ரசித்த பதிவுகள்


சுனை நீர் - ராகவன்

posted Jan 7, 2011, 8:28 PM by Mathavaraj J

ததும்ப வைக்கிற கதை. படித்து முடித்ததும் கண்கள் பெருக கணிணியில் எழுத்துக்கள் மங்கலாயின. உங்களுக்கும் அப்படித்தான் ஆகும்.  ராகவனின் எழுத்துக்களில் வாழ்க்கையும், மனிதமும் படர்ந்து கொண்டேயிருக்கின்றன.

மாது வரும்போது நிலைல இடிச்சுக்கக்கூடாது, மறக்காம தலை குனிஞ்சு வரச்சொல்லணும்.  இந்தத் தெரு பூரா இது போல குட்ட நில வாசலுதான். அந்தக் காலத்து வீடுகள் எல்லாமே. வாசல்ல இருந்து கொல்லப்புறம் வரை ஒரே அடுக்கடுக்கா இருக்கும், அய்யமாருங்க வீடு மாதிரி. இது மாதிரி வீடெல்லாம் மாதுவுக்கு பிடிக்கும், துளசி தீர்த்தம், பெருமாளு, ஆண்டாள் கோயில் யானை, பூசு மஞ்சள், ஆண்டாள் கோயில் வெங்கட்டய்யர் கடை அல்வா என்று யோசிக்கும் போதெ அவளுக்கு பட்டறைப்பையன வரச்சொன்னது ஞாபகம் வந்தது. பாலும் வாங்கச்சொல்லணும், சுடச்சுட அல்வாவும். மாதுவுக்கு ஏனோ பால்கோவா பிடிக்காது, அல்வான்னு பொண்டாட்டியவே வித்துடுவான்னு மாதுவோட அம்மா சொல்லி நிறையமுறை கேட்டிருக்கிறாள். 

பயணத்தில் - ரிஷபன்

posted Jan 7, 2011, 7:58 PM by Mathavaraj J

மிகச் சிறிய கவிதைதான் இது. படிக்கும்போதே நம் உள்ளங்காலில் கூச்சத்தை உணர முடியும். தானியம் என்பது நம் மரபணுக்களிலும், எவ்வளவு உயர்ந்த இடத்தில் அடுக்கப்பட்டு இருக்கிறது!  தானியங்களுக்குள் எத்தனை மரங்கள், எவ்வளவு பூக்கள், எத்தனையெத்தனை காய் கனிகள் என உலகமே அடங்கி இருக்கிறது. எங்கிருந்தெல்லாமோ பறவைகள் வந்து குரல் எழுப்பும். யாரெல்லாம் வந்து அதனடியில் இளைப்பாறுவார்கள். இவையெல்லாம் இந்தக் கவிதைக்குள்ளிருந்து கிளம்பி நம்முன்னால் பறக்கின்றன. இந்தக் கவிதையே ஒரு தானியம்! வாழ்த்துக்கள் ரிஷபன்.

லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு... - சந்தனமுல்லை

posted Jan 7, 2011, 7:50 PM by Mathavaraj J

 ஹாஸ்டல் வாழ்க்கை, அரட்டையென ஆரம்பித்து பெண்களின் உடை, கணவரின் விருப்பம், கலாச்சாரம் என பெண்மனதில் உறைந்து கிடக்கும் பல விஷயங்களை பொதுவெளியில் உடைக்கிறது இந்தப் பதிவு. சிரிப்பைப் பற்றவைத்தபடியே உண்மைகளை வெடிப்புறப் பேசுகிறது. 

கல்யாணமாகி விருந்துக்கு போறப்போ கண்டிப்பா புடைவை கட்டிட்டு போகணும்ன்ற சம்பிரதாயமே இருக்கு இல்லையா, பொதுவா! (கோயிலுக்கு போகும்போது புடைவை,தாவணியிலே போற‌மாதிரி. கோயிலுக்கும் புடைவைக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? பார‌ம்ப‌ரிய‌ க‌லாச்சார‌ லுக்தான் க‌ட‌வுளுக்கு உக‌ந்த‌தா?!)கல்யாணம்கிற நிறுவனத்துக்கு மட்டும் இது சொந்தம் இல்ல..பள்ளி, கல்லூரி நிறுவனங்களிலேயும் இது இருக்கே. சில வருடங்களுக்கு முன்னாடி அண்ணா யுனிவர்சிடிலே பொண்ணுங்க ஜீன்ஸ் டீ சர்ட்ல்லாம் போட்டுக்கிட்டு வரக்கூடாதுனெல்லாம் சொன்னாங்களே! டீச்சர்ங்கன்னா புடவைதான் கட்டணும்.ஏன்னா, புடவைதான் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை, லட்சணம்...இதெல்லாம் ஆண்களுக்கு மியூச்சுவலி எக்ஸ்க்ளுசிவ்! ஏன் இந்த இரட்டைநிலை?”

