முகப்பு


இணையதள நிர்வாகிகளின் பார்வையில் :

         அண்ணன் சுவாமிகளை பற்றி சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தெரிந்து கொண்டோம். எங்கள் மைத்துனர் மூலம் விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் கோயில் வெளியிட்டிருந்த அண்ணன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படிக்கும் பேறு எங்களுக்கு கிடைத்தது. பின்பு புதூர் சென்று அண்ணனின் ஜீவ சமாதி வளாகத்தை வணங்கினோம். எளிமையும் அமைதியும் நிரம்பிய அவ்விடம் அண்ணனின் அருளையும் அன்பையும் எங்களுக்கு உணர்த்துவதாகவே இருந்தது. அண்ணன் சுவாமிகளின் சகோதரர் திரு.பக்தவச்சலம் அவர்களைக்கண்டு அண்ணனின் மகிமைகள், சித்துக்கள், வாழ்ந்த விதம் இவற்றை ஓரளவு தெரிந்து கொண்டோம்.

           திரு.பக்தவச்சலம் அவர்களின் நுண்ணிய ஆராயும் அறிவு,பண்பு, சமனோக்கு பார்வை எங்களை வியக்க வைத்தது. M.A., மனோதத்துவம் படித்திருந்த இந்த பெரியவர் அண்ணனின் சித்துக்களை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர். பின்பு, விளமல் ஸ்ரீஅண்ணன் சுவாமிகள் சரணாலயத்தை ஸ்தாபித்து அண்ணனையே நினைத்து, அண்ணனையே பேசி, அண்ணனை உணர்ந்து, அண்ணனில் வாழும் திரு.சிவப்பிரகாசம் என்ற விளமல் ஐயா அவர்களை சந்தித்தோம். எப்போதும் அண்ணனை பற்றியே பேசுவதில் ஆனந்தம் அடையும் இவர்கள் மூலம் அண்ணனின் ஆழ்ந்த கருணை, ஞானத்தின் உயரம் இவற்றினை ஓரளவு புரிந்து கொண்டோம். அண்ணன் என்ற இந்த சித்தரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற  ஆவல் எங்களை தொற்றிக்கொண்டது.

            அண்ணனின் குருபூஜை அன்று புதூருக்கு விஜயம் செய்த கோவை டாக்டர்.திரு.நந்தகுமார் அவர்களையும், திரு.பொன்ராஜ் அவர்களையும் சந்தித்தோம்.பின்பு கோமல் அருணாலயம் சென்று திரு.சுவாமினாதன் அவர்களையும், வேளாங்கண்ணி சென்று திரு.வேதாச்சல சுவாமிகள், திரு.சீதாராமன் அவர்களையும்,புதூரில் திரு.கணேசன் அவர்களையும், அம்மையப்பன் திரு.மணிவண்ணன் அவர்களையும் சந்தித்து உரையாடினோம்.

     இவர்கள் அனைவரும் அண்ணனின் அருள் பெற்ற நேரடி சீடர்கள் ஆவார்கள்.இன்னும் பல நேரடி சீடர்களை பக்தர்களை சந்திக்கும் முயற்சியில் இருந்து கொண்டிருக்கின்றோம். மேற்கூறிய சீடர்கள் மூலம் அண்ணன் சுவாமிகள் மற்றும் ஆண்டாள்புரம் சுவாமிகளை பற்றியும் இவர்களது வாழ்வில் நடந்த பல உன்னத நிகழ்ச்சிகளை பற்றியும் பொறுமையாக கேட்டுத்தெரிந்து ஆனந்தமடைந்தோம்.

     வாழ்வின் இலட்சியம் ஆத்ம ஞானம் அடைவதுதான் என்ற ஆர்வத்தில் பயணித்த எங்களுக்கு ஆன்மீகம்,சித்துக்கள்,தந்திர சாஸ்திரம் போன்றவற்றில் அளப்பரிய ஆற்றல்பெற்ற ஒரு மகானை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்த இந்த நாட்களிலேயே ஓர் அமைதியும் இனிமையும் எங்கள் மனதில்,அறிவில் குடிகொண்டன. இதுதான் அண்ணன் சுவாமிகள் எங்களுக்கு நிகழ்த்திய முதல் அற்புதம். இன்னும் வாழ்வின் தினசரி பிரச்சினைகளை அண்ணனிடம் கூற ஆரம்பித்தோம். எங்கள் பக்குவத்திற்கு ஏற்றார்போல் உடனடி பதிலும் கிடைத்தது.

