழுதுமே சட்டையை இன்செட் செய்திருப்பார். பள்ளியில் வெகு சிலரே - வேறு யாரையும் காட்ட இயலவில்லை- இவ்வாறு உடை அணிந்திருப்பார்கள். இவர் எனக்கு பத்தாம் வகுப்பு சி கிளாஸ் டீச்சர். TVS பள்ளியில் சனிக்கிழமைகளில் காலை ஒன்பது மணியிலிருந்து பகல் ஒரு மணி வரை பாடங்கள். ஆகையினால் பனிரெண்டு மணிக்கு எல்லோரும் கோபமாய் இருப்போம், பசியில். எபினேசர் சார் ஆரம்ப தினத்திலேயே கூறிவிட்டார் - சனிக்கிழமைகளில் பாடம் நடத்துவது இல்லை என்று. சத்தம் போடாமல் நாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லது அவருடன் பேசிக்கொண்டிருக்கலாம். அவர் அவருடைய வேட்டையாடும் வீர பராக்ரமங்களையெல்லாம் வெகுவாக விரித்துக்கூறுவார். பல நேரம் அவற்றை ரசித்திருக்கிறேன். இவருடைய
சமீபத்திய புகைப்படத்தைப்பார்த்தேன். அப்படியே இருக்கிறார். சிறிது கூட உடல் எடை கூடவில்லை. வாழ்க வளமுடன். இவர் என்னை அடிக்கடி டாக்டர் ராட் என்றே கூப்பிடுவார். அன்புடன் அல்ல. எப்பொழுதாவது என்னை விமர்சிக்கும் போது அவ்வாறு கூப்பிடுவார். திட்டுவதைத்தான் அப்படி சூசகமாகக்கூறியுள்ளேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்தப்பட்டம் வாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்:-) அவருக்கு நன்றி. ஏன் மற்ற ஆசிரியர்களும் இவரைப்போன்று அடிக்காமல் கோபம் கொள்லாமல் இருந்திருக்கக்கூடாது? இவரிடம் சிகரெட்டு குடிக்கும் பழக்கம் இருந்தது என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக ஞாபகம் இல்லை.
மார்க் ட்வைன் கூறியது போல எனக்கு எவ்வளவு வயதாகிறதென்றால் நடக்காத விஷயங்கள் கூட எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது :-)
சரோஜா டீச்சர்
இவர் எனக்கு ஆறாம் கிளாஸ் சி பிரிவு டீச்சர். எப்பொழுதுமே ஸ்ட்ரிக்டாக இருப்பார் என்று சியாமளா வும் மோகனும் எனக்கு பயம் காட்டி வைத்திருந்தார்கள். இவர்களுக்கு இதுவே வேலையாக இருந்திருக்கிறது. இவரோ அடிக்கடி ஸ்யாமளாவோட தம்பிய, மோகனோட தம்பியா, இப்படியிருக்கே என்று எனக்கு வெறுப்பத்திக்கொண்டிருப்பார். நன்றாகப்பாடம் நடத்துவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவ்வளவாக கவனித்ததில். ஏதோ பதினொன்றாவது வரை, பாஸ் பண்ண மட்டுமே படிக்க எண்ணம் இருந்தது. ராங்கைப்பற்றி அதிகம் கவலைப்பது இல்லை. எதற்கு அனாவசியமான கஷ்டப்படவேண்டும் என்ற எண்ணம். சந்தோஷமோ கவலையோ இல்லாத முற்றும் துறந்த நிலை. அந்த நிலை இன்று வருவதில்லையே என்ற ஏக்கம். கண்ணதாசன் பாட்டுப்போல இருக்கிறதோ:-)
விஸ்வநாதன் வேலை வேண்டும்
காலேஜ் முதற்கட்டம் முடிந்த பிறகு வேலைக்காக காத்துக்கொண்டிருந்த காலம். அந்தக்காலத்தில்தான் நானும், பாலாவும், கிஷோரும், ஹரியும், மற்றும் பலரும் நாளில் பல மணி நேரங்கள் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தோம். உரையாடி என்று சொல்வதை விட வெட்டி பேச்சு அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம் என்று சொல்வதே உண்மை. எங்கள் வீட்டில் நான் பல செடிகளை வளர்த்து வந்தேன். பல நாட்கள் அவைகளுக்கு தண்ணீர் விடும்போது நான் வெட்கமில்லாமல் TMS பாடல்களை உரக்கப்பாடிக்கொண்டிருப்பேன். அவ்வாறு ஒரு நாள் மதியம் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டு காதலிக்க நேரமில்லை படப்பாடலான விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடலை பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது என்னுடைய வீட்டின் கிட்டி கார்நேரிலிருந்த விஸ்வநாதன் தன்னுடைய அம்பாசடர் காரிலிருந்து வீட்டிற்குள் செல்ல இறங்கியிருந்தார். நான் அவரைப்பார்க்கவில்லை.
