Thuglak - 37 Part 3
 

சுந்தரேசன், குரோம்பேட்டை :

சதாம் ஹுஸேன் தூக்கிலிடப்பட்டது சரி என்றால், பேரழிவு ஆயுதம் இருப்பதாக மக்களை, உலகை ஏமாற்றி, அப்பாவி ஈராக்கியர்கள் ஆறு லட்சம் பேரையும், அமெரிக்கர்களையும் கொன்ற புஷ்ஷை தூக்கிலிட வேண்டாமா? ஈராக் அதிபரை கொலை 

செய்ய முயன்ற குற்றத்தில், தொடர்புடையவர்களைக் கொன்றதும் குற்றம் என்றால், நம் நாட்டின் பாராளுமன்றத்தை தகர்க்க நினைத்த தீவிரவாதியை தூக்கிலிட ஆணை பிறப்பித்த, நீதிபதியையும் குற்றவாளி என்று கூறுவீர்களா?

சோ :

"பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து, அப்படிப்பட்ட ஆயுதங்கள் கிடைக்காததால் புஷ்ஷûம் குற்றவாளிதானே? அவருக்கு என்ன தண்டனை?' என்று கேட்டார். இது பலரும் கேட்கும் கேள்விதான். பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்று இன்று கூட கூறிவிட முடியாது. இருக்கலாம். பிறகு எப்போதாவது வெளியே தெரிய வரலாம். வராது என்று எப்படிச் சொல்ல முடியும்? புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள், இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றனவே, அவையெல்லாம் அங்கே இருப்பது முன்பே தெரிந்ததா? ஆகவே பேரழிவு ஆயுதங்கள் அங்கு நிச்சயமாக இல்லை என்று சொல்லி விட நான் தயாராக இல்லை.

அதே சமயத்தில் அவை அங்கு இருக்கிறதா, இல்லையா என்று பிரச்சனைக்கு அப்பாற்பட்டு நின்று பார்த்தால் – அத்தகைய ஆயுதங்கள் தன்னிடம் இருக்கின்றன என்று நம்புகிற அளவில், மற்ற நாடுகளையெல்லாம் வைத்திருந்தவர் சதாம் ஹுஸேன்தான். "யாரும் வந்து சோதனை நடத்த அனுமதிக்க மாட்டேன்' – என்று ஐ.நா.விலிருந்து பார்வையிட வந்தவர்களை துரத்தி விட்டு... அவர்களைச் செயல்படாமல் முடக்கி, இப்படி ஒரு எண்ணத்தை அவர் உருவாக்கி வைத்திருந்ததால், அங்கு பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். காரணம், சதாமின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருந்தன. இப்போது, அவர் அப்படி ஒப்புக்கு மிரட்டினார் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. உண்மையாகக் கூட இருந்திருக்கலாம். அவரது நிலைமைக்கு அவரும் ஒரு பொறுப்பாளி.

தன்னைக் கொல்ல வந்தவர்கள் 148 பேர் – இதை நம்ப வேண்டும் என்கிறார். அங்கு கலகம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அவர்களையெல்லாம், பிடித்து நிறுத்தி வைத்து மிருகங்களைச் சுடுவதைப் போல – மிருகங்களைக் கூட ஓட விட்டுக் கொல்வார்கள் – ஆனால், அந்த 148 பேரை நிற்க வைத்து சுட்டுக் கொன்றார்கள். அது கொலைதான்.

அந்த குற்றம் பற்றி யார் விசாரணை நடத்தியது? அமெரிக்கா என்று சில பேர் கூறுகிறார்கள். நான் அப்படிக் கூற மாட்டேன். ஈராக்கில் ஷியாக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் விரோதம். சதாம் ஹுஸேன் ஸுன்னிப் பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் மெஜாரிட்டி மக்கள் ஷியா பிரிவினர். அவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் மிகக் கேவலமாக பழி தீர்த்துக் கொள்கிறார்கள். ஆக, இது ஷியா பிரிவினர் செய்த காரியமே ஒழிய, அமெரிக்கா செய்த காரியம் அல்ல.

சதாம் ஹுஸேன் வழக்கில் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. டெலிவிஷனில் அதை ஒளிபரப்பினார்கள். நீதிமன்றத்தில் சதாம் ஹுஸேன், அந்த நீதிமன்றத்தையும், விசாரணை நடத்திய நீதிபதியையும், அமெரிக்காவையும், எவ்வளவு வேண்டுமானாலும் ஏசிப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை உலக நாடுகள் எல்லாம் டெலிவிஷனில் ஒளிபரப்புச் செய்தன. இதற்குப் பிறகும், நடந்தது நேர்மையான விசாரணை அல்ல; வேண்டுமென்றே அமெரிக்கா செய்து விட்டது என்றால், அது சரி அல்ல. ஷியா பிரிவினர்தான் அதைச் செய்தார்கள். அமெரிக்கா அல்ல. ஆகவே இதற்கு, புஷ்ஷûக்கு தண்டனை என்பது சரி அல்ல.

