Thuglak - 37 


 "துக்ளக்' 37ஆவது ஆண்டு நிறைவு விழா 14.1.2007 ஞாயிறு அன்று சென்னை, காமராஜ் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரு. எல்.கே அத்வானி கலந்து கொண்டு பேசினார். கூட்ட நிகழ்ச்சிகளை முடிந்தவரை சுருக்கித் தந்திருக்கிறோம்.

டி.ஆர். ரமேஷ், மயிலாப்பூர் :

முதலாவதாக வாக்கு வங்கி அரசியல், சில காலம் வரை குறிப்பிட்ட சமுதாயம், ஜாதி என்ற அளவில் இருந்தது. இப்போது இலவசம் என்ற பெயரில் அரசு பணத்தை அள்ளி விடுவது என்று மோசமாக விரிவடைந்துள்ளது. இந்த ஓட்டு வங்கி
அரசியலால், எந்த ஒரு அரசாலும் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த
முடியாது. ஒருபுறம், அவை பற்றி சிந்திக்கவே தயங்க வேண்டிய நிலை. அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் வழங்கப்படும் இந்த இலவசங்களும், கடன் தள்ளுபடிகளும், ஓட்டுப் பெறுவதற்காக அளிக்கப்படும் லஞ்சம்தானே? இந்த லஞ்சத்தை எப்படி சட்டம் அனுமதிக்கிறது?

இந்த ஓட்டு வங்கியின் மற்றொரு பரிணாமம், தமிழகக் கோவில்கள். இவற்றின் அன்றாட பூஜைகள் பெரும்பாலும் அவற்றுக்குச் சொந்தமான நிலங்களின் வருமானத்தை நம்பி இருக்கின்றன. ஆனால் இந்த நிலங்களுக்கு 25, 30 ஆண்டுகளாக குத்தகைப் பணம் கொடுக்கப்படவில்லை.

இந்த அநியாயத்தை அரசோ, அறநிலையத் துறையோ கண்டு கொள்வதில்லை. மேலும் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் ரெவின்யூ கோர்ட்டை மூடி வைத்தும்,
அநியாயச் சட்டங்கள் இயற்றியும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? கோவில்களுக்கு ஓட்டு கிடையாது. மடங்களுக்குக் கிடையாது. குத்தகை எடுத்தவர்களுக்கோ உண்டு. இந்த இடத்தில் ஒரு செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும். திருவையாறு கோவில் நிலங்களை குத்தகை எடுத்த ஹிந்துக்கள், அதற்கான குத்தகைத் தொகையைக் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இஸ்லாமியர்கள் இன்றளவும் அதைத் தவறாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நற்பண்பு வாழ்க. இந்தக் குத்தகை பாக்கி செலுத்தாத அநியாயத்தைப் பற்றி விரிவாக விசாரித்து, "துக்ளக்'கில் எழுத வேண்டும். மேலும் ஓட்டு வங்கி அரசியலுக்குத் தீர்வுதான் என்ன என்பதையும் அறிய விரும்புகிறேன்.

அத்வானி அவர்கள் முன்னிலையில் ஒரு கேள்வி. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஆதரவு நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அது ஓட்டாக மாற மறுக்கின்றது. அந்த ஆதரவு சக்தி, தேர்தல் அன்று கூட செய்தித்தாள் படித்து விட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது. அதை ஓட்டாக மாற்றவும், மேலும் ஆதரவு பெறவும் பா.ஜ.க. என்ன செய்ய வேண்டும்? ஏன், பா.ம.க. போல பா.ஜ.க.வும், ஒரு டி.வி. சேனல் தொடங்கக் கூடாது? கடைசியாக ஒரு கோரிக்கை. இதுவரை வெளிவந்துள்ள அனைத்து "துக்ளக்' இதழ்களையும் ஒரு டி.வி.டி. மூலம் தொகுத்து அளிக்குமாறு ஆசிரியர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சோ : இலவசங்கள் மற்றும் ஓட்டு வங்கி அரசியல் பற்றி சொன்னார். இலவசங்கள் கொடுப்பதே தவறு என்று நான் சொல்லி விட மாட்டேன். மிகவும் முன்னேறிய நாடுகளில் கூட வேலை வாய்ப்பற்றவர்களுக்கு அலவன்ஸ் கொடுக்கிறார்கள். வசதி இல்லாதவர்களுக்கு இலவச மருத்துவ உதவி வசதி இருக்கிறது. அப்படி இருக்க, ஏழைகள் மிகுந்திருக்கும் இந்நாட்டில், இலவசங்களே தரப்படக் கூடாது என்பது சரியாக இருக்காது. மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவுபடுத்திய போது, (முதலில் அதைக் கொண்டு வந்தவர் காமராஜ்) நான் கூட அப்போது நினைத்தது, "இம்மாதிரியெல்லாம் செய்வதை விட, வேலை வாய்ப்புகளுக்கு என்ன வழி என்பதை சிந்தித்து, அதைத்தான் அரசு செய்ய வேண்டுமே தவிர, இம்மாதிரி செய்கிறாரே' என்று நினைத்தேன். ஆனால் அது எவ்வளவு பேருக்கு மிகவும் உதவியாக இருந்தது என்பதை பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது.

