தனியாள் அறிமுகம் எதற்கு?

என் அன்பு வருகையாளர்களே!

நான் இலங்கையின் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம், மாதகலூரில் வாழ்கிறேன். மருத்துவமனை முகாமைத்துவம், உளவியல், வழிகாட்டலும் மதியுரையும், இதழியல், இலக்கியப் படைப்புகள் ஆக்குதல், தகவல் தொழில்நுட்பம், அமைப்புப் பகுப்பாய்வும் வடிவமைப்பும், இணையத்தள வடிவமைப்பும் மென்பொருள் தயாரிப்பும் எனப் பல எனக்குத் தெரியும். ஆயினும் பட்டப்படிப்பு எதனையும் படித்து முடிக்கவில்லை. உண்மையில் நான் பல பாடங்களில் சிறிதளவு அறிவைப் படித்திருக்கிறேன். நான் படித்ததோ சின்னி விரல் நகத்தளவு அறிவைத் தான். ஆயினும் உலகம் அளவு அறிவைப் படிக்க வேண்டியிருக்கிறதே! 

எனது தாய்மொழி தமிழ். ஆனால், எனக்கு ஆங்கிலமும் சிங்களமும் தெரியும். இணைய வழியில் எனது படித்தறிவை, பட்டறிவை, திறமைகளை வெளியிடுகிறேன். உங்களால் எனது வலைப்பூக்களில், வலைத்தளத்தில் பார்வையிடலாம். பின் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம். என்னிலோ எனது படைப்புகளிலோ பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். உடனே கண்டிக்கவோ கருத்துக்கூறவோ திருத்திக்கொள்ளவோ வழிகாட்டலும் மதியுரையும் வழங்கவோ உங்களால் முடியும். 

என்னைப் பற்றிக் கொஞ்சம் உங்களுடன் பகிர எடுத்த முயற்சியே இந்த வலைத் தளம். எவராயினும் எனது வலைப்பூக்களைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம், சிறப்பாக எனது யாழ் மென்மொருள் தீர்வுகள் வலைத் தளத்தைப் படித்த பின், என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இங்கு பகிர எண்ணியுள்ளேன். நான் எப்போதும் உங்கள் வேண்டுதல்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கின்றேன். 

நான், என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் இப்பக்கத்தில் பகிர விரும்புகிறேன். ஏன் தனியாள் தகவல் மிக முக்கியம்? பொதுவாக ஒவ்வொருவர் தகவலையும் தாம் விரும்பவோ நண்பராகவோ மணமுடிக்கும் நோக்கிலோ விரும்பி மற்றவர்கள் தேடுகின்றனர். உண்மையில் மிக முக்கிய புள்ளிகள் (நீதிபதி, சட்டவாளர், காவற்றுறை, மருத்துவர், ஆசிரியர் போன்றோர் அடுத்தவரைப் பொருட்படுத்துவர்) தமது தேவைகளுக்காக அடுத்தவர் தகவலைத் தேடலாம். 

எனது வலைப்பூக்ளையோ யாழ் மென்பொருள் தீ்ர்வுகள் தளத்தையோ படித்தவர்கள் எவரேனும் என்னைப் பற்றி அறிய விரும்பலாம். ஆகையால், என்னைப் பற்றிய சிறு தகவலைப் பகிர விரும்புகிறேன். அதனால், நீங்கள் என்னை நம்பலாம் அல்லது என் மீது நம்பிக்கை வைக்கமுடியும். உளவியல் நோக்கில் முதலிலேயே வெளிப்படுத்துவது நல்ல வெளியீடாகும். ஆகையால், நான் எனது உளச் செய்திகளையோ உள்ளத்து எண்ணங்களையோ உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அது நீங்கள் என்னோடு நல்லுறவைப் பேண உதவும். 

தொழில் வாய்ப்பில் உயர்ந்த பதவி நிலைக்கு உயரவோ நான் பலரோடு நல்லுறவுகளைப் பேணவோ உதவுமென என்னைப் பற்றிய சிலவற்றை உங்களுடன் பகிருகிறேன். இதனால், நான் எனக்கான நல்ல மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பைக் கட்டியெழுப்ப முடியும். ஒவ்வொருவரும் எப்போதுமே தங்களுக்கான மக்களாயக் (சமூகக்) கட்டமைப்பிலேயே தங்கி இருக்கின்றனர். எப்போதுமே மக்களாயம் (சமூகம்) ஒவ்வொருவரது ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது. எவராயினும் என்மீது நம்பிக்கை வைக்கக்கூடும். அதேவேளை அவர்கள் எனது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடும். பேரறிஞர்கள் தனியாள் தகவலைப் படித்த பின் எனது பிழைகளைத் திருத்தி எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டலாம். இது எனது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். 

என்னோடு படித்தவர்களோ எனது நண்பர்களோ என்னைப் பற்றிய தகவலைப் படித்த பின், அக்கணம் என்னை அவர்கள் மீட்டுப் பார்க்க முடியும். அதேவேளை மற்றவர்களுக்கும் அதனை மொழிபெயர்த்துக் கூறலாம். அவர்களது உதவி எனது பணிகளுக்குப் பின்னூட்டமாக அமையும். இப்பக்கத்தில் என்னைப் பற்றிச் சிறிதளவே அறிந்திருக்க முடியும். என்னைப் பற்றிய மேலதிக தகவலை அறிய, என்னோடு தொடர்பாடலை மேற்கொள்ளலாம், தமிழிலோ ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ உங்களால் என்னைத் தொடர்புகொள்ள முடியும்.

Comments