கம்பளம் 1

மந்திரக் கம்பளம் - வாண்டு மாமா எழுதியது 

முதல் பக்கம்

கம்பளம் 1 

கம்பளம் 2 

கம்பளம் 3

கம்பளம் 4

கம்பளம் 5

கம்பளம் 6

கம்பளம் 7 

கம்பளம் 8

கம்பளம் 9

கம்பளம் 10

கம்பளம் 11

கம்பளம் 12

கம்பளம் 13

கம்பளம் 14

கம்பளம் 15

கம்பளம் 16

கம்பளம் 17

kambalam18

ரொம்ப ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலே விசித்திரபுரி என்று ஒரு நாடு இருந்தது. இந்த மந்திரபுரியை மந்தஹாச மகாராஜா என்பவர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் ரொம்ப மந்தபுத்தியுள்ளவர், ஆனால் ரொம்ப நல்லவர். ராணியின் பெயர் ரத்தினாவதி. ராணியும் ராஜாவும் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இது கொஞ்ச காலம்தான் நீடித்தது. அவர்களை மெள்ள மெள்ள ஏக்கம் வாட்டலாயிற்று. ஏன், எதனால்?

விசித்திரபுரிக்கு அடுத்த வாரிசாக ஒரு இளவரசன் இன்னும் தோன்றாதுதான். மன்னருக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். ராணிக்கோ இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. 'ஒரு குழந்தையைக் கொஞ்சி விளையாடக் கொடுத்து வைக்கவில்லையே? தான் தாயாகவில்லையே என்ற ஏக்கம் பெருகலாயிற்று ரத்னாவுக்கு. மன்னர் மந்தஹாசரின் நாட்டை அடுத்திருந்த கானகத்தில் பல மலைக்குகைகள் இருந்தன. அதில் காலமெல்லாம் கண் மூடிக் கடவுளை நினைத்துத் தவம் புரியும் முனிவர்கள் பலர் இருந்தார்கள். இவர்களிடம் போய் ஆசி பெற்று வந்தால் தமக்கு ஒரு மகன் பிறக்க அவர்கள் அருள்வார்கள் என்று நம்பினார் மன்னர். ஆனால், ராணியோ இந்த எண்ணத்துக்கே எதிரியாக இருந்தாள். அவளுக்கு சாமியார்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்களால் சின்ன வயதில் ரொம்பவும் அவதிப்பட்டவள் ராணி. அதனால்தான் ஜடாமுடி தரித்த சாமியார்களைக் கண்டாலே அவள் ஓடி ஒளிவாள். முகம் சுளிப்பாள். ஆத்திரப்படுவாள். இதெல்லாம் மன்னருக்குத் தெரியும். ஆகவே தம் எண்ணத்தைக் கைவிட்டு விட்டார். நாட்டையே கூட ராணிதான் நிர்வகித்து வந்தாள். அவர் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டார் மன்னர். ராணிக்கு அடங்கிய பொம்மை அவர்.

தங்களது காலத்துக்குப் பிறகு விசித்திரபுரி வேறு மன்னரின் வசமாகி விடுமே என்று தமக்குப் பிள்ளை இல்லாத குறையை எண்ணியபடி நான்மாடக் கூடலில் அமர்ந்திருந்த மந்தஹாச மகாராஜா அரைத்தூக்கத்தில் இருந்தார். அப்போது அவர் மனத்திரையிலே ரத்தினாவதியைத் தம் மனைவியாக்கிக் கொண்ட அந்த நிகழ்ச்சி தோன்றலாயிற்று.

இளவரசராக இருக்கும் போதே மந்தஹாசர் மந்தமாகத்தான் இருப்பார். வீர விளையாட்டுக்களிலோ வேட்டையாடுவதிலோ நாட்டம் கிடையாது. ஒரு சமயம் பெரிய ராஜா தம் மகனைக் கட்டாயப்படுத்தி வேட்டைக்கு அனுப்பினார். காட்டுக்குப் போனவரர் தம்மோடு வந்தவர்களுக்குப் போக்குக் காட்டி விட்டுத் தனியாகப் பிரிந்து போனான் மந்தஹாசன். 'முயலையும் மானையும் புலியையும் துரத்திக் கொண்டு ஓடுவதாவது? கானகத்து நிழலில் கண்மூடிப் படுத்தால் எவ்வளவு சுகமாகத் தூக்கம் வரும். இதை அனுபவிக்காமல் குதிரையை விரட்டிக் கொண்டு வேட்டையாட அலைவது முட்டாள்தனம்' என்று ஒரு குகைக்குள் புகுந்து வசதியாகப் படுத்துக் கொண்டான் இளவரசன் மந்தஹாசன். குளுகுளுவென்ற காற்று இதமாக இருந்தது. இனிமையான தூக்கமும் அவனைத் தழுவிக் கொண்டது.