அதற்காகவே பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்து, பள்ளிக்குப் போவதையே வழக்கமாக
சிறுவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆகவே இந்த உண்மையை மறக்கக் கூடாது. "அதே சமயத்தில் டி.வி. தருகிறேன். இலவச கேஸ் ஸ்டவ் தருகிறேன். எல்லாம் தருகிறேன். நீ வேலை செய்ய வேண்டாம். வீட்டிலேயே இரு. ஒன்றும் சம்பாதிக்க வேண்டாம்' என்கிற அளவுக்கு இலவசங்கள் போவதில் அர்த்தமில்லை. ஆனால் இப்படி எல்லாம் சொன்னாரே தவிர, எல்லோருக்கும் இலவசங்கள் கிடைத்து விடவில்லை. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு உள்ள ஆதரவை, எப்படி ஓட்டாக திரு. அத்வானி மாற்றப் போகிறார் என்று கேட்டார். படித்தவர்கள் எல்லாம் எப்போது தவறாமல் ஓட்டளிக்க முன் வருகிறார்களோ, அப்போதுதான் அரசியல் நிலைமை மாறும். படித்தவர்கள், ஓரளவு வசதியாக இருப்பவர்கள் (மத்தியதர வர்க்கம்) தேர்தல் நாளன்று விடுமுறையாக இருப்பதால், அதை வீணாக்காமல் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, வாக்குச் சாவடிக்குப் போய் வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

அவர்கள் போகாவிட்டால் என்ன? அவர்களின் ஓட்டுதான் விழுந்து விடுகிறதே?
கடந்த மாநகராட்சித் தேர்தலிலிருந்து அப்படி ஒரு சிஸ்டம் வந்து விட்டதே! நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய ஓட்டு போடப்பட்டு விடும். என்ன ஒரு வித்தியாசம் என்றால், யாருக்குப் போட வேண்டும் என்று நினைத்தோமோ, அவர்களுக்கே அந்த ஓட்டு விழுந்திருக்காது என்பது வேறு சமாச்சாரம். ஆனால் நாம் போகாவிட்டாலும் ஓட்டுப் போடப்பட்டு விடும்.

கோவில் குத்தகை நிலங்களுக்கான குத்தகை பாக்கி பற்றிச் சொன்னார். அது நீண்ட நாட்களாக இருக்கிற பிரச்சனை. தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான், இம்மாதிரி நடக்கிறது என்றோ, இந்த ஆட்சி இதில் எதுவும் செய்யவில்லை என்றோ சொல்ல முடியாது. பல வருடங்களாக இருந்து வரும் புகார். இந்த குத்தகை பாக்கியை வசூலிப்பதற்கு மிகவும் முனைப்புடன் செயல்படக் கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதோடு, கடுமையான சட்டமும் கொண்டு வரப்பட வேண்டும்.

குத்தகை பாக்கி செலுத்தப்படா விட்டால், திரும்ப நிலத்தையெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளும் என்ற நிலை வர வேண்டும். இஸ்லாமியர்கள் ஒழுங்காக குத்தகைத் தொகையைக் கொடுத்து விடுவதாக வாசகர் சொன்னார். ஹிந்துக்கள், நமது கடவுள்தானே பரவாயில்லை என்ற ஒரு தைரியம் போல் இருக்கிறது. ஆனால் அவர் கூறியது ஒரு புதிய விஷயம். இஸ்லாமியர்களும் கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வாடகையை ஒழுங்காகத் தருகிறார்கள் என்பது புதிய செய்தி. அதைப் பார்த்தாவது ஹிந்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் இன்னொருவரை குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

"துக்ளக்'கை டி.வி.டி.யில் கொண்டு வர வேண்டும் என்று யோசனை சொன்னார். இது பல வருட சமாச்சாரம். செய்ய முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

ஜி.கே. பாலகிருஷ்ணன், கும்முடிப்பூண்டி :

 அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், அக்கட்சி ஆட்சியில் இல்லாததுதான் என்று ஒரு கருத்தை ஆசிரியர்
கூறியிருக்கிறார். அப்படி என்றால், பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தால், அதை ஆதரித்திருக்குமா? இதை அக்கட்சியின் முன்னணித் தலைவரான அத்வானி அவர்கள் விளக்கினாலும் நன்றாக இருக்கும். ஆனால் இந்தக் கேள்வி ஆசிரியருக்கும் சேர்த்துத்தான்.