இன்னொன்று – இதில் யாருக்கு உரிமை உள்ளதோ, இல்லையோ, நமது நாட்டிற்கு இதில் தார்மீக உரிமை கிடையாது. ஏனென்றால் இதை விட கொடூரமான
அக்கிரமங்களை ரஷ்யா செய்தபோது, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, ரஷ்யாவை ஆதரித்துக் கொண்டிருந்த நாடு இது.

மேலும் சதாமுக்கு தண்டனை நியாயம் என்றால், பாராளுமன்றத்தை தகர்க்க முயற்சி செய்த அஃப்ஸலை விட்டு விடலாமே என்று கேட்டார். 148 பேரை மிருகத்தனமாக சுட்டுக் கொன்ற சதாம் ஹுஸேன், அவர்கள் மீது வழக்கு நடத்தவில்லை. அவர்களுக்காக அரசு வக்கீல் வைக்கவில்லை. அழைத்து வந்து நிறுத்தி சுட்டார்கள். அவ்வளவுதான். இங்கு அஃப்ஸல் விவகாரம் அப்படிப்பட்டது அல்ல. வழக்கு
நடந்திருக்கிறது. ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன. வாதங்கள் கேட்கப்பட்டன. அஃப்ஸலுக்காகவும் ஒரு அரசு வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அதற்குப் பிறகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது சட்ட ரீதியாக நடந்த நடவடிக்கை. சதாம் ஹுஸேன் செய்தது சட்ட விரோதமான நடவடிக்கை.





வி. அனந்த நாராயணன், சென்னை :

சென்னையில் பல சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கே பல நடைபாதைக் கடைகளைப் போட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் சுரங்கப் பாதைகளை பயன்படுத்துவதற்கே பெரிதும் இடைஞ்சலாக இருக்கிறது. சில சமயங்களில், இதன் காரணமாக திருட்டுக் குற்றமும் நடைபெறுகிறது. சுரங்கப் பாதை என்பது மக்கள் பயன்படுத்துவதற்கா அல்லது வியாபாரத்திற்கா என்பதே புரியவில்லை. இந்தப் பிரச்சனையை "துக்ளக்'கில் எழுத வேண்டும். இதைப் பற்றி ஆசிரியர் என்ன நினைக்கிறார்?

சோ :

நடைபாதை கடைகளை அனுமதிப்பது தவறு என்று நான் கருதவில்லை. இதன் மூலம் பல பேருக்கு பிழைப்பு நடக்கிறது. சமயத்தில் நமக்கே கூட வேண்டியிருக்கிறது. ஆகவே அந்த மாதிரி கடைகள் இருப்பதை ஒரு தொந்தரவாகக் கருத முடியாது. ஆகவே, வரம்பு மீறிய வகையில் போய்விடாமலும், பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக இல்லாமலும் அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கே. சண்முகம், அரக்கோணம் :

சதாம் ஹுஸேனை வளர்த்தது அமெரிக்காதான். இன்று சதாம் ஹுஸேன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் சதாம் ஹுஸேனையும், ஒஸாமா பின்லேடனையும் அமெரிக்காதானே வளர்த்து விட்டது? இன்று சதாம் ஹுஸேன் விஷயத்தில் அமெரிக்கா எடுத்தது சரியான முடிவா? தவறான முடிவா என்பதற்கு – ஆசிரியர் மேலும் விளக்கம் தர வேண்டும்.

பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறது. பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக அது செயல்பட்டுள்ளதா என்று திரு. அத்வானி விளக்கம் தர வேண்டும். அத்வானி போன்ற ஒரு சிறந்த தலைவரை அக்கட்சி தலைவராக நியமிக்காமல், உத்திரப் பிரதேசத்தை விட்டு வெளியே வராத ராஜ்நாத் சிங்கை தலைவராக்கி, உமாபாரதி, மதன்லால் குரானா போன்ற தலைவர்களை நீக்கியது, அக்கட்சியின் வளர்ச்சிக்கு வழிகோலுமா? அல்லது பாதிப்பு ஏற்படுமா? 