அந்தக் குகைக்குள் ஒரு பெரிய மிருகம் வசித்து வந்தது. நீண்ட வால், பயங்கரமான முகம், பெரிய வாய், அனல் கக்கும் அதன் மூச்சுக் காற்றுப் பட்டால் அத்தனையும் சாம்பல். இளவரசன் மந்தஹாசனின் குறட்டைச் சத்தம் குகைக்குள் தூங்கிக் கொண்டிருந்த பயங்கர மிருகத்தை எழுப்பி விட்டது. கோபத்துடன் வாலைச் சுழற்றித் தரையில் அடித்தபடி, வாயிலிருந்து தீ சுவாலை கக்க, அம்மிருகம் குகையின் வாசலுக்கு வந்தது. அப்போதும் இளவரசன் எழுந்திருக்கவில்லை. தன் கர்ஜனையைக் கேட்டும் கலங்காமல் கண் தூங்கும் மனிதனைக் கண்ட மிருகத்துக்கு வியப்பான வியப்பு. ஈட்டிகள் போன்ற செதில்களையுடைய தன் வாலினால் தூங்கும் இளவரசனின் காதருகில் கிசுகிசு மூட்டியது மிருகம். தன்னுடன் வேட்டையாட வந்தவர்கள்தான் தன் இன்பத்தைக்க லைக்க ஏதோ குறும்பு செய்வதாக எண்ணிய இளவரசன், 'என்னப்பா! இதெல்லாம் விளையாட்டு?" என்று கண்களைத் திறக்காமலேயே ஒரு கையால் மிருகத்தின் முள் வாலை ஒதுக்கித் தள்ளினான்.

அந்தக் காலத்து அந்தப் பொல்லாத மிருகம் பேசக் கூடச் செய்தது? "எதை விளாயாட்டு என்கிறாய்? நன்றாகக் கண்ணைத் திறந்து பார்" என்று அவன் முகத்துக்கு நேரே தன் நெருப்பு தன் நெருப்பு மூச்சை ஊதிற்று மிருகம்.

ஆனால் மந்தஹாசன் இப்போதும் கண்களைத் திறக்கவில்லை. தூக்கத்தின் இனிமையை இழக்க விரும்பாவில்லை அவன். "கொஞ்ச நேரம் நிம்மதியாகத் தூங்க விடுங்கப்பா. தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறியபடி மறுபுறம் திரும்பி வசதியாக முடங்கிக் கொண்டான். தன்னை லட்சியமே செய்யாத அந்த மனிதனைக் கண்ட அந்த மிருகத்தின் முகம் சிவந்தது.

"என்னை முத்தமிடு!" என்று கத்திற்று அந்தக் கொடிய மிருகம். எத்தனையோ வீராதி வீரர்களை எல்லாம் அது இப்படிக் கேட்டுமிருக்கிறது. அவர்கள் அந்த மிருகத்தை முத்தமிடச் சம்மதிக்காததினார் அதற்கு இரையாகி மாண்டு போயிருக்கிறார்கள். ஆனால் கண்களையே திறக்காமல் தூக்கத்தில் சொக்கிக் கிடக்கும் மந்தஹாசனுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாதே. தன் முன்னால் ஒரு பயங்கர மிருகம் உட்கார்ந்திருப்பதைக் கூட அவன் புரிந்து கொள்ளவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால்தானே?

"என்னை முத்தமிடு" என்ற குரல் கொஞ்சம் பெண் குரலைப் போலிருந்ததினால் இளவரசனும் கொஞ்சம் அசைந்து கொடுத்தான். அப்போதும் கண்களைத் திறக்கவில்லை. கண் மூடியபடியே, "முத்தம்தானே...? அதைக் கொடுத்து விட்டால் ஆளை நிம்மதியாகத் தூங்க விடுவாயல்லவா?" என்று கேட்டபடியே உதட்டைக் குவித்து தன் முகத்தருகே இருந்த மிருகத்துக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டுத் தன் தூக்கத்தைத் தொடரலானான். ஆனால்...?