     இந்த மகானை பற்றி, இவர்களது ஆற்றல்,அருளை பற்றி உலகுக்கு கூற வேண்டும்,உலகத்தார் அனைவரும் பயனடைய வேண்டும் என்ற உணர்வும், புதூர் என்ற ஒரு கிராமத்து சூழலில் பிறந்து வாழ்ந்த ஒரு சித்தபுருஷர் உலகெல்லாம் பரவவேண்டும் என்ற எண்ணமும்தான் இந்த இணையதளம் உருவாக காரணமாக இருந்தவை.

    விளமல் ஐயா(திரு.சிவப்பிரகாசம்) அவர்களின் முயற்சி அளவிட முடியாதது.திரு.சிவப்பிரகாசம் அவர்களும் அண்ணனும் இளம் பருவத்திலிருந்தே நண்பர்களாக பழகியவர்கள்.அண்ணனின் ஆத்மசக்தியை உணர்ந்து பிற்காலத்தில் அண்ணனின் சேவகனாய் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் இவர்.இந்த விளமல் ஐயா அவர்கள் எங்களுக்கு தந்த ஊக்கம், காட்டிய ஆர்வம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.ஒரு கட்டத்தில் அண்ணன் தனது இறுதி நாட்களில் பட்ட உடல் வருத்தத்தை கூறும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்.இளகிய மனம் கொண்டவர்களில் அண்ணனை விட பெரியவர் யார் என்று எங்களிடம்  தழுதழுத்தார்கள்.“எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் வருகிறேன், வேண்டிய உதவிகளை செய்கிறேன்...” என்றும் கூறி எங்களது ஆர்வம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். அண்ணன் தீட்சை பெற்ற இடத்தை பார்க்க வேண்டும் என நாங்கள் கூற எங்களை அழைத்துக்கொண்டு முள்ளியாற்றங்கரைக்கு சென்று அந்த மயானத்தை காண்பித்தார்கள். ஏராளமான ஆக்கிரமிப்புக்கு இடையில் அமைந்திருந்த அந்த மயானத்தில்தான் அண்ணன் தீட்சை பெற்றார்கள் என்று வியக்கும் அளவிற்கு அந்த இடம் தற்போது மாறியிருந்தது.இன்னும் பல இடங்களுக்கு சென்று தேவையான புகைபடங்களை எடுத்துக்கொண்டு விளமல் ஐயாவுடன் திருவாரூர் திரும்பினோம்.

    குருபூஜை 2014 இரவு அன்று புதூர் சென்று டாக்டர்.திரு.நந்தகுமார், திரு.பொன்ராஜ் அவர்களை சந்தித்து இரவு 12 மணிவரை உரையாடினோம், இவர்கள் அண்ணனை 1979-வது வருடம் சந்தித்தனர்.அண்ணனின் அருளும் ஆற்றலும் இவர்களை ஆட்கொண்டு இன்றுவரை அண்ணனை தங்களின் உயிர்மூச்சாய் உணர்ந்து வாழ்கின்றனர். இவர்களுடனான உரையாடல் பெரிய சத்சங்கமாகவே அமைந்தது. இனிமைக்கும் அழகுக்கும் அணிசேர்க்கும் வகையாக அமைந்தது அவர்களின் உரையாடல். அண்ணனோடு உணர்வில் ஒன்றி வாழும் இந்த மகாத்மாக்களின் ஆசி பெற்று விடைபெற்றோம்.