மைனாரிட்டி அரசு – என்று தி.மு.க. ஆட்சியை நீங்கள் விமர்சிக்கிறீர்கள். தி.மு.க.வுக்கு தனியாக மெஜாரிட்டி உறுப்பினர்கள் இல்லைதான். அந்த அரசின் மீது எந்த எதிர்க் கட்சியாவது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து கவிழ்க்க, வாய்ப்பிருக்கிறதா? அப்படி இல்லாதபோது, எதிர்க் கட்சித் தலைவியைப் போன்று
நீங்களும், மைனாரிட்டி அரசு என்று கூறுவது நியாயம்தானா?

சோ :

சதாம் ஹுஸேனை வளர்த்தது அமெரிக்காதானே என்று சொன்னார். அமெரிக்கா
அங்கு மட்டும் அப்படிச் செய்யவில்லை. பல நாடுகளில் செய்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தானிலும் செய்திருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராகச் செயல்பட தாலிபான்களுக்கு அதிகமாக உதவியதும் அமெரிக்காதான். இந்த மாதிரி தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா ஆங்காங்கே உதவி செய்திருக்கிறது. ஆயுதம் வழங்கி இருக்கிறது. நிதி உதவி செய்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு காலகட்டத்தில் செய்திருக்கிறார்கள். ஆகவேதான் இப்போது அனுபவிக்கிறார்கள். அந்தப் படிப்பினையை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த தவறை உணர்ந்திருக்கிற சமயத்தில், இப்போது தீவிரவாதத்துக்கு எதிராக அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை குறை கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

நான் ஒரு மருத்துவமனை நடத்தும் மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களை நான் ஒரு காரில் வந்து மோதி விட்டேன் என்றால், என்னுடைய மருத்துவமனையில் வைத்து உங்களுக்கு சிகிச்சை தரக் கூடாதா? "நீதானே காரில்
வந்து மோதினாய்? உன்னால்தானே அடிபட்டது? அதனால் உன்னிடம் எனக்கு
சிகிச்சை தேவை இல்லை' என்று சொல்வீர்களா? இறந்து விடுவீர்களா? ஆகவே அமெரிக்கா, தான் செய்த தவறுகளை உணர்ந்து அதை சரி செய்து கொள்ளும்போது, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்காவை விட்டால், இம்மாதிரி தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த நாதியும் கிடையாது. மற்றவர்கள் எல்லாம் தங்கள் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அமெரிக்காவும் கூடிய விரைவில், இந்த நிலைமைக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அங்கு உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது. "நமது நாட்டு வீரர்கள் ஏன் வீணாக உயிர் இழக்க வேண்டும்?' – என்ற கேள்வி அங்கே எழுந்துள்ளது. ஆகவே அவர்களும் அரசியல் நிர்பந்தம் காரணமாக, அந்த முடிவுக்கு வரலாம். பெரிய சர்ச்சையே அங்கு இதற்காக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இம்மாதிரி முடிவுக்கு வராமல், அமெரிக்கா செயல்படுவது நமக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. தகராறு செய்கிறது என்றால், முன்பு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செய்த ரகளையில் பத்தில் ஒரு பங்கு கூட இவர்கள் (பா.ஜ.க.) இப்போது செய்யவில்லை என்பது என் கருத்து. அப்போது (பா.ஜ.க. ஆட்சியின் போது)
மந்திரிகளை காங்கிரஸ் கட்சியினர் பேசவே அனுமதித்ததில்லை. அப்படி ரகளை செய்வார்கள். இங்கே வெங்கையா நாயுடு வந்திருக்கிறார். அவர் அமைச்சராக
இருந்தபோது, பேச எழுந்தாலே ரகளைதான். இவரும் லேசுப்பட்டவர் அல்ல. அதுபோல காங்கிரஸ் செய்தது.

இன்னொன்று நம் மீதும் தவறு இருக்கிறது. பாராளுமன்றத்தில் ஒழுங்காக ஒருவர் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பத்திரிகைகளில் என்ன வரும்?
"திரு. அத்வானியும் இந்த மசோதா மீது சில கருத்துக்களைக் கூறினார்' என்று இரண்டு வரி வரும். அதே நேரத்தில் சபையில் தகராறு நடந்தால், அது பற்றி பத்தி பத்தியாகச் செய்தி வரும். இன்று எல்லா பத்திரிகைகளுக்கும் பரபரப்புதான் தேவை. ஆகவே, "பாராளுமன்றம் ஒத்தி வைப்பு' "பாராளுமன்றத்தில் ரகளை' என்று இருந்தால்தான், அது செய்தி.