அடுத்தது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு என்னவாயிற்று? என்பது புரியாத புதிராக உள்ளது. நீதித் துறையைப் போல பத்திரிகைத் துறையும், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடும் ஆசிரியர் அவர்கள்,
திரு. கருணாநிதியைப் பற்றி குறிப்பிடும் போது மட்டும் கலைஞர் என்று குறிப்பிடுகிறார். காந்திஜியையும், காமராஜையும் பெயரைக் கூறி எழுதியும், பேசியும் வருகின்ற ஆசிரியர் அவர்கள், திரு. கருணாநிதியை மட்டும் கலைஞர் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் என்ன? இதை அவர் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.

சோ : அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்ப்பது, அது ஆட்சியில் இல்லாததனால் என்ற வகையில், ஒரு கேள்விக்கு பதில் அளித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார். நான் அப்படித்தான் நினைக்கிறேன். பா.ஜ.க. இன்று ஆட்சியில் இருந்திருந்தால் இப்போது காங்கிரஸ் செய்திருப்பதைத்தான், அவர்களும் செய்திருப்பார்கள் என்பதுதான் என்பது அபிப்பிராயம். இந்த ஒப்பந்தத்தால் அணு ஆயுதங்களை நாம் விரிவுபடுத்த
முடியாமல் போய்விடப் போவதில்லை. மற்ற வசதிகளுக்காக பயன்படுத்துவதில்தான் இதில் இன்ஸ்பெக்ஷன் வருகின்றதே தவிர, ராணுவ உபயோகத்திற்காக உள்ள அணு ஆயுத நிலையங்களை அவர்கள் சென்று பார்வை இடப் போவதில்லை.

பொதுவாகவே இங்கு அமெரிக்காவை எதிர்த்தால் அது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவை எதிர்த்தால், அவர் ஏழைகளின் விசுவாசி, பாட்டாளிகளின் நண்பன்; மதச்சார்பற்றவன். என்னென்ன நல்ல லேபிள் உண்டோ அத்தனையையும் அவர் மீது குத்தத் தயாராக இருக்கிறார்கள் – அமெரிக்காவை எதிர்ப்பவர்கள். அமெரிக்காவை யாராவது ஆதரித்தால், அவன் அமெரிக்கக் கைக்கூலி. அதன்படி இப்போது நான் ஒரு அமெரிக்கக் கைக்கூலி. நான்தானே தினமும் புஷ்ஷிடம் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

வெளிநாட்டுக் கொள்கையில் நாம் என்ன பார்க்க வேண்டும்? எத்தகைய நிலை எடுப்பது நமக்கு அனுகூலம் தரும்? அறிவார்ந்த சுயநலம் – அதுதான் தேவை. இன்று யாரோடு (எந்த நாட்டோடு) நமக்கு உறவு நல்லது? ரஷ்யாவுடனா? அவர்களே என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பு ரஷியாவிடம்
இந்தியா கிட்டத்தட்ட அடிமையாகவே நடந்து கொண்ட போது, யாருமே இம்மாதிரி கேள்விகளை எல்லாம் எழுப்பவில்லையே?

ரஷ்யா, ஹங்கேரியை கபளீகரம் செய்த போதும், செக்கோஸ்லோவேகியாவை கபளீகரம் செய்த போதும், போலந்தை அடித்த போதும் சரி, இப்படி ஒவ்வொன்றையும், தங்களுடைய ஆளுகைக்கு ரஷ்யா கொண்டு வந்தபோதும், சில சலசலப்புகள் ஏற்பட்டு அவற்றை மிருகத்தனமாக அடக்கியபோதும், இங்கு யாரும் அதையெல்லாம் எதிர்க்கவில்லை. அப்போதே நான் இதுபற்றி எழுதி இருக்கிறேன்.

அரக்கோணத்தில் முன்பு ஒரு தொழிற்சாலைக்கு – உருக்காலைக்கு என்று நினைக்கிறேன் – அங்கு பனிக்கட்டிகளை அகற்ற ஒரு இயந்திரத்தை ரஷ்யா நமக்கு விலைக்குக் கொடுத்தது. அதை வாங்கி வைத்துக் கொண்டோம். ஏனென்றால் அரக்கோணத்தில் அப்படி பனிப் பொழிகிறதல்லவா? அதை விலக்க அரக்கோணத்தில் இயந்திரம் தேவைப்பட்டது. இந்த மாதிரி நம்முடன் வியாபாரம் செய்த அவர்களைப் பற்றி மூச்சு விடக் கூடாது. அதைச் சுட்டிக்காட்டினால், அது முதலாளித்துவம். இது என்ன அணுகுமுறை? இன்று நமக்கு அனுகூலமான நிலை, அமெரிக்கா பக்கம் இருப்பதுதான்.

