அனுபவம்
 
எனது அனுபவத்திற்கு வயது இருபத்திஎட்டு. 1976ம் வருடம் இப்போது மாதிரி அப்போது ப்ளஸ் டூ கிடையாது. பி.யூசிதான். கணக்கும், பெளதிகமும் வராதவனுக்கு தாத்தா மருத்துவனாக்க வேண்டுமென்கிற ஆர்வம் என்னை பெயிலாக்கியது. என்ன ஆகும் எனது வாழ்க்கை என்று துவண்டு போய் அம்மாவின் தாத்தா பிரபல எழத்தாளர் பி.ஸ்ரீக்கு ஒரு ஒண்ணரை பக்க கடிதம் உருக்கமாக எழதினேன். அதில் ஒரு வரியை மட்டும் சுழித்து இந்த தமிழை வைத்துக்கொண்டா இத்தனை தயக்கம்? என்று பதிலனுப்பினார். அது வாழ்க்கையின் போக்கை மாற்றியது. வானவில் என்று ஒரு கையெழத்து பிரதியை துவக்கினேன். அப்போது சாவி இளைஞர்களுக்காக திசைகள் என்றொரு பத்திரிகையை துவக்கினார். அதன் ஆசிரியர் மாலன். என் கையெழத்து மூலமாக அவரிடம் அறிமுகமாகி, திசைகள் பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. எனது இயற்பெயர் ரங்கராஜன். திசைகளின் ஆயுள் ஆறு மாதத்திற்குள் முடிந்தது. பிறகு குமுதம் பத்திரிகையில் பகுதி நேர நிருபராகப் போனேன். அங்கே அப்போது இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன். அதனால் நான் பெயர் மாற்ற வேண்டிய கட்டாயம். ரங்கராஜனான நான் சுதாங்கன் ஆனேன். 1982 இறுதியில் விகடன் நிறுவனத்தில் அவர்கள் புதிதாக துவங்க இருந்த ஜீனியர் விகடனின் முதல் நிருபராக சேர்ந்தேன். ஜீனியர் விகடனின் முதல் இதழ் அடுத்த ஆண்டு ஜனவரி 12ந்தேதி முதல் இதழ் வெளிவந்தது. பத்து ஆண்டுகள் அங்கே பணி புரிந்து 1992ம் வருடன் அதன் பொறுப்பாசிரியராக இருந்தபோது, அங்கிருந்து வெளியேறி தினமணி நாளிதழில் பொறுப்பாசிரியராக சேர்ந்தேன். நிர்வாகத்திற்குள் பிரிவினை வந்தபோது, இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பைக்காக தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை துவக்கி அதன் துவக்க ஆசிரியராக ஆனேன். 1996ம் வருடத்திலிருந்து தொடர்ந்து விஜய், ராஜ், ஜெயா தொலைக்காட்சிகளில் அரசியல் விமர்சகனாக பேட்டி எடுத்த அனுபவம் உண்டு. தொடர்ந்து 36மணி நேரம் 19தேர்தல் முடிவுகளை விஜய டிவியில் கொடுத்த அனுபவம் உண்டு.


1986ம் ஆண்டு கிராமப்புற ரிப்போர்ட்ங்கிற்காக கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றேன். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை விகடனில் எழதியவன். எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதா கொலை முயற்சி வழக்கின் ஒரு பதிவாக தினமணி கதிரில் சுட்டாச்சு சுட்டாச்சு என்கிற பெயரில் 52வாரங்கள் வந்த தொடர் பின்னர் புத்தகமாக வந்தது. கற்பனை சாராத என்னுடைய கட்டுரை தொகுப்புதான் தேதியில்லாத டைரி. இதுவும் இப்போது புத்தகமாக விற்பனையாகிறது. கண்ணதாசன் பதிப்பகத்திற்காக இப்போது ஒஷோவையும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறேன்.பல தொடர்காட்சி தொடர்கள், ஒரு ஏழ திரைப்படங்களில் நடித்த அனுபவம் உண்டு. இந்த படங்களை மணிவண்ணன், பாரதிராஜா, பாலசந்தர், அகத்தியன் போன்றவர்கள் இயக்கியது.


எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் ஆகாஷ். லண்டனில் படித்து வருகிறான். காதல் திருமணம். மனைவி சாந்தி 2006ம் வருடம் தனது 42வது வயதில் அகால மரணமடைந்தாள்.