என்னைப்பற்றிய சில தகவல்களும் கொஞ்சம் புனைவுகளும்

பெயர் நம்பிராஜன். ஊர் திருநெல்வேலி. புனைபெயர் விக்ரமாதித்யன். நாற்பது வருடங்களாக கவிதை எழுதி வருகிறேன். என்னைப் பற்றி நானே எழுதுவதை விடவும் என் நண்பர்களும் கவிஞர்களுமான இருவர் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகளை இங்கு பிரசுரிக்கிறேன். 
 
தமிழ்க்கலை வாழ்வில் விக்ரமாதித்யனின் ஆளுமை மகத்துவமான ஒன்று.காலத்தில் மேலும் மதிப்பு அதிகரிக்கக்கூடும். தமிழ்வாழ்வின் நுட்பமான சிக்கல்களை முதன்முதலாக நவீனகவிதைகளை உருவாக்கியவர் அவர். தனிமனித சிக்கல்களை மட்டுமல்ல,சமூக சிக்கல்களையும்,இறந்த காலம் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் பகுத்தறிவு சாராமல் வாழ்வில் அவை குறுக்கிடுவதையும் உணர்த்தியவர். பகுத்தறிவு சாராமல் அவரது மொத்த கவிதை உலகத்தை உற்றுநோக்கும் வாசகன் இதனை உணரமுடியும். வாழ்வின் தர்க்கமற்ற சாத்தியங்களுக்குள் தனது கவிதைகளுக்கும் வாழ்வுக்கும் இடமளித்துக் கொடுத்தவர் அவர்.இனிவரும் தலைமுறையினருக்கு கலையில் ஈடுபடும் மனபலத்தை தரக்கூடியது அவரது வாழ்வு.
 
நவீன மூளையால் விளங்கிக் கொள்ள முடியாத ஓரிடத்தில் அவரது வாழ்வும் கவிதைகளும் நிரம்பி இருக்கின்றன.தமிழகத்தில் இளம் கலைஞர்களோடு இவருக்குள்ள உறவுபோல வேறு எந்த சமகாலக் கலைஞனுக்கும் உறவு அமையவில்லை என்பது ஒரு உண்மை.
 
- லக்ஷ்மி மணிவண்ணன்

விக்ரமாதித்யனின் கவிதைகளை அசல் இந்திய-தமிழ்க் குடியானவனின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கவிதைகள் எனச் சொல்லத் தயக்கமில்லை எனக்கு. குடியானவன்,மரபுக்கும் நவீனத்திற்கும் இடையே உள்ள மத்தியப்பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டவன், புத்தனைப்போல். நவீனத்திடம் தான் மரபென்றும் மரபிடம் தான் நவீனமென்றும் பாவனை செய்பவன். திசைகள் ஒவ்வொரு புறமும் அழைத்தாலும் திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம் என லயித்திருப்பவன்.

ஓர் இந்திய- தமிழ் குடியானவனின் இன்றைய வெற்றிகளையும் தோல்விகளையும் சற்று உன்னித்துப் பார்த்தால் விக்ரமாதித்யனின் வெற்றி தோல்விகளையும் ஓரளவு அவதானித்துவிடலாம்.
 
தனது அன்றாடத்தின் முடியாத எளிய கவலைகளுடன், நிச்சயமில்லாத இயற்கையின் பெருங்கருணையை வேண்டிக் காத்திருப்பவன் குடியானவன். மழையும் வெயிலும் அவன் தலைமீது கவிழ்ந்து தொலைத்துவிடவும் கூடாது.
 