    கோமல் அருணாலயம் சென்று ஆண்டாள்புரம் சுவாமிகளின் ஜீவசமாதியின் முன்பு ஹரே ராமா..! ஹரே கிருஷ்ணா..! என்ற மகா மந்திரத்தின் இசையில் சுவாமிகளை மகிழ்வித்து,அண்ணனை தரிசித்து பின்பு திரு.சுவாமினாதன் அவர்களை சந்தித்தோம்.1975-ம் ஆண்டு அண்ணனை சந்தித்தார்கள் இவர்கள்.அண்ணனுடனேயே தங்கி குரு சேவை செய்தார்கள். அண்ணனின் ஜீவசமாதிக்கு பிறகு கோமலில் தனக்கு சொந்தமான ஒரு இடத்தில் அண்ணனுக்காக எழுப்பிய ஒரு அண்ணன் ஆலயத்தில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள்இவ்விடம் அருணாலயம்  என்று அழைக்கப்படுகிறது. இன்றும் அண்ணனோடும் சுவாமிகளோடும் உணர்வில் ஒன்றி வாழும் திரு.சுவாமினாதன் அவர்கள் பல உன்னத விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.அண்ணனுக்கும் சுவாமிகளுக்கும் அருகிலேயே இருந்து அருந்தொண்டு ஆற்றிய இந்த அருஞ்சீடர் எங்களிடம் அன்பாக உரையாடினார்கள்.அவர்களது அருகில் வந்தமர்ந்த சில பறவைகளுக்கு தானியங்களை பரிவோடு அளித்தவாறே எங்களிடம் உரையாடினார்கள்.

    வேளாங்கண்ணியில் அண்ணனின் பிரதான சீடர்களின் ஒருவரான திரு.வேதாசல சுவாமிகளை சந்தித்தோம். MA English Literature படித்து பேராசிரியராக பணிபுரிந்த இந்த மாமனிதர், 1967-ம் ஆண்டு, தான் அண்ணனை சந்தித்த தருணங்களை சுவைபட கூறினார்கள். அவரிடம் உரையாடிய 4 மணி நேரம் மிகவும் அற்புதமான காலமாகும்.எல்லா கவலைகளையும் மறந்து சிரித்துக்கொண்டே இருந்தோம். நகைச்சுவையாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்தது இந்த மாமனிதரின் உரையாடல்.”அம்பாளை பராபக்தியுடன் வழிபடும் காலத்தில் நமக்கு பழக்கப்பட்ட பிரியமான உருவத்தில்தான் ஆரம்ப காலத்தில் அம்பாள் நமக்கு காட்சி தருவாள்..” என அண்ணன் கூறியவற்றை நினைவு கூர்ந்து தனக்கு ஏற்பட்ட அம்பாளின் காட்சியை விளக்கினார்.அண்ணனை பற்றி நாங்கள் அறிந்து,தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக அமைந்தது இந்த சந்திப்பு.

    (குறிப்பு: கடந்த 26.10.2014 மாலை திரு.வேதாச்சல சுவாமி அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார்கள். அவரது சமாதி வேளாங்கண்னி அடுத்த பூவத்தடியில் அமைந்துள்ளது.எனினும் அண்ணனின் அருளால் சுவாமிகளை நாங்கள் ஏப்ரல் 2014 – ல் சந்தித்து சிலமணி நேரங்கள் உரையாடினோம்.இந்த இணையதளத்தின் ஆங்கில வடிவை தன்னால் முடிந்தளவு படித்து எங்களுக்கு அவரது ஆசீர்வாதத்தை வழங்கினார்கள். சுவாமிகளை சந்தித்து உரையாடிய நாட்கள் எங்களால் என்றும் நினைவில் வைக்கப்படும்.)