இளவரசன் அந்தக் கொடிய மிருகத்துக்கு முத்தம் கொடுத்ததும் நடந்தது என்ன தெரியுமா? அழகே வடிவான ஒரு பெண்ணாக மாறியது அந்த மிருகம். ஒரு ராஜகுமாரிதான் ஒரு மந்திரவாதியினால் அப்படிக் கொடிய மிருகமாக்கப்பட்டிருந்தாள். 'மிருகமாக இருக்கும் உன்னை யாராவது துணிச்சலுடன் முத்தமிட்டால் உனக்கு உன்னுடைய பழைய உருவம் திரும்பி விடும்' என்று தன் மந்திர சக்திக்கு ஒரு மாற்றும் தெரிவித்திருந்தான் அவன். கோர ரூபமுடைய அந்த மிருகத்தைப் பார்த்தவர்கள் யார்தான் அவள் கேட்கும் முத்தத்தைக் கொடுப்பார்கள். ஆனால், இன்றோ மந்தஹாசன் தூக்க இன்பத்தால் இமைகளைத் திறக்காமலேயே அவள் கேட்டதைக் கொடுத்ததும் ராஜகுமாரி, தன்னுடைய சுய உருவத்தைப் பெற்று விட்டாள்.

"வீராதி வீரரே! என் அன்பரே! என் மணாளா!" என்று இனிய குரலால் மந்தஹாஸனைக் கூப்பிட்டுத் தொட்டு எழுப்பினாள் இளவரசி. "உங்களுக்காகத்தான் நான் இத்தனை காலமாக இந்தக் கொடிய உருவிலே காத்திருந்தேனே. இனி நான் உங்களுடையவள். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.

அரைத் தூக்கத்திலிருந்த இளவரசன் மந்தஹாசன் இனிய குரல் கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். கண்களை அகலத் திறந்து எதிரில் இருக்கும் அழகியைக் கண்டான். நல்ல வேளை! சற்று முன்பு வரையில் அவள் எப்படி இருந்தாள் என்பதை அவன் இப்படிக் கண் திறந்து பார்த்திருப்பானானால் குதிரையையும் மிஞ்சும் வேகத்தில் ஒடியிருப்பான். அவன் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அழகிப பெண்ணை, அதுவும் அவள் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகின்ற நிலையில். மந்தஹாசன் எப்போதுமே அதைப் பற்றியும் அதிகமாக ஆலோசிக்க மாட்டான். இப்போதும் அப்படித்தான். அந்தப் பெண் தன் பெயர் ரத்தினாவதி என்றாள். அவளைத் தன் குதிரையின் மீதி ஏற்றிக் கொண்டு விசித்திரபுரிக்குத் திரும்பினான். விரைவிலேயே ரத்தினாவதி மந்தஹாஸனின் மனைவியானாள். அவனை விட அவள் அறிவாளியாகவும் திறமைசாலியாகவும் இருந்தாள். ஆகவே மந்தஹாஸன் சிங்காதனம் ஏறியதும் நாட்டு நிர்வாகத்தை ரத்தினாவதியிடமே ஒப்புவித்து விட்டுப் பெயருக்கு மட்டும் மகாராஜாவாக வாழ்ந்து வந்தார் மந்தஹாஸர். மந்திரவாதிகளையும் முனிவர்களையும் கண்டாலே ரத்தினாவதிக்கு ஏன் பிடிக்காதென்று இப்போது புரிகிறதில்லையா?

