கலிலேயா கி.பி 31
இயேசு சீடர்களுடன் இறங்கிவந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும், யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும், தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை
I. வேண்டுதல் செய்வது எப்படி?
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்
’விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆமென்.
(உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும் இருந்து, தந்தையின் பெயரை தூய்மைப்படுத்துவோம் என்பதே முதல் வேண்டுதல்)
மனிதர் கெட்டுப்போகாதபடி உலகிற்கு உவர்ப்புள்ள உப்பாய் இருங்கள்
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு நல்லது, ஆனால். உப்பு உவர்ப்பற்றுப்போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது, வேறுஒன்றுக்கும் உதவாது. அது, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்.
உலகிற்கு ஒளி தரும் விளக்காய் இருங்கள்
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது.
எவரும் விளக்கை ஏற்றி, மரக்காலுக்குள் வைப்பதில்லை, மாறாக, விளக்குத் தண்டின்மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்
தந்தையின் பெயர் தூயதெனப் பொற்றப்பெறுக
இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள், உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்,
இறையாட்சியைப் பெற்றவர்
ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர், ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர், ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர், ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு, மக்கள் உங்களை வெறுத்து, துன்புறுத்தி, ஒதுக்கிவைத்து, உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றோர். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கத்தரிசிகளையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள், ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
இறையாட்சியை இழந்தவர்
செல்வர்களே, உங்களுக்குக் கேடு. ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.
இப்போது உண்டு-கொழுத்திருப்போரே, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், துயருற்று அழுவீர்கள்
மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது, ஐயோ உங்களுக்குக் கேடு. ஏனெனில், அவர்களின் மூதாதையரும் போலி-இறைவாக்கினர்களுக்கு இவ்வாறே செய்தார்கள்
’″விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை, கண்ணால், இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி, வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.
’″பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்″ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின்மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை. மண்ணுலகின்மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம்மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின்மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கருப்பாக்கவோ உங்களால் இயலாது.
ஆகவே, நீங்கள் பேசும்போது, ’ஆம்’ என்றால் ’ஆம்’ எனவும், ’இல்லை’ என்றால் ’இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.’
’″கண்ணுக்குக் கண்″, ″பல்லுக்குப் பல்″ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரும்படிக் கட்டாயப்படுத்தினால், அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.
’″உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக″, ″பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? பாவிகளும், வரிதண்டுவோரும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால்உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே.
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்குமட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால், நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிறஇனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால், உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன், பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள், உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்,
உங்களைத் இகழ்ந்து பேசுவோருக்காகவும் துன்புறுத்துவோருக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள். திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாக இருக்கும்.
உங்கள் விண்ணகத் தந்தையின் மக்களாய் இருங்கள்
இப்படிச் செய்வதால், நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்களாய் இருப்பீர்கள். உன்னத கடவுளின் பிள்ளைகளாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். நன்றிகேட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். உங்கள் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக்குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீரகள். மக்கள் தம்மை புகழவேண்டுமென்று வெளிவேடகக்காரர் தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.
6) மக்கள் பார்க்கும்படி பரிசேயரைப்போல் ஜெபம் செய்யாதீர்
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு, மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய்உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
7) பிறஇனத்தவரைப்போல் நீண்ட ஜெபம் செய்யாதீர்
மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, பிறஇனத்தவரைப் போலப் பிதற்றவேண்டாம், மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால், தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும்முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.