பொருளாதார ரீதியாக பலனளிப்பது மட்டுமல்ல, தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டவும், நாம் அமெரிக்காவுடன் இருப்பதுதான் நல்லது. அதே மாதிரி இஸ்ரேலுடன் நல்ல உறவு வைத்துக் கொள்வதும் கூட நல்லது. இஸ்ரேல் போல நமது செயல்பாடு வர வேண்டும். இஸ்ரேல் என்ன செய்கிறது? அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரைக் கொன்றால், நான் என்ன செய்கிறேன் பார் என்று பதிலடி தருகிறது.

ஆனால் இங்கே தீவிரவாத விஷயத்தில் எப்படி சிந்திக்கிறோம்? "இதற்குக் காரணம், அந்த வட்டாரம் வளர்ச்சி அடையவில்லை. அங்கு வேலை வாய்ப்புகள் இல்லை. பல வருடங்களாக அந்தப் பகுதியைப் புறக்கணித்து விட்டோம்...' இப்படியெல்லாம் நாமே காரணங்களைக் கூறிக் கொள்ள வேண்டியது. அதாவது கையாலாகாத்தனத்தை மறைக்க ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆகவே அமெரிக்காவுடன்
ஒப்பந்தம் செய்து கொண்டதில் ஒன்றும் தவறில்லை. பா.ஜ.க. இருந்திருந்தால், அக்கட்சியும் இதைச் செய்திருக்கும் என்ற நம்பிக்கையில் நான் அதை ஆதரிக்கிறேன்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு பற்றிச் சொன்னார். அதாவது தண்டனைகள் இன்றும் நிறைவேற்றப்படாதது பற்றிக் கூறுகிறார். "நளினிக்கு தூக்குத் தண்டனை ரத்தானால் எனக்கு மகிழ்ச்சிதான்' என்று முதலமைச்சர் சொல்லி விட்டார். இவருக்கும், மத்திய அரசுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்து விடப் போகிறது? அது அப்படியேதான் இருக்கும். அதாவது இந்த நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்ற ஒரு கூட்டம் – அதற்கு ஒருவர் உதவி இருக்கிறார். அவருக்கு கருணை காட்ட வேண்டும். அதற்குப் பெயர் மனிதாபிமானம். யாராவது கொலை செய்தால், "அவன் பாவம். ஏதோ செய்து விட்டான். என்ன
இருந்தாலும் ஒரு மனிதன் சாகத்தானே போகிறான்? ஒரு பத்து வருடங்களுக்கு
முன்னால் செத்துப் போனால், அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? அதற்காக இவனை (கொலை செய்தவனை) கொல்ல வேண்டாம்' – இது என்ன தர்மம் என்று எனக்குப் புரியவில்லை. இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மத்திய அரசை நடத்தும்போது, இந்த தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.

தமிழ்நாட்டில் ஒரே ஒருவருக்குத்தான் தைரியம் இருந்தது. ஏன் இன்னும் அந்த தண்டனையை நிறைவேற்றவில்லை என்று கேட்க – அப்படி கேட்டவர் ஜெயலலிதாதான்.

காமராஜை பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறீர்கள். கருணாநிதியை மட்டும் கலைஞர் என்று எழுதுகிறீர்களே, ஏன் என்று கேட்டார் – எனக்கு அவர் அறிமுகமானதே,
சினிமாவில் கலைஞர் என்றுதான். அப்போது முதல் "கலைஞர் கலைஞர்' என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

இடையில் அவர் "கருணாநிதி என்று பெயரைச் சொல்லும் அளவுக்கு, தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது' என்றார். தன் பெயரைச் சொன்னால் கேவலம் என்று ஒருவர் சொல்லி இதுவரை நான் கேட்டதே கிடையாது. அதாவது அவர் அப்படிக் கூறியது எல்லோரையும் மிரட்டுவது போல் இருந்தது. கருணாநிதி என்று யாராவது எழுதினால் அது மிகவும் தரம் தாழ்ந்த ரகம். "சரி, அப்படியானால் கருணாநிதி என்றே எழுதுவோம்' என்று எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கு முன் கலைஞர், கருணாநிதி என்று மாறி மாறி வரும். ஆனால், அவர் அப்படிக் கூறிய பிறகு, கருணாநிதி என்றே எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். அதற்குப் பிறகு அவரே இப்போது "என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதுவும் என் பெயர்தானே' என்றார். அவருக்கே புரிந்து விட்டது. ஆனால் அதற்குக் கொஞ்சம் லேட்டாகி விட்டது. அவர் அப்படிக் கூறியவுடன் நான், கலைஞர் என்று வந்து விட்டேன். இதில் அவமரியாதையோ, வேறு எதுவுமோ இல்லை.