ராணி ரத்தினாவதிக்குப் பயந்து கொண்டு முனிவர்களிடம் போகாதிருந்தாலும் அரண்மனையில் இருந்தபடியே அவர்களை உளமாற நினைத்து வேண்டிக் கொண்டார் மன்னர் மந்தஹாஸர். அவரது முன்னோர்களெல்லாம் யோகிகளை மதித்து மரியாதை செய்து வந்திருக்கிறார்களாம். மந்தஹாசருக்கும் அவர்களிடம் மரியாதை உண்டு. ராணிக்குப் பயந்துதான் அவர்களை அணுகாதிருந்தார். இவருடைய மானசீக வேண்டுதலினால்தானோ என்னவோ, ரத்தினாவதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னரின் மகிழ்ச்சிக்கும் நாட்டு மக்களின் ஆனந்தத்துக்கும் எல்லையே இல்லை. ராணியும் பூரித்துப் போனாள். குழந்தை பிறந்த பத்தவாது நாள் தொட்டிலில் இட்டுப் பெயர் சூட்டுவதை விழாவாகக் கொண்டாடுவது விசித்திரபுரியின் வழக்கம். அன்று நல்லோர் பெரியோர் எல்லோரையும் அழைப்பார்கள். எல்லோருடைய ஆசியையும் பெறுவதற்காக ஏற்பட்ட விழா அது. அரசகுமாரனுக்கான இந்த வைபவம் எப்படி இருக்கும் என்று சொல்லவா வேண்டும்? ஏகத் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிறந்த குழந்தையை மங்கல நீராட்டினார்கள். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது., மரகதக் கற்களினால் இழைத்த தொட்டில். அதில் பட்டாடை அணிந்தபடி பஞ்சு மெத்தையில் கண்மூடிக் கிடந்தான் இளவரசன். நாட்டு மக்களெல்லாம் வந்து வாழ்த்தினார்கள். ஆனால் மன்னர் யாரை எதிர்பார்த்தாரோ, அவர்கள் யாருமே வரவில்லை.

மலைக் குகைகளில் தவம் புரியும் யோகிகளையும் துறவிகளையும் முனிவர்களையும்தான் அவர் எதிர்பார்த்தது. அவர்கள் வந்துதான் குழந்தைக்குப் பெயர் வைப்பார்கள். ஆனால் இதுவரையில் யாரையுமே காணோமே? மந்திரியை அழைத்து விசாரித்தார். "தவசிகளுக்கும் துறவிகளுக்கும் யோகிகளுக்கும் இன்றைய நல்ல காரியத்தை அறிவித்து அழைப்பு அனுப்பவில்லையா?"

"மகாராணி அவர்கள் அவர்களை அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள்" என்றார் மந்திரி.

மந்தஹாச மகாராஜாவுக்குக் கோபம் வந்தது. ஆனால் மகாராணியிடம் அதைக் காட்ட முடியுமா? அருகிலிருந்த அவளிடம், "எங்கள் வமிசத்தில் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அவர்களை மறக்கவே மாட்டோம். நீ ஏன் இப்படி அவர்களைப் பகைத்துக் கொள்கிறாய்?" என்று பக்குவமாகக் கேட்டார்.

"உங்களிடம்தான் நான் முன்பே கண்டிப்பாகக் கூறியிருக்கிறேனே. இந்தச் சாமியார்கள், மந்திரவாதிகள், யோகிகள் யாருமே நம் நாட்டுக்குள் வரக் கூடாது. நம் இளவரசனையும் அவர்களைப் பற்றிய எண்ணமே இல்லாதபடு வளர்க்கப் போகிறேன்" என்றாள் ராணி ரத்தினாவதி கடுப்புடன்.

"அவர்களெல்லாம் நம் குடும்பத்துக்கு நன்மை செய்யக் கூடியவர்கள். நீ நினைப்பது போல்..." என்று ஏதோ கூற முற்பட்ட அரசரை இடைமறித்தாள் மகாராணி.

"இந்தப் பேச்சை இத்துடன் விட்டு விடலாம். நம் குழந்தைக்கு நீங்களே பெயரிடுங்கள்" என்று உத்தரவிட்டாள்.

அதற்கு மேல் அவரால் வாதாட முடியாது. அவளுக்கு அடங்கியவர் அவர். ஆகவே பெருமூச்சுடன் எழுந்திருந்தார். மலையடிவாரத்திலிருந்தும் குகைகளிலிருந்தும் வந்து கூடப் போகும் தவ முனிவர்களையும் யோகிகளையும் வரவேற்று உபசரித்து விருந்து கொடுக்க ஏற்பாடு செய்து ஏராளமான தலைவாழை இலைகள் போடப்பட்டிருந்தன. வெறிச்சோடிக் கிடந்த அந்தக் கூடத்தைப் பார்த்து அவர் மனம் அழுதது. கீர்த்தி வர்மன் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டித் திலகமிடும்போது 'ஹோ' என்று பேரிரைச்சலுடன், ஊழிக் காற்றோ என்னும்படியாக ஒரு சத்தம் உண்டாயிற்று. கூடியிருந்தோர் பயத்தினாலும் காற்றின் வேகத்தினாலும் கண்களை மூடிக் கொண்டார்கள். சட்டென்று காற்றும் ஒலியும் நின்றன. கண் திறந்து பார்த்த போது, அந்தக் கூடத்தில் பரிமாறப்பட்டிருந்த அத்தனை இலைகளின் முன்னாலும் முனிவர்களும் யோகிகளும் மந்திர தந்திரங்களில் வல்லவர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டார் மன்னர் மந்தஹாஸர். அவர் உள்ளம் நிறைந்தது. முகத்தில் மந்தஹாசம் குடி கொண்டது. ராணியோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கடுகடுப்புடன்.