    அண்ணனின் இறுதி நாட்களில் அண்ணனுக்கு சேவை செய்த திரு.சீதாராமனையும் சந்தித்தோம்.அவர் அண்ணன் திருப்பாதங்களை நினைத்து இன்றும் ஆற்றி வரும் தொண்டு எங்களை வியக்க வைத்தது. அண்ணனின் சேவகனாய் இருக்கின்றேன் என்னை பிரகடன படுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டார்.அண்ணனின் ஜீவசமாதிக்கு பின்பு தனக்கு கிடைத்த பல அனுபவங்களை எங்களிடம் கூறினார்.மற்றுமொரு சீடர் ஜீவசமாதி வளாகத்தில் அமர்ந்திருந்த வேளையில் ஒரு நாள் அண்ணனின் திரு உருவச்சிலையின் முகம் தொடர்ந்து அவர் கண்முன் மாறிக்கொண்டே வந்ததும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு ஞானிகள், சித்தர்களின் முகமாகவும் வந்து சென்றதையும் எங்களிடம் கூறினார்கள்.மேலும் திருவாரூரில் தியாகராஜரை தரிசிக்க தேவேந்திரன் வரும் ஒரு வைபவத்தன்று இரவு புதூரில் தேவேந்திரன் தன் தேருடன் அண்ணனின் ஜீவசமாதி வளாகத்தில் இறங்கி அண்ணனை வணங்கி சென்றதையும் எங்களிடம் நெடுநேர தயக்கத்திற்கு பிறகு கூறினார் அந்த சீடர்.ஏன் இவ்வாறு தயங்கினீர்கள் என கேட்டதற்கு “உலகம் இதை நம்ப மறுக்கும்..” என நிதானமாக பதிலளித்தார்.பணிவும் நிதானமும் தெரிந்தது இவரது பேச்சில்.இவரது இந்த காட்சிகளை Illusion, Delusion, Hallucination என்ற வகையிலோ,Altered State of Consciousness, Extra Sensory Perception எனவோ, LSD (Lysergic Acid Di-ethylamine) போன்ற மயக்க வஸ்துக்களால் ஏற்பட்ட காட்சிகள் எனவோ பக்குவக்குறைவாக நாங்கள் எடைபோட விரும்பவில்லை. இத்தகைய காட்சிகள் ஆத்ம ஞான பாதையில் செல்பவர்களுக்கு குருவருளால் இறைவன் தரும் உண்மையான காட்சிகள் என்பதால் இவற்றின் மூலம் அண்ணனின் ஆற்றலை,பேரண்ட வியாபகத்தை நாங்கள் உணர்ந்து தெளிந்தோம்."தினம் தினம் பல அற்புதங்களை அண்ணன் நிகழ்த்துவதால் எனக்கு அவை ஆச்சரியமானவையே அல்ல “என பெருமையுடன் தன் குருவை நினைவுகூர்ந்தார்கள் சீடர்கள்.

    அண்ணனின் முன்பு தினமும் இரவில் நடக்கும் பாடல் இசை கொண்டாட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு வாத்தியக்கருவிகளை வாசித்து அண்ணனை மகிழ்வித்து தானும் மகிழ்ந்த திரு.கணேசன் என்ற மகாத்மாவை புதூரில் சந்தித்தோம்.செயலற்றுப்போன என் கைகளை அண்ணன் குணமாக்கினார்கள் என அன்பு பெருக அண்ணனை புகழ்ந்தார்கள். அவருடனான உரையாடல் மிகவும் அருமையானதாக அமைந்தது.

    “யோக நிலையில் ஜடாமுடியுடன் இருக்கும் அண்ணனின் திருவுருவம் அவர்களின் ஆறுமாதகால தவத்திற்கு பிறகு எடுத்தது.தண்ணீரை மட்டுமே குடித்து ஆறுமாதகாலம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார்கள் அண்ணன் "என கூறினர் அண்ணனின் பிரதான சீடர்கள்.

    இவர்களையெல்லாம் சந்தித்து அண்ணனை பற்றியும் சுவாமிகளை (ஆண்டாள்புரம் சுவாமிகள்) பற்றியும் தெரிந்துகொண்டதின் சாராம்சம் என்னவென்றால் அண்ணன் கருணை கடலாய் இருந்து அபர,பர ஜீவகாருண்ய வாழ்க்கையில் திளைத்திருந்தார் என்பதுதான். தவ வலிமையிலும் சித்துக்களிலும் அருளிலும் விஞ்சியிருந்த அண்ணன் திருக்கூட்ட மரபிலே வந்த ஒரு ஞானி என்பது உண்மை.இதை உறுதி செய்யும் விதமாக பத்திரிக்கை நிருபர் ஒருவருக்கு அண்ணனும் வள்ளலாரும் இணைந்து ஜீவசமாதி வளாகத்தில் காட்சி கொடுத்ததை நினைவுகூர்ந்தார் அண்ணனின் சகோதரர் திரு.பக்தவச்சலம் அவர்கள்.