தமிழ் வாழ்வின் சாதாரணார்களின் குரல், அன்றாட உலகின் சப்தரேகைகள் (குடை இஇரிப்..பேர்), தமிழ் மனதின் அந்தரங்கப் பதற்றங்கள் (பொதுப்பதற்றம் எனத் தோற்றம்கொள்ளும்) ஆவலாதிகள், ஏலாமைகள் மற்றும் சவடால்களால் நிரம்பியது இவரது கவிதையுலகு. இவர் உலகில் புழங்கும் கடவுள்களும்கூட எளிய பிரச்னைகளுக்குத் தரையிறக்கம் செய்யப்பட்டவர்கள்தாம். குற்றாலநாதரான சிவனின் தலைவலிக்கு நிவாரணமாய்ச் சுக்குவெந்நீர் போதும். சூடான இட்லிகள் சுத்தமான உடுப்புகள், நிம்மதியான வீடு, நிறைவான போகம் இவைதாமே இவரது கவிதைப்பிரச்னை எனத் தோற்றம் கொள்ளக்கூடிய கவிதை உலகாய் இருந்தாலும், புதுக்கவிதையின் இறுக்கத்தைத் தளர்த்திச் சுதந்திரமான வெளிக்குள், தனி இசைமையாய்ப் படரவிட்ட தனிக்குரல்களில் இவரும் ஒருவர்.
 
தமிழ்வாழ்வு, தமிழ்மரபு, சித்தநிலை எனப் பல கதையாடல்களைத் தன்னைச் சுற்றி உருவாக்கியிருந்தாலும் அண்ணாச்சி விடலைத்தனத்தை இன்னும் தாண்டாதவர். பழைய நூல்கள், விளிம்புநிலை, ஜோதிடம், போதை, யாத்திரைகள், சஞ்சாரம் என, பல புலங்களில் இருந்தாலும், இவர் கவிதைகள் கைவைத்தியத்தின் எளிமையையும் அழகையும் கொண்டிருக்கின்றன-கைவைத்தியத்தின் போதாமையையும் சேர்த்தே.
 
தமிழகமெங்கும் இளம் ஆண் கவிஞர்களையும் வாசகர்களையும் நண்பர்களாகப் பெற்றிருப்பதன் மூலம் சாதாரணர்களுக்கு ஓரினப்புணர்சியாளரோ என்னும் மாயையைத் தருபவர். கட்டுப்பட்டித்தனங்கள் இருந்தாலும் ஜெயமோகன் போன்ற சர்க்கார் எழுத்தாளர்களுக்கு இன்னும் கசப்பான கலகக்காரராக இருப்பவர். 
 
'பறத்தல் சந்தோஷமானது
ஆனால் பட்டுப்பூச்சிகள்
மல்பரி இலைகளில்
தூங்கும்'
 
என்று விக்ரமாதித்யன் எழுதிய கவிதை போலவே வெளிப்படையான பெரிய நெருக்கடிகள் ஏதுமற்ற தமிழ்வாழ்க்கையின் நிலவரைவியல் சௌகரியத்துக்குள்,'தெய்வமும் ஐதிகத்தில் வாழும்' என, தான் வரித்துக்கொண்ட புழங்குவெளியிலேயே சௌகரியமாக சிறையிருக்கிறார். 
 
சமீபகாலமாக தமிழ்ச்சூழலில் கவிஞர்களை இனம்காணுபவராகத் தனக்குத்தானே பொறுப்பு எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு கமிஷனருக்குரிய நட்சத்திரங்களைத் தன் தாடியில் பொருத்தியுள்ளார். தன் ரசனை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இவர் சிரமப்பட்டுக் கட்டுமானம் செய்யும் தர்க்கங்கள் கவிஞர்களை விடுவிப்பதற்குப் பதிலாக குற்றப்பிரிவுகளின் சுமையை அதிகரித்து விபரீதமாக்கிவிடுகின்றன. இருப்பினும் மனம்தளராது ஒரு நல்ல கவிதையையும், நல்ல கவிஞனையும் தேடி விரைப்பான லத்தியுடன் பார்களிலும்,மேன்சன்களிலும் இரவு ரோந்து வருகிறார் விக்ரமாதித்யன்...இப்போது குறுக்குத்துறையிலும்....ஜாக்கிரதை
 
- சங்கர ராம சுப்ரமணியன்
 
 
 
 
 
Showing 0 items
OwnerDescriptionResolutionComplete
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
OwnerDescriptionResolutionComplete
Showing 0 items
Comments