இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும். மத்தளத்தில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் சுருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது.
வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம்.
இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றன. இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பன்சூரி வகையாகும். இதில் ஆறு விரல் துளைகளும் ஓர் ஆற்றுவாய் துளையும் இருக்கும். வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன. மற்றொருவகை வேணு; இவை தென்னிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஓர் ஆற்றுவாய் துளையும் இருக்கும். தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும்.