Home

'கவனகச் செம்மல்'
முனைவர் கலை. செழியன்

மனித ஆற்றலுக்குச், சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்வது கவனகக்கலை. கலப்படம் இல்லாத நினைவாற்றல் கவனகக் கலையின் பெருஞ்சிறப்பு. ஒரே நேரத்தில் கேட்கப்படும் பல்வேறு வினாக்களை நினைவில் கொண்டு பதிலுரைத்தல் பார்வை யாளர்களை வியப்பில் ஆழ்த்தும். மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர்க்குப் புதியதொரு மனத்துணிச்சலையும் நம்பிக்கையையும் வழங்குவதே கவனகக்கலையின் தனிச்சிறப்பு.

             படைப்பாற்றலை வெளிப்படுத்தலும் தூண்டலும் இக்கலையின் இன்னொரு பக்கம். பார்வையாளர்களே வினா தொடுத்துச் சோதிப்பதனால் நிகழ்ச்சி முழுமையும் ‘பார்வையாளர்-நிகழ்த்துநர்’ ஒருங்கிணைப்பு எப்போதுமே இருத்தல், கூடுதல் சிறப்பு. வினாக்களுக்கு விடைகளை உடனுக்குடன் கூறுவதனால் கைதட்டலும் எழுச்சிப் பெருக்கும் கவனக நிகழ்ச்சியின் வரவேற்பை உணர்த்தும்.

 

            எட்டு வினாக்கள் தொடங்கி ஒரே நேரத்தில் நூறு வினாக்களை நினைவில் கொண்டவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர். தற்போது, கவனகர் கலை. செழியன் 70 வினாக்களை ஒரே நேரத்தில் கையாளக் கூடிய ‘எழுபதின் கவனகம்’ நிகழ்ச்சியினை உலகெங்கும் நிகழ்த்தி வருகிறார்.

             திருக்குறள், சதுரங்கம் விளையாடுதல், சிற்பம் செதுக்குதல், நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது நிகழும் தொடுதல் மற்றும் மணியடித்தல் ஆகியவற்றையும் கவனித்து நினைவில் கொள்ளல், பெரிய எண் கொண்ட கழித்தல் கணக்கு, மாயச்சதுரம் அமைத்தல், கொடுக்கும் ஈற்றடிக்கு ஏற்பப் புதிய வெண்பா (செய்யுள்) எழுதுதல், கட்டளைக்கலித்துறை, சிலேடை வெண்பா இயற்றல், புலமைப் புதுமை என வினாக்களின் பட்டியல் தொடரும். இவை போன்று 70 வினாக்களை ஒரே நேரத்தில் கையாளுவதுடன் அவற்றை நினைவிலும் கொண்டு மனித ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ‘எழுபதின் கவனகம்’ நிகழ்த்தி வருகிறார் கலை. செழியன்!

             13 வயதிலிருந்து கவனகக் கலை நிகழ்த்தி வருகிறார். தமிழகத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்விச் சாலைகள், இலக்கியச் சங்கங்கள், ஆன்மிக மன்றங்கள், அரசு சாராத் தொண்டு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் எனப் பல தளங்களில் கவனகம் நிகழ்த்தியுள்ளார். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இக்கலையைச் செய்துள்ளார்.


            தாய்லாந்து, இலங்கை, மலேசியா, அமெரிக்கா ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று கவனகக்கலை, தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைப் பரப்பியுள்ளார்; பரப்பியும் வருகிறார். 

v சென்னைப் பல்கலைக்கழகம்

v பெரியார் பல்கலைக்கழகம்

v அண்ணாமலை பல்கலைக்கழகம்

v அண்ணா பல்கலைக்கழகம்

v மதுரை வேளாண் பல்கலைக்கழகம்

v உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

v இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT)

v அழகப்பா பல்கலைக்கழகம்

v தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்

முதலிய பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் கவனகம் நிகழ்த்தி யுள்ளார்.


Demo at Delivar Tamil School

அமெரிக்காவில் உள்ள                                                                                                    

Ø  வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு

Ø  கனெக்டிகட் தமிழ்ச்சங்கம்

Ø  மிசோரி தமிழ்ச்சங்கம்

Ø  ஊஸ்டன் பாரதி கலைமன்றம்

Ø  நியூ செர்சி தமிழ்ச்சங்கம்

Ø  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

Ø  சாஸ்தா தமிழ் அறக்கட்டளை

Ø  சார்லெட் தமிழ்ச்சங்கம்

Ø  பனைநிலத் தமிழ்ச்சங்கம்

Ø  டெலிவர் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி

Ø  சுழற்சங்கங்கள் (Rotary Clubs)

Ø  புஸ்ட் அரசு உயர்நிலைப் பள்ளி (Buist Public High School)

Ø  எல்சின் சமூகக் கல்லூரி (Elgin Community College)

Ø  தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகம் (Medical University of South Carolina)

முதலிய பல்வேறு இடங்களில் கவனகம் நிகழ்த்தி யுள்ளார்.

 

            ‘நினைவாற்றலில் மனப்புரட்சி’ எனும் நூலியற்றித் தமிழக அரசின் உயர்விருது அமைப்பான ‘தமிழிலக்கியச் சங்கப்பலகைக் குறள்பீட’த்தின் பாராட்டிதழ் பரிசினை 2001 சனவரி திங்கள் பெற்றார். இவ்விருது, தமிழக முதல்வர் முன்னிலையில் கல்வி அமைச்சரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

             எங்கள் அமைப்பில் (நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம்) கடந்த 74 மாதங்களாகத் ‘தொல்காப்பியத் தொடர் இலக்கணப் பொழிவு’ நிகழ்த்தி வருகிறார். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து மாதந்தோறும் தொழிலாளர் அமைப்பொன்றில் பேசி வருகிறார். இவை கலை.செழியனின் மொழி மற்றும் சமூக ஈடுபாட்டிற்குச் சான்றாக அமைகின்றன.

             தமிழகத்தின் ஒப்புயர்வு கூறவியலாக் கலைகளுள் ஒன்றான ‘கவனகக்கலை’யைப் பலரும் அறியும்படி கவனகர் கலை.செழியன் செயல்படுவது பாராட்டுக்குரியது. தமிழகக் கலைச்செல்வத்தைப் பிற மொழியாளரும் புரிந்து கொள்ளச் செய்யும் கலை.செழியனின் ஆர்வம் வரவேற்கத்தக்கது.

 

- ப. கண்ணையா

தலைவர், நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம்