Thuglal - 37 Part 2
 

ரங்கநாதன், சென்னை : இன்று மிகவும் அதிகமாகப் பேசப்படுவது ஒன்று "சிவாஜி' படம். அல்லது "பெரியார்' படம். பெரியார் படம் ஒருவேளை வர்த்தக ரீதியில் வெற்றி பெறுமானால், "கடவுள் இல்லை' என்ற சித்தாந்தம் தமிழ்நாட்டில் மீண்டும் பரவுமா? இரண்டாவது உள்ளாட்சித் தேர்தல் நடந்த விதம் பற்றி இருவிதமான தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. இதையொட்டி கௌன்சிலர்கள் எல்லாம் எந்த முடிவையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்று சென்னை மேயர் கூறியிருக்கிறார்.

மூன்றாவது கடந்த ஒன்பது மாதங்களாக தி.மு.க. ஆட்சி பிரச்சனை எதுவுமின்றி போய்க் கொண்டிருக்கிறது. இதே நிலை அடுத்து ஐந்து வருடமும் நீடிக்குமா? ரஜினி அவர்களை சங்கடப்படுத்துவதற்காக, வருந்துகிறேன். அரசியலுக்கு வருவதில்லை என்று அவர் முடிவெடுத்து விட்டது போலத் தெரிகிறது. அத்தகைய முடிவுக்கு அவர் வரக் கூடாது என்று நான் கடவுளை வேண்டுகிறேன். குறைந்தபட்சம் மக்கள் நலனுக்காக ஒரு அமைப்பையாவது அவர் காண வேண்டும். குறைந்தபட்சம் நதிகளை இணைப்பதற்கான 


நோக்கத்தோடு ஒரு இயக்கத்தையாவது அவர் தொடங்க வேண்டும். ஏனென்றால் ஏராளமான மக்கள் அவர் பக்கம் உள்ளனர். காலையில் எழுந்ததும் பத்திரிகையைப் பார்க்கும் போது "ரஜினி அரசியலுக்கு வருகிறாரா?' என்ற செய்தியைத் தெரிந்து கொள்வதற்கு, ஒரு பெரும் கூட்டம் இன்னும் இருக்கிறது. அவர்களுள் நானும் ஒருவன். அவருக்கு என ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. எனவே, அவர் ஒரு அமைப்பை தொடங்க வேண்டும்.

சோ : பெரியார் படம் வெற்றி பெற்றால், கடவுள் இல்லை என்ற கொள்கை பரவுமா என்று கேட்டார். அதுபோல கடவுள் இல்லை என்று யாராவது சொல்ல ஆரம்பித்தால், பக்தி பெருகும். பெரியார், வினாயகர் சிலையை உடைத்தார். அதன் பிறகுதான் ஒவ்வொரு இடத்திலும் விநாயகர்; தெருவுக்கு நான்கு விநாயகர் வந்தது. அப்போது ராஜாஜி கூட, "பெரியாரை நான் இன்னொரு ஆழ்வாராக ஏற்கிறேன்' என்று சொன்னார். ஏனென்றால் அவரால் அவ்வளவு விநாயகர் சிலைகள் வந்தன. ஆகவே, இவர்கள் சொல்லி மாறுவது அல்ல அது. பக்தி என்பது ஹிந்து மதத்தில் மிகவும்
ஊறிப்போன ஒன்று.

பெரியார் என்ன நினைத்தார்? "கடவுளை வைத்துக் கொண்டுதான் பிராமணன் ஏமாற்றுகிறான். கடவுளே இல்லை என்று சொல்லிவிட்டால், இந்த பிராமண ஆதிக்கம் போய் விடும்' என்று அவர் பிராமண எதிர்ப்புக்காக நினைத்தார். அது தவறு. தலைகீழாகப் புரிந்து கொண்டு விட்டார். பிராமண எதிர்ப்பு மட்டும் அவர்
செய்திருந்தால், அது இன்னும் கூட எடுபட்டிருக்கும். கடவுளையும் சேர்த்து எதிர்த்ததுதான் தவறாகப் போய்விட்டது.

எந்தக் கடவுளும் பிராமணக் கடவுள் இல்லையே? ராமர் க்ஷத்ரியன், கிருஷ்ணர் யாதவர், பரமேச்வரன் என்ன ஜாதி என்பது யாருக்கும் தெரியாது. பிராமணன்தான் எல்லாவற்றையும் எழுதி, பொய்யாக சிருஷ்டி செய்து வைத்திருக்கிறான் என்றால், ஏன் அவன் ஒரு பிராமணனைக் கூட தெய்வமாக மாற்றவில்லை?

இன்று சமூகத்தில் பிராமணன், பிராமணரல்லாதார் என்று வந்திருக்கிறது. பிராமணரல்லாதவருக்கு சூத்ரன் என்று சொல்லி விட்டார்கள். பிராமணரல்லாதவன் என்பதில் க்ஷத்ரியன், வைசியன், சூத்ரன் எல்லாம் அடக்கம். ஆனால் பிராமணரல்லாதார் எல்லாம் சூத்ரன் என்று சொல்வது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு வந்த வக்கிரம் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால், இன்று கடவுளாக இருப்பவர்கள் அனைவரும் சூத்ரன்தான். ராமர் சூத்ரன், கிருஷ்ணர் சூத்ரன்,
பரமசிவன் சூத்ரன், எல்லோரும் சூத்ரன். ஏன் பிராமணன் இது போல செய்து விட்டுப் போனான்? இதிலிருந்தே இவையெல்லாம் பொய்யல்ல. வாஸ்தவமான உண்மைகள் என்று புரிகிறது.

இன்றைய சமூகத்தில் எல்லோருமே வைசியர்கள் என்பது என் அபிப்பிராயம். பிராமணனும் கிடையாது. எவனும் கிடையாது. நான் பிராமணனா? அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த அரசுக்குத்தான் நான் பிராமணன். அதனால் நான் ஏதாவது சொன்னால் உடனே "பார்ப்பன சூழ்ச்சி' என்று வந்து விடும். கலைஞர் பத்திரிகைகளுக்குக் கூட பூணூல் போட்டு விடுகிறார். இது பாப்பார பத்திரிகை என்கிறார். "துக்ளக்' ஒரு பார்ப்பாரப் பத்திரிகை. க்ஷத்திரியப் பத்திரிகை. வைசியப் பத்திரிகை என்றெல்லாம் வேறு இருக்கிறது போலிருக்கிறது. எல்லோரும்
வைசியர்கள்தானே! "துக்ளக்'கும் வைசியன்தானே! வியாபாரம்தானே. எல்லா பிராமணர்களும் ஒன்று தங்கள் சேவையை விற்கிறார்கள். அல்லது பொருளை விற்கிறார்கள். பிராமணன் உஞ்ச விருத்தி வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியவன்
– அதாவது நெற்களத்தில் விழுந்து கிடக்கும் நெல்மணிகளை பொறுக்கி எடுத்து உண்ண வேண்டியவன். இன்று பணம் சம்பாதிக்கிறான். அவன் எப்படி பிராமணனாவான்? அதே போல, எவனும் க்ஷத்ரியனும் கிடையாது. அந்த தைரியம் யாருக்கும் இல்லை. க்ஷத்ரியன் என்பவன் மக்களைக் காப்பாற்றுபவன். மக்களைக் காப்பாற்றும் வீரன் இன்று யாருமே கிடையாது. ஆகவே, எந்த ஜாதியும் கிடையாது. எல்லோரும் வைசியர்கள்தான். எல்லோருக்கும் வியாபாரம்தான்.

எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், இந்த பெரியார் படம், இப்போது முதலே நல்ல விளம்பரம் கிடைப்பதால் வெற்றி அடையலாம். வெற்றி அடைந்தாலும் கூட, அதனால் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கூட மாறாது. ஒருவர் கூட மாறப் போவதில்லை.

அந்தப் படத்தில் என்ன செய்ய வேண்டும்? கற்பு பற்றி பெரியார் சொன்னதையெல்லாம் கொண்டு வர வேண்டும். "கற்பு என்பது ஒரு சங்கிலி; இதை உடைத்தெறிய வேண்டும்; திருமணம் கூடாது; திருமணம் என்பதே பெண்களுக்கு விலங்கு போன்ற ஒரு சமாச்சாரம். இதெல்லாம் ஹோட்டலில் சென்று டிஃபன் சாப்பிடுவது போல, அவரவர்கள் விருப்பப்பட்ட ஹோட்டலுக்குப் போகலாம்... தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை... தமிழ் படிப்பவன் உருப்பட மாட்டான்...'. இந்த மாதிரியெல்லாம் பெரியார் படத்தில் வந்தால், அதனால் தமிழ் கெட்டுப் போக போவதில்லை. அதனால் கற்பு பாழாகப் போவதில்லை. அதனால் திருமணங்கள் நின்று விடப் போவதில்லை. அதே மாதிரி கடவுள் மறுப்புக் கொள்கைகள் அதில் வந்தாலும், கடவுள் நம்பிக்கை அழிந்து விடப் போவதில்லை.

என்னுடைய கருத்தின்படி பெரியார் ஒரு எஜுகேஷனிஸ்ட்டாக தொடங்கி, என்டர்டெய்னராக முடிந்து விட்டார்.

கலைஞர் ஆட்சி பற்றி கேட்டார். இன்னும் கொஞ்சம் நடக்கட்டும். அப்பொழுதுதான் அவர்களைப் பற்றி தெரியவரும். அவர்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆட்சி உடனே மாறக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மாற வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை.

ரஜினி ஏதாவது ஒரு அமைப்பு, நதிநீர் இணைப்புக்காக ஆரம்பிக்க வேண்டும் என்றார். அதற்காக ஏற்கெனவே சில அமைப்புகள் இருக்கின்றன. அதைப் பற்றிக் கவலைப்படாத மத்திய அரசு வந்திருக்கிறது. அதைப் பற்றி மிகவும் கவலைப்பட்ட, அதில் முனைப்பு காட்டிய பா.ஜ.க.வை மக்கள் தோற்கடித்தார்கள். அதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? சொல்லப் போனால் அதற்கு அவர் தனது பங்களிப்பை செலுத்தவும் தயாராக இருந்தார். ஆகவே அவரைக் கொண்டு போய், நதிநீர் இணைப்புக்காக அமைப்பு ஆரம்பிக்கச் சொன்னால், ஏற்கெனவே பல அமைப்புகள் இருக்கும் நிலையில் அது ஒரு ஸ்டண்ட் மாதிரி இருக்குமே தவிர, அதில் அர்த்தம் இருக்காது. காரணம், இப்பிரச்சனையில் தற்போதைய மத்திய அரசு எதுவும் செய்யப் போவதில்லை.

டி. ஆழ்வான், மடிப்பாக்கம் :

ஹிந்து மஹா சமுத்திரத் தொடர் ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. மேலும் ஸ்ருதி, புராணங்கள் போன்ற நிறைய தகவல்களை, இளம் வயதினருக்குப் புரியக் கூடிய வகையில் ஆசிரியர் நன்றாக எழுதி இருந்தார். விஞ்ஞான ரீதியில் நிறைய
விஷயங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பது போன்ற சில தியரிகளை இப்போது விஞ்ஞான ரீதியில் சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களையும் ஹிந்து மஹா சமுத்திரத்தில் கொண்டு வந்தால், அது பள்ளி மாணவர்களுக்கு பயன் தரக் கூடியதாக இருக்கும்.

இரண்டு வருடத்துக்கு முன் இதே போல "துக்ளக்' ஆண்டு விழாவில், "இஸ்லாம் மதம் பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; அது பற்றி "துக்ளக்'கில் எழுதுகிறேன்' என்று ஆசிரியர் சொன்னார். அந்த முயற்சிகளை கொஞ்சம் ஆரம்பிக்கலாம். அணுஆயுத ஒப்பந்தத்தின் மூலம், நமக்குத் தெரிய வரும் ஒரே ஒரு அனுகூலம் என்னவென்றால், "மின்சார உற்பத்தியில் நமக்கு நிச்சயமாக தன்னிறைவு கிடைக்கும். இதைக் காண்பித்து அணுஆயுதத்தைச் சோதனை செய்கிறேன்' என்று சொல்லி, நமது மற்ற பல விஷயங்களை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

சோ : ஹிந்து மஹா சமுத்திரம் சிறுவர்களையும் சென்றடைய வேண்டும் என்று சொன்னார். சிறுவர்கள் "துக்ளக்' படிக்கிறார்கள் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் பாடப் புத்தகங்களைப் படித்தால் போதும்; அவர்கள் "துக்ளக்' படிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதற்கு மேலும் எளிமைப்படுத்தி இன்னும் விவரங்களை எல்லாம் நான் கொண்டு
வந்தேன் என்றால், அதைப் படிப்பதற்கே சிரமமாகி விடும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே அது கொஞ்சம் கடினமான விஷயம். அதை எவ்வளவு எளிமையாக்க முடியுமோ, அவ்வளவு எளிமையாகச் செய்து கொண்டு போகிறேன். அந்த அணுகுமுறையில் மாற்றம் செய்வதாக உத்தேசம் இல்லை.

இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம் இரண்டைப் பற்றியும் எழுதத்தான் வேண்டும். ஒரு கட்டுரைத் தொகுப்பை ஏற்கெனவே வாங்கிப் பார்த்தேன். கொஞ்சம் கடினமாக
இருந்தது. ஒரு பக்கம் ஹிந்து மஹா சமுத்திரம், ஒரு பக்கம் இஸ்லாமிய மதம், இன்னொரு பக்கம் கிறிஸ்தவ மதம் என்றால், "துக்ளக்'கில் வேறு செய்திகளுக்கு இடம் இருக்காது. இருந்தாலும் அதையும் செய்கிறேன்.

ஆர். மோகன், மயிலாடுதுறை :

பாகிஸ்தான் பிரச்சனையில் பா.ஜ.க. கடைப்பிடித்த அணுகுமுறைக்கும், தற்போது
காங்கிரஸ் கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் என்ன வித்தியாசம்? உத்திரப் பிரதேசத் தேர்தலில் அத்வானி என்ன செய்யப் போகிறார்? அத்வானி பிரதமராவதற்கு என்ன செய்ய வேண்டும்? மணிசங்கர் ஐயர் வீட்டுக் கல்யாணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்தது தவறா?

சோ :பாகிஸ்தான் பிரச்சனையை சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிற வரையில், அதனுடன் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாது என்பது பா.ஜ.க. எடுத்த நிலை. பேச்சுவார்த்தை நடந்து
கொண்டிருந்தாலும், இதைத்தான் திரும்பத் திரும்ப பா.ஜ.க. சொல்லிக்
கொண்டிருந்தது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிற வரையில், தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற வரையில், பேச்சுவார்த்தையில் அர்த்தமில்லை என்பதுதான் பா.ஜ.க.வின் நிலையாக இருந்தது. ஆனால் "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம்; இரு நாடுகளும் சேர்ந்து முயற்சி செய்வோம்' என்று இந்த அரசு செயல்படுகிறது.
இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை மிகவும் மென்மையாக இருக்கிறது. பா.ஜ.க.வின் அணுகுமுறை கடினமானது.

உத்திரப் பிரதேச தேர்தலில் அத்வானி என்ன செய்யப் போகிறார் என்று கேட்டார். உத்திரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. கணிசமாக வெற்றி பெற, அத்வானி முயற்சி மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.

மணிசங்கர் ஐயர் வீட்டு கல்யாணத்திற்கு ராஜபக்சே வந்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அது அர்த்தமற்ற எதிர்ப்பு. விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், அதில் அர்த்தமிருக்கிறது. தமிழர்களை, அவர்கள் கொலை செய்த அளவுக்கு, இலங்கை ராணுவம் கொலை செய்யவில்லை. இதுதான் உண்மை. தமிழ்த் தலைவர்களை எல்லாம் விடுதலைப் புலிகள் தீர்த்துக் கட்டினார்கள். பத்மநாபா போன்ற தீவிரவாத இயக்கங்களின் தலைவர்கள், அமிர்தலிங்கம் போன்ற மிதவாதிகள் – என்று எல்லோரையும் ஒழித்துக் கட்டி, தான் ஒருவனே தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பிரபாகரன் செய்த கொலைகள்
ஆயிரக்கணக்கானவை. இது தவிர, ஆங்காங்கே குண்டு வைப்பதும், தற்கொலைப் படையை அனுப்பி, பெரிய நாசத்தை உருவாக்குவதும் – இந்த மாதிரி செய்து கொண்டிருந்தால், பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இலங்கை அரசாங்கம் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்று சொல்ல முடியாது. மணிசங்கர் ஐயர் வீட்டு கல்யாணத்திற்கு ராஜபக்சே வந்ததில் எந்தத் தவறும் இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.

கிருஷ்ணமூர்த்தி, சித்தூர் :

திரு. எல்.கே. அத்வானி அவர்கள் அடுத்து பிரதமராவதற்கு வாய்ப்புகள் உள்ளதா, இல்லையா? அடுத்த 38ஆவது ஆண்டு விழாவை ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சோ :(ஆசிரியர் தனது தலையைச் சுட்டிக்காட்டி) திருப்பதிக்குச் சென்று ஆண்டு விழா நடத்தினால், சோ யார், வேறு யார் என்று அடையாளமே தெரியாது. யாரைப் பார்த்தாலுமே சோ மாதிரிதான் இருக்கும். ஆகையால் வேறு எங்கு வேண்டுமானாலும் ஆண்டு விழாவை நடத்தலாம். திருப்பதியில் நடத்தக் கூடாது. அத்வானி பிரதமராவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார். நிச்சயமாக இருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன். இதைப் பற்றி பிறகு பேசுகிறேன்.