பால்ய ஸ்னேகிதியும் சில மழை நாட்களும் - பா.ராஜாராம்

posted Jan 2, 2011, 8:11 PM by Mathavaraj J

இந்த மனிதரிடம் வாழ்வும், எழுத்தும் அப்படியொரு சுகானுபவமாய் இருக்கிறது. இழப்பு, காத்திருப்பு, சந்தோஷம், அதிசயம் என தருணங்கள் மலர்வதையும், அவைகளை ஒரு ராகம் போல் மீட்டெடுக்கவும் இவரால் முடிகிறது. படியுங்கள்....

“அனாதரவான நெடுஞ்சாலையில் ஒரு மைல் கல் இருப்பது போலும், அக்கல்லில் மாடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பது போலும், போகிற வருகிற வாகனங்களுக்கெல்லாம் டாட்டா காட்டவே பிறவி எடுத்தது போலும், பிறகு அச்சிறுமியே மைல் கல்லாக சமைந்தது போலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் காட்சிகள் விரியத் தொடங்கியது- விழித்திருக்கும் போதே இழுத்துப் போகுமே கனவு.. அது போல!”

இரவுகள்.... என் இரவுகள் - ச.தமிழ்ச்செல்வன்

posted Jan 2, 2011, 8:04 PM by Mathavaraj J

மதுமிதா அவர்கள் என்னையும் இந்தத் தலைப்பில் எழுதிக் கேட்டு இருந்தார்கள். முடியவில்லை. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இப்படி எழுதி இருக்கிறார். அங்கங்கு ஒரே அலைவரிசை போல தென்பட்டாலும், இரவின் அடர்த்தியும், மொழியும், உலகமும் வாசிப்பவரை தூங்கவிடாமல் செய்கின்றன.

“ஆகவே பால்யகால இரவுகள் முழுக்கவுமே அப்பா அம்மாவை நினைத்து அழுதபடி படுக்கைக்குச் சென்ற இரவுகளாகவே எனக்கு அமைந்திருந்தன.விடுமுறைக்குச் சென்று அப்பா அம்மாவுடன் இருக்கும் நாட்களில் ”என் உடம்புதான் இங்கே இருக்கு என் மனசெல்லாம் அங்கேதான் இருக்கு ” என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.அந்த வார்த்தைகளை இழுத்துப் போர்த்திக்கொண்டு போர்வைக்குள் அழுதபடி கழிந்த இரவுகளே எனக்கு வாய்த்தன.எப்போது என் பள்ளி வாழ்க்கை பற்றி நினைத்தாலும் ஒரு சோகமான உணர்வே என்னைப் பீடித்து வாட்டம் மிகக் கொள்வது என் மனநிலையாகிவிட்டது.சில ஆண்டுகள் கழித்து எனக்கு அடுத்தவனான தம்பி இளங்கோ(கோணங்கி)வும் என் போர்வைக்குள் வந்து படுத்துக்கொண்டான்.”

நிறங்கள் - செல்வநாயகி

posted Dec 23, 2010, 8:18 PM by Mathavaraj J

தலைப்பின் வழியாக கவிதைக்குள் செல்லும்போது, கவிதை ஒற்றையடிப்பாதையாய் இல்லாமல் பெரும் வெளியாய் விரிந்து கிடக்கிறது. கடந்து போனவைகளின் மீது நினைவுகள் நிறங்களாய் படர்வதை உணர முடியும். கவிதை சொன்னவிதத்தில் ஒரு சிறு தவறு இருப்பதாக அமரபாரதி பின்னூட்டத்தில் சொல்கிறார். படித்துப் பார்த்தால் தெரியும்.

நடந்து நடந்து புற்களைக் கொன்று
போட்ட ஒற்றையடிப்பாதை 
தனித்துக் கிடக்கிறது

மீண்டும் படர்கின்றன புற்களின் வேர்கள்
கால் அழுத்தமற்ற ஆசுவாசத்தோடு

கொன்றை மரம்கூட
பூக்களை உதிர்த்திருக்கிறது
கொண்டாட்டச் சிவப்பில்

நிழற்படம் - வேல்கண்ணன்

posted Dec 23, 2010, 8:10 PM by Mathavaraj J

கொஞ்சம் இடைவெளிக்குப் பின் வேல்கண்ணன் எழுதிய கவிதை இது. படித்து முடித்ததும் பெருமூச்சும், கனமும் ஒருசேர ஆட்கொள்கிறது. கவிதையிலிருந்து எழும் உணர்வுகள் வாசகனை பீடித்துக்கொள்வது நடக்கிறது இங்கே. ஒரு தாங்கயிலாத துயரத்தை நிழற்படத்தின் சுருள் சுருளான நினைவுகள் கனவின் மூலமோ மறக்க நினைக்கும் கனரக் வாகனத்தின் உறுமலின் மூலமோ சிரிப்புக்குப் பின்னே ஒளித்து வைத்திருக்கிறது குறுகிய வார்த்தைகள் கொண்டு உலுக்கிச் செல்லும் இந்தக் கவிதை போல.” என்று பின்னூட்டத்தில் அவர்கள் சொல்லியிருப்பது உண்மை!