    தான் ஏன் வந்தேன்,என்ன செய்கின்றேன்,அனைவரும் என்ன செய்யவேண்டும் என்ற பிரசங்கங்களை அண்ணன் என்றுமே வழங்கியதில்லை. தனது வாழ்வே மற்றவர்க்கு ஒரு ஆசானாக இருக்கட்டும் என்பதுபோல் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது வருபவர்க்கெல்லாம் கேட்பவற்றை தரும் கற்பக விருட்சமாய் இருந்தார்கள். இன்னும் அப்படித்தான்.! அண்ணனை கண்டிராத பல அன்பர்கள் அண்ணன் சுவாமிகளை பற்றி கேள்விப்பட்டு புதூர் ஜீவசமாதிக்கும், கோமல் அருணாலயத்திற்கும்,விளமல் சரணாலயத்திற்கும் வருகின்றனர்.இன்னும் பலர் அண்ணனின் திருவுருவ படத்தை பூஜித்து உணர்வால் ஒன்றி நிற்கின்றனர்.இவர்கள் அனைவருக்குமே அண்ணன் கேட்டவற்றை எல்லாம் கொடுத்து வாழ்வில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தருகிறார்கள் என்பதை அவர்களில் பலரை சந்தித்து தெரிந்துகொண்டோம்.

      இந்த விஞ்ஞான உலகில் சித்து,யோகம் ,ஆன்மா, ஞானம்,இறைவன் என்பனவெல்லாம் உண்மையா அல்லது ஒருவரின் மன பிராந்தியா என்ற கேள்விகளை எல்லாம் ஒருவாறு கடந்துதான் நாங்கள் அண்ணனை ஒரு சித்த புருஷராக ஏற்றுக்கொண்டுள்ளோம். விஞ்ஞானம் மட்டுமே உண்மை, மெய்ஞானம் வெறும் புரளி என்பவர்கள் பரமஹன்ச யோகானந்தா,சுவாமி சிவானந்தர், பால் பிரன்டன்,ரமண மஹரிஷி போன்ற மகான்களின் புத்தகங்களை படித்து தெளியவும்.

    மெய்ஞானத்தை மறுக்க டாக்டர்.அப்ரஹாம் கவூர் அவர்களின் புத்தகங்களும்,ராகுல சாங்கீர்த்தியாயனின் புத்தகங்களும் பலரால் மேற்கோள் காட்டப்பட்டன.ஆனால் உண்மையிலேயே இந்த இரு மாமனிதர்களும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்றுக்களையும் மனநிலை குழப்பத்தால் ஏற்பட்ட பல காட்சிகளையும் விளக்கிய அதே நேரத்தில் மனதின் அளப்பறிய சக்தியையும் இந்தியாவின் பல வரலாற்று உண்மைகளையும் நமக்கு தந்து சென்றிருக்கின்றார்கள். திருமூலரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போலி ஆன்மீகத்தை சாடி உண்மை ஞானம் என்னவென்பதை விளக்குகின்றார்.திருமூலரை அறியாதவர்களுக்கு வேண்டுமானால் அப்ரஹாம் கவூரும், ராகுல சாங்கீர்த்தியாயனும் ஒரு வகையில் ஆன்ம விசாரத்திற்கு உதவி செய்வர்.

    அண்ணனின் காலடியில் அமர்ந்து ஒருமுறை அருள் பெற்றவர்கள் “இன்றுவரை எங்கள் பேரன்,பெயர்த்திகள் கூட அண்ணனை வழிபட்டு நிற்கும் பண்பாடை அவர்களுக்கு கொடுத்தது யார்?”எனவும்,எங்கள் வாழ்வில் எல்லா நலங்களையும் தந்தது யார்? தருவது யார்? எனவும் உணர்ந்து அண்ணன் திருவடியில் சரணடைந்து வாழ்கின்றனர்.