இல்லாவிட்டால் பாராளுமன்றம் என்று ஒன்று நடப்பதே நமக்குத் தெரியாது. ஒரு பட்ஜெட்டைப் பற்றிய விவாதம் என்றால், அதை எத்தனை பேர் படிப்போம்? எத்தனை பேருக்கு அது புரிந்து விடும்? அதை வைத்துக் கொண்டு எத்தனை பேர் அரசியல் முடிவுகளை எடுக்கப் போகிறோம்? நமக்கே இதெல்லாம் தேவை இல்லை என்ற எண்ணம் இருக்கும்போது, நமது பிரதிநிதிகள் எப்படி நடந்து கொள்வார்கள்? பா.ஜ.க.வுக்கு மட்டும் புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிக்கப் போகிறோமா? பா.ஜ.க. மட்டும் எதிர்க் கட்சியாக இருந்தால், அவர்கள் எந்த ரகளையிலும் ஈடுபடக் கூடாது என்று சொல்லப் போகிறோமா? சபையில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற நிலை தோன்றும்போது, சபாநாயகர் பாரபட்சமின்றி செயல்படவில்லை எனும்போது, எதிர்ப்பை தெரிவிக்க என்னதான் செய்வது? ஆகவே தகராறில் ஈடுபடுகிறார்கள். அதை நான் விரும்புவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் இருக்கிறது. அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 

ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக அத்வானியே தலைவராக வந்திருக்கலாமே என்றார். பா.ஜ.க.வில் ஒருவர் எவ்வளவு வருடங்கள், அல்லது எத்தனை முறை தலைவராக இருக்கலாம் என்று சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதையொட்டி அவர்கள் சில முடிவுகளை எடுக்கிறார்கள். அதனால் ஒன்றும் ஆகிவிடாது. "துக்ளக்'கில் பப்ளிஷர் ஸ்வாமிநாதன். அவரைத் தெரியுமா அல்லது என்னைத் தெரியுமா, உங்களுக்கு? நடத்துவது நான்தானே? நல்லதோ, கெட்டதோ அதைச் செய்யப் போவது நான்தான். ஆனால் ஸ்வாமிநாதன் பப்ளிஷர். நாளை ஒரு வழக்கு என்று வந்தால், ஸ்வாமிநாதன்தான் ஜெயிலுக்குப் போக வேண்டும். பா.ஜ.க.வுக்கு பப்ளிஷர் மாதிரி ராஜ்நாத் சிங் இருக்கிறார். ஆனால் எடிட்டர் அத்வானிதான்.

ராஜ்நாத் சிங் ஒரு நல்ல நிர்வாகி என்று கேள்விப்பட்டேன். அம்மாதிரியானவர்களும் கட்சிக்கு முக்கியம். தொண்டர்களை ஒழுங்குபடுத்தி கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல தெரிந்திருக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பது பா.ஜ.க.வில்தான். ஒருவருக்கே பட்டயம் எழுதித் தரப்பட்டது அல்ல அந்தப் பதவி... ஆனாலும் யாரை மக்கள் ஏற்பார்கள்? யார் மூலமாக மக்களுக்கு மெஸேஜ் செல்ல வேண்டும்? இவையெல்லாம் மாறிவிடப் போவதில்லை.

மைனாரிட்டி அரசு என்று தி.மு.க. அரசை சொல்லக் கூடாது என்கிறார். பிறகு என்ன இது மெஜாரிட்டி அரசா? மைனாரிட்டி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் அமைச்சர்கள்தான் இந்த அரசில் இருக்கிறார்கள். கூட்டணி ஆட்சியைக் கொண்டு வரட்டும். அது மைனாரிட்டி அரசாக இருக்காது. கூட்டணி அரசு வராதவரை அது மைனாரிட்டி அரசுதான். எதிர்க் கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்து, இந்த அரசை கவிழ்த்து விடுமா என்றார். இன்று கவிழ்க்காது; நாளை என்ன செய்யும் என்று நாம் என்ன கண்டோம்? ஆகவே மைனாரிட்டி அரசு அல்ல என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஜெயலலிதா திரும்பத் திரும்ப மைனாரிட்டி அரசு என்று சொல்லி, கலைஞரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார். அவருடைய அறிக்கைகளில் "இந்த அரசு' என்றே குறிப்பிடப்படுவதில்லை. "இந்த மைனாரிட்டி அரசு' என்றுதான் சொல்கிறார். அது உண்மைதான்.

(இத்துடன் வாசகர்களின் கேள்விக்கான பதில்களை முடித்துக் கொண்டு, ஆசிரியர் தனது உரையைத் தொடங்கினார்).