அவரும் ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை அவர் என்னை அழைத்தார். என்னை யாராவது அது வரை அழைத்தால் நல்ல விஷயத்துக்காக இருக்காது. அவ்வாறே நானும் எண்ணிக்கொண்டு போனேன். ராதா, எனக்குத்தெரியும் உனக்கு இந்த வேலை உகந்ததில்லை. ஆனாலும் உனக்கு ஒரு வேலை இருக்கிறது என்னுடைய அலுவலகத்தில். 120 ரூபாய் வாரச்சம்பளம். எப்பொழுது வேண்டுமானாலும் நீ இந்த வேலையை விட்டு விடலாம். எனக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இருக்க வில்லை. மோகன் அப்பொழுது திண்டுக்கல்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். நான் அந்த வேலையை ஒப்புக்கொண்டேன் ஒரு நிபந்தனையோடு. சனிக்கிழமைகளில் அரை நாள் தான் வேலை பார்ப்பேன் என்று கூறினேன். அதுதான் என்னுடைய சம்பளத்துடன் பார்த்த முதல் வேலை.
அம்பட்டன் நால்வர்
சுமார் ஒரு இருபத்துஐந்து வருடங்களுக்கு முன்பு எனக்கு பொழுது போவது கடினமாக இருந்த போது ஒரு யோசனை தோன்றியது. நண்பர்களுடன் வாரம் ஒரு முறையாவது மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருக்கவேண்டும் என்று. இதை செயல்படுத்த மெக்டொனால்ட்தில் காபி சாப்பிட்டுக்கொன்டே பேசலாமே என்று கூற சிவா, சேகர், மற்றும் சாந்தாராம் எல்லோரும் ஒப்புக்கொள்ள மாரு வாரத்திலிருந்து சேர்ந்து பேச ஆரம்பித்தோம். இவ்வாறு பல வாரங்கள் ஓடிய பிறகு சாந்தாராம் சற்று தூரம் நடந்துவிட்டு பிறகு கோபிக்குச்செல்லலாமே என்றார். நடக்க இஷ்டமில்லாவிட்டாலும் எல்லோரும் ஒப்புக்கொண்டோம். இவ்வாறாக தொடங்கியது இன்று வரை சென்று கொண்டுள்ளது. இப்பொழுது சாந்தாராமினால் வண்டி ஓட்ட முடியாத நிலையில், நானும் சேகரும் அவரை அழைத்துக்கொண்டு காபிக்குச்சென்று கொண்டுள்ளோம். சிவா அமெரிக்காவை விட்டு செல்லவேண்டியதாகியது. ராம் இறந்துவிட்டார். சாந்தாராமிற்கு எங்களுடைய இந்த கூட்டத்தை அம்பட்டன் நால்வர் என்று பெயர் சூட்டவேண்டுமென்று கூற, அதைப்பத்தி இப்பொழுது யாருக்கும் ஞாபகம் இருக்குமா என்றுகூடத்தெரியவில்லை.
சிவசுப்ரமணியம்
நான் மதுரைக்கல்லூரியில் நான் கணக்கில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தில் படித்த பொழுது எனக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் சிவா. இவ்வாறுதான் சிவா சார் என்று தான் நான் அவரை அழைப்பது வழக்கம். இவர் எனக்கு கால்குலஸ் மற்றும் மாடர்ன் Algebra நடத்தினார். முதுகலை படிப்பின்போது எங்கள் வகுப்பில் பாதி பெண் மாணவியர். பல நாட்கள் சிவாவும் மற்றும் நான், கிருஷ்ணன், வெங்கட்ராமணன், தியாகராஜன் என்று இன்னொரு ப்ரோபஸ்ஸோர் எல்லோரும் காலேஜ்