மவுனங்கள்
மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும்
சறுக்கி சாய்ந்து விழுகிறது என் கணைகள்.
மரத்தின் உச்சியை வெறித்துக்கொண்டே
உட்கார்ந்திருக்கும்
அந்த பெரியவரை/அவரை பார்த்துக்கொண்டுயிருக்கும் என்னை
மேலதிகமாக என்ன நினைத்துவிட முடியும்
'பைத்தியம்'  என்பதை தவிர.

சில பகிர்வுகள் - செ.சரவணக்குமார்

posted Dec 23, 2010, 8:03 PM by Mathavaraj J   [ updated Dec 23, 2010, 8:10 PM ]

அனுபவங்களையும், நினைவுகளையும், செய்திகளையும் பகிர்ந்து வரும் பத்தி எழுத்துக்கள் வலைப்பக்கங்களின் சிறப்புகளில் ஒன்று.  அனாயாசமான நடையும், இயல்பான தொனியும் சிலருக்கே வாய்க்கின்றன. அதில் செ.சரவணக்குமார் ஒருவர். அவரது பகிர்வுகள் நல்ல தெறிப்புகளோடு இருக்கின்றன.

சமீபத்தில் ஜெய், விஜயலட்சுமி நடித்த ஒரு பாடாவதிப் படத்தை கொஞ்சம் பார்த்தேன். மழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் விஜயலட்சுமியை ஜெய் தனது ரெய்ன் கோர்ட்டால் நனையாமல் பத்திரமாக கட்டிடத்திற்குள் அழைத்துச் செல்வதைப்போல ஒரு காட்சி. வலிந்து திணிக்கப்பட்டது போன்ற காட்சியாக அது இருந்தது பெரும் சலிப்பையே ஏற்படுத்தியது. நமது சேரன் தன் பங்கிற்கு பொக்கிஷமாக கிளாசிக்கை எடுத்து நமது பொறுமையை கூடுமானவரை சோதித்தார். ஆனால் மணிகண்டனோ அப்படியே இரண்டு காலகட்டங்கள், இரண்டு காதல்கள், இரட்டை வேடம் என்று கிளாசிக்கை மொத்தமாகத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். எனது கோபமெல்லாம் இத்தனை நல்ல படத்தைக் காப்பியடித்தீர்களே அதை ரசிக்கும்படியாவது கொடுக்க முடிந்ததா? என்பதே.”

விட்டில் பூச்சிகள் - அம்பிகா

posted Dec 15, 2010, 12:43 AM by Mathavaraj J

அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது போல இருக்கும் அம்பிகாவின் இந்தப் பதிவு, பெண்ணுலகத்தின் வதையையும், வலியையும் கொண்டதாயிருக்கிறது. இரண்டு சம்பவங்களுமே நாம் அறிந்ததாக இருக்கக் கூடும். ஆனால், அவைகளுக்குள் இருக்கிற இருட்டை பார்த்திருக்கிறோமா? கேள்விகளும், கிடைக்காத பதில்களும் உலுக்குகின்றன.

ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்
என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள் கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர், முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள் இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில் அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்துக்கிறது.

முழுவதும் படிக்க...

தேசிய வெறுஞ்சாலை - toto

posted Dec 15, 2010, 12:43 AM by Mathavaraj J

சமீபத்தில் இவர் எழுதியிருக்கும் மூன்று நான்கு கவிதைகளும் இழப்பின் வேதனையை பகிர்ந்துகொள்வதாகவே இருக்கிறது. அதற்குள்ளும் இவருக்கென்ற எள்ளல் இல்லாமல் இல்லை. நம் பயணங்களின் ஊடாக நாம் பார்த்த, இனி பார்க்கவே முடியாத காட்சிகள் இங்கே...

அறுவ‌டை செய்த‌ நெல்ப‌யிர்
பர‌ப்ப‌ப்ப‌டுவ‌தில்லை

நீள‌மான‌ கோரைப்பாய்
காய‌வைக்க‌ப்படுவ‌தில்லை

முழுவதும் படிக்க...

1-10 of 21

Comments