    பேரண்ட பெருவெளியின் இரகசியத்தை,வாழ்வின் இனிமையை, இப்பிறப்பின் நோக்கத்தை அண்ணன் போன்றோரின் காலடியில் சரணடைந்து வாழ ஆரம்பிக்க எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள தொடங்குவோம்.வாழ்க்கை ஒரு இனிய தென்றலாய் மாறும். உலகம் நமக்கு சாதகமாய் அமையும்.வியாபக அறிவும் அன்பும் இந்த உடல் என்னும் சிறிய கூட்டிலிருந்து நம்மை இவ்வுணர்வு நிலையிலேயே பிரித்து உலமெல்லாம் பரவி நிற்கும் நம் உண்மை நிலையை உணர்த்தும். அப்போது நாமும் அண்ணனைபோல் சுவாமிகளைப்போல் ஒரு ஞானியாக, சித்தராக ஆவோம். மரணமிலா பெருவாழ்வு வாழ்வோம்.அந்த உன்னத நிலைக்கு நம்மை உயர்த்திச்செல்ல அகத்தூய்மையுடன் நம்பிக்கையுடன் அண்ணனையும் சுவாமிகளையும் சரணடைவோம்!...எல்லா இன்பமும் பெற்றிடுவோம்!...


இணையதள குறிப்புகள்:

     ஆலயங்கள் என்ற தலைப்பில் அண்ணன் சுவாமிகளுக்காக எழுப்பப்பட்டுள்ள கோயில்களைப்பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம். இந்த கோயில்கள் தனிதனியே வெவ்வேறு சீடர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரே நிர்வாகத்திற்கு உட்பட்டவையும் அல்ல. அக்கோயில்களை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் தங்குமிடம்/உணவு இவற்றை தாங்களாகவே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.இக்கோயில்கள் வளாகத்துக்குள் எவ்வித வசதியும் இதற்காக இல்லை.

    திருவாரூர் நகரில் இதற்கான வசதிகள் உள்ளன.போக்குவரத்து வசதியும் காலை 6.00 லிருந்து இரவு 9.00 வரை கிடைக்கும்.மேலும் இது குறித்த விளக்கங்களுக்கு, தேவைப்படின் sriannanswamigal@gmail.com என்ற    மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

    அண்ணனும் நாங்களும் என்ற தலைப்பில் அண்ணன் சுவாமிகளுக்கும் அவரது சீடர்கள்/பக்தர்கள் இவர்களுக்கு இடையே நிகழ்ந்த பல அரிய நிகழ்ச்சிகளை அவரது சீடர்கள்/பக்தர்கள் விவரிக்கும் ஒலிப்பதிவுகள் உள்ளன.சுமார் 30 ஒலிப்பதிவுகள் விளக்கங்களுடன் தரப்படும்.அன்பர்கள் தேவைப்படின் இப்பதிவுகளை Soundcloud இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.பழைய பதிவுகளை நீக்கி புதிய பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவதால் அன்பர்கள் இவ்வாறு பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது.

      களஞ்சியம் என்ற தலைப்பில் அண்ணன் சுவாமிகளின் கோயில்களில் நடைபெறும் பல விழாக்களின் புகைப்படங்கள்/ காணொலிக்காட்சிகள் / புத்தகங்கள்/கட்டுரைகள் இவைகள் கொடுக்கப்படும்  அன்பர்கள் தேவையானவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  பதிகம் என்ற தலைப்பில் அண்ணன் சுவாமிகளின் சரணக்கோவை மற்றும் ஆண்டாள்புரம் சுவாமிகளின் போற்றி தரப்பட்டுள்ளது, அன்பர்கள் தேவைப்படின் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    இந்த இணையதளத்தை பார்க்கும் அன்பர்கள் தங்களின் மேலான கருத்துக்களை பதிவுசெய்யுங்கள். தங்களின் மின்னஞ்சலையும்,தொலைபேசியையும் குறிப்பிடுங்கள்.இது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை தங்களுக்கு தெரிவிக்க மட்டுமே. 
      நாங்கள் அண்ணனின் பக்தர்களாக இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். அண்ணன் சுவாமிகளின் எந்த ஒரு ஆலயத்தின் சார்பாகவும் நாங்கள் இதை வெளியிடவில்லை.ஒம் அண்ணனே சரணம்!
https://sites.google.com/site/sriannanswamigaltamil/nigazhvugal/ithara-nigazhvugal