மரபணுமாற்றப்பட்ட பயிர் அறிவோமா?

Return to Home

கவனிக்க: இந்தக் கட்டுரையின் நோக்கம் மரபணு மாற்றத் தொழில் நுட்பம் பற்றிய சிறு விழிப்புணர்வு கொடுப்பது மட்டுமே! அத்தொழில் நுட்பத்தை விளக்குவதோ அல்லது அத் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதோ இல்லை. விளக்குவதற்காக சில(பல) வார்த்தைகளை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஆங்கில வார்த்தைகள் கொடுத்துள்ளேன்.தகவல் சேகரிக்க இணையத்தையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நான் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுது எடுத்த குறிப்புகளையும் பயன்படுத்தியுள்ளேன்.

கடந்த சில வருடங்களாகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பற்றி இந்தியாவில் பலரும் மூலை முடுக்குகளிலெல்லாம் கூட்டம் போட்டு விவாதிக்கிறார்கள். இதில் உண்மையான புரிதலோடு விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். புரிதலே இல்லாமல் அமெரிக்கத் தொழில்நுட்பம்,முதலாளித்துவம் என்ற ரீதியில் மட்டுமே விமர்சனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனந்தவிகடனில் இந்த வாரம் தவளைத் தக்காளி என்கிற ரீதியில் ஒரு கட்டுரை வேறு வெளி வந்திருக்கிறது. அதில் திரு.சென் என்பவர் அத்தொழில் நுட்பத்தின் நன்மை குறித்து சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அப்பொழுதுதான் எனக்கும், நாம் ஏன் மன்றத்து நண்பர்களுக்கு சிறிது விளக்கம் கொடுக்க கூடாது எனத் தோன்றியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

மரபணு பற்றிய சிறு விளக்கம்:

மரபணு என்றால் என்ன? மரபணுவின் பங்கு என்ன?                                                                                                            

மரபு + அணு. மரபு என்பது Heredity, வழி வழியாக வருவது. ஒரு உயிரினம் தன்னகத்தே கொண்டுள்ள குணாதிசயங்களை தன் பிள்ளைகளுக்கு (offspring) வழி வழியாக கொடுப்பதற்கான அணு. ஒரு உயிரினம் உருவாகுகையில் அதன் கை எப்படி இருக்க வேண்டும்!. கண்களின் நிறம் எப்படி இருக்க வேண்டும்!, தாவரங்களில் எந்த நிறத்தில் பூ பூக்க வேண்டும்!, விதை எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்!, இலை எப்படி இருக்க வேண்டும்!, கனி எப்படி ருசிக்க வேண்டும்! என பல்வேறு குணங்களை நிர்ணயம் செய்வது இந்த மரபணுக்கள் தான். கவனிக்க: சில நேரங்களில் ஒரு மரபணு மட்டுமே ஒரு குணத்தை நிர்ணயம் செய்ய முடியாது, கூட்டணிதான். அது மட்டுமல்ல சூழலுடன் வினை புரிவதன் மூலமும் மரபணுக்கள் ஒரு குணத்தின் மீது தாங்கள் கொண்ட பிடியினைத் தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. சரி மரபணு எங்கே காணப்படுகிறது? மரபணுக்கள் டி.என் ஏவில் காணப்படும்.


ஒவ்வொரு மேல்நிலை உயிரினமும்(தாவரங்கள், விலங்குகள்) இரண்டு வித நியூக்ளிக் அமிலம் கொண்டு இருக்கும்.
1. DNA- Deoxy Ribo Nucleic Acid (டி.என்.ஏ)
2. RNA- Ribo Nucleic Acid (ஆர். என்.ஏ).
இதில் டி. என். ஏ தான் முக்கியமானவர். இரண்டு ப்யூரின்களும் இரண்டு பிரமிடின்களும் சேர்ந்து உருவாக்கும் இரட்டைச் சுழல் ஏணி போன்ற அமைப்புதான் டி.என்.ஏ.
அடெனின்-A (Adenine), குவானின்-G (Guanine) என்பவை ப்யூரின்கள்- Purines.