மன்னரின் மானசீகமான வேண்டுதலை ஏற்று அவர்கள் வருகளை தந்தார்கள். வந்தவர்களை விரட்ட முடியுமா ராணியால்? மன்னரும் மற்றவர்களும் அகமும் முகமும் மலர அவர்களுக்கு அமுது படைத்து அடிபணிந்து வணங்கினார்கள். விருந்துண்ட பின் வந்திருந்த தவயோகிகளும் பெரியோர்களும் குழந்தையை ஆசீர்வதித்தார்கள். ஒரு யோகி குழந்தைக்கு ஒரு பட்டுப் பையைப் பரிசாகக் கொடுத்தார். அதில் உள்ள தங்க நாணயங்கள் எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கும். இன்னொருவர் ஒரே தப்படியில் ஒன்பது காத தூரத்தைக் கடக்கும் பாதுகையைப் பரிசாக அளித்தார். தலையில் அணிந்து கொண்டால் மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல், மறைந்து உலாவக் கூடிய மந்திரக் குல்லாயை ஒரு முனிவர் அளித்தார். விரும்பியதைக் கொடுக்கும் குளிகையைக் கொடுத்தார் வேறொருவர். விரித்துப் போட்டுக் அதன் மீது அமர்ந்து கொண்டு எங்கு போக வேண்டுமென்று நினைத்தாலும் அங்கு பறந்து செல்லும் மந்திரக் கம்பளத்தை ஒரு தவயோகி தந்தார். என்றும் இளமையோடு குன்றாத அழகுடன் விளங்கவும் மகாவீரனாகத் திகழவும், சகல சம்பத்துகளுடம் வாழவும் ஆசீர்வதிக்கப்பட்டான் கீர்த்தி வர்மன். கடைசியாக ஒரு தொண்டுக் கிழவர் தொட்டிலின் அருகில் வந்து தமது நடுங்கும் கரங்களால் குழந்தையின் தலையைத் தொட்டு வருடி, "குழந்தாய்! நீ எல்லோரையும் விட அதிக புத்திசாலியாக விளங்குவாய்" என்று ஆசீர்வதித்தார். எப்படி மாயமாகக் காற்று ரூபத்தில் வந்தார்களோ அப்படியே மறைந்தும் போனார்கள் அத்தனை பேரும்.

இத்தனை நேரமும் சிலையாக செய்வதறியாது உட்கார்ந்திருந்தாள் ராணி. குழந்தை பசியால் சிணுங்கினான். தன் உணர்வடைந்தவள் ஓடிப்போய் அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள். வேறொரு தாயாக இருந்திருந்தால் இத்தனை பெரியோர்களின் ஆசிகளையும் அன்பளிப்புகளையும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்து போயிருப்பாள். ஆனால் ரத்தினாவது யோகியர் அளித்த மந்திரத் தலைப்பாகை, பை, பாதரட்சை, கம்பளம், குளிகை, வாள் எல்லாவற்றையும் அப்படியே மூட்டையாகக் கட்டினாள். அரண்மனையின் வடக்குக் கோடியில் உள்ள ஓர் ஒதுக்குப் புறமான உப்பரிகையின் உச்சாணியில் ஒரு அறை உண்டு. குப்பை கூளங்களைக் கொண்டு போடுவது போல இவைகளையெல்லாம் அந்த அறையில் கொண்டு போய் போட்டு அதன் கதவைப் பூட்டிக் கொண்டு வரும்படி உத்தரவிட்டாள்.
 

வாண்டு மாமா கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர்.

 

இந்தப் புத்தகம் 1979ல் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.