பௌத்தமும் தமிழும்  - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980)

13. தமிழில் பாலிமொழிச் சொற்கள்

    வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வேவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர்.

    தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய  அயல்மொழிச் சொற்கள் அண்மைக்காலத்தில் கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாலி மொழியிலிருந்தும் சில சொற்கள் முற்காலத்தில் கலந்து காணப்படுகின்றன. பாலிமொழி இப்போது வழக்காறின்றி இறந்துவிட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்து வந்தது. 'தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்' எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாலிமொழியிலேதான் தம் உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாலிமொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகதநாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப் பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்குச் சமஸ்கிருதம் 'தெய்வபாஷை' யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்தமாகதி 'தெய்வ பாஷை' யாகவும் இருப்பது போல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாலிமொழி 'தெய்வபாஷை' யாக இருந்து வருகின்றது. ஆகவே பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாலிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில்,  மகாயான பௌத்தர்கள், பாலி மொழியைத் தள்ளி, சமஸ்கிருத மொழியில் தம் சமயநூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென்இந்தியா, இலங்கை பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்றுதொட்டு இன்றுவரையில் பாலிமொழியையே தங்கள் தெய்வ மொழி'  யாகப் போற்றி வருகின்றார்கள். பௌத்தமதம், தமிழ்நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில் அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாலிமொழியும் தமிழ்நாட்டில் இடம் பெற்றது.

    பாலிமொழி தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தது என்றால், தமிழ்நாட்டுப் பௌத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதகூடாது. பாலிமொழி ஒருபோதும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால், பௌத்தக் குருமாரான தேரர்கள் பாலிமொழியில் இயற்றப்பட்ட தம் மதநூல்களைப் படித்து வந்தார்கள். பிராமணர்கள், தம் மதவிஷயங்களை அறியத் தமது 'தெய்வமொழி' யான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய்மொழிகளைக் கையாளுவதும் போல, பௌத்தப் பிக்ஷுக்களும் தம்முடைய மதநூல்களை மட்டும் பாலிமொழியில் கற்றும், உலகவழக்கில், தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும் வந்தார்கள். இந்தப் பிக்ஷுக்கள் பொதுமக்களுக்குப் பாலிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்தபோது, சில பாலிமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

    இவ்வாறே அர்த்