தயாமின்T (Thymine), சைட்டோஸின்-C (Cytosine) என்பவை பிரமிடின்கள்- pyrimidines. RNAவில் தயாமினுக்குப் பதிலாக யுராசில்(Uracil)

டி.என்.ஏவில் காணப்படும் ப்யூரின் - பிரமிடின் கூட்டணி அமினோஅமிலக் குறியீடு (கோடான்-codon) எனப்படும். அமினோ அமிலக் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை(Amino Acids) உருவாக்குகின்றன. இதில் AGC என்பது ஒருவித அமினோ அமிலத்தை (serine) உருவாக்கும். CGC என்பது வேறு வகை அமினோ அமிலத்தை(Arginine) உருவாக்கும். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இந்த மூன்று செட்கள்தான் குறிப்பிட்ட அமினோஅமிலத்தை உருவாக்க வேண்டும் என்றில்லை. இதில் மாறுபாடுகள் இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட அமினோ அமிலத்தை அடையலாம். எடுத்துக்காட்டாக TAT மற்றும் TAC இரண்டுமே டைரோஸின்(Tyrosine) எனப்படும் அமினோ அமிலத்தை உருவாக்குகின்றன. அமினோ அமிலத்தின் முக்கியத்துவம்? அமினோ அமிலம் மற்றொரு அமினோஅமிலத்துடன் சேர்ந்து, பாலி-பெப்டைடுகள் (Polypeptides) அமைத்துப் பின்னர் புரதங்களை (Proteins) உருவாக்குகின்றது. புரதங்கள் வினையூக்கிகளாகவும் உடல் கட்டமைப்புக்குத் தேவைப்படுவனவாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு டி.என்.ஏ என்பது ....... ATG CAT GTC ATA CCA TAG CTA GAG..... எனத் தொடரும். அமினோஅமில உற்பத்திக்கான ஆரம்பிக்கும் பட்டன் (Start codon) ATG என்றால் முடித்து வைக்கும் பட்டன் (Stop codon) TAG. அதாவது ATG என்ற அமினோ அமிலக்குறியீடு அமினோஅமில உற்பத்தியை ஆரம்பிக்கும். பின்னர் அந்தந்த அமினோஅமிலக் குறியீடுகளுக்கு தகுந்தாற்போல அமினோஅமிலங்கள் உற்பத்தியாகும்.TAG என்ற அமினோஅமிலக்குறியீடு எங்கு குறுக்கிட்டாலும் அமினோஅமில உற்பத்தி நின்று விடும். இவ்வாறு ஒரு டி.என்.ஏ குறிப்பிட்ட அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. அந்த அமினோ அமிலங்களின் கலவையால் ஒரு குறிப்பிட்ட புரதம் உருவாகுகின்றது.

இப்பொழுது எங்கே தொடங்கியது என்பது தெரிகிறதா? AGC என்ற மூன்று கட்சிக் கூட்டணியின் மூலம் Serine என்ற அமினோஅமிலமும் பின்னர் அந்த அமினோஅமிலம் மூலம் ஒரு குறிப்பிட்ட புரதமும் உருவாக்கப் படவேண்டும் என்று ஒரு உயிரினம் தன் மரபணுவில் குறிப்பேற்றி வைத்திருக்கிறது. அது தன் பிள்ளைக்கு தன் டி.என்.ஏவைக் கொடுப்பதன் மூலம் எந்தப் புரதம் என அந்த வரைபடத்தின்(Blueprint) மூலம் கட்டளையிடுகிறது.

கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்பதானால் தக்காளியின் சிவப்பு நிறம் கொடுக்க காரணமான நிறமிகளை உருவாக்கவேண்டிய வரைபடம் டி.என்.ஏவில்தான் இருக்கிறது. மாம்பழம் இனிக்க வேண்டுமானால் இனிப்பு சுவை கொடுக்கக் கூடிய சுக்ரோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்க வேண்டிய வரைபடம் மரபணு அண்ணாதான் வைத்திருக்கிறார். புசுபுசுவென்று வெள்ளை நிறத்துடன் உங்கள் வீட்டு ஜிம்மிக்கு அப்படியான நிறம் கொடுக்கச் சொல்லி ஜிம்மியின் பாட்டனார், பின்னர் ஜிம்மியின் தகப்பனார், என வழி வழியாக அந்த மரபணு வந்து கொண்டே இருக்கிறது.

என்ன நண்பர்களே இன்று அதிகமாக தகவல்களைக் கொடுத்து விட்டேனா? அடுத்த பாகத்தில் மரபணு மாற்றம் என்றால் என்ன அதை எப்படிச் செய்கிறார்கள் எனப் பார்க்கலாம். அதற்கடுத்த பாகங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களினால் ஏற்படும் நன்மை தீமைகள், சர்வதேச அளவில் மரபணுமாற்றம் விளைவிக்கும் விளைவுகள் பற்றிக் காணலாம். சந்தேகங்கள் இருந்தாலும் உடனுக்குடன் கேளுங்கள். என்னால் முடிந்த விளக்கம் தர விருப்பமாயிருக்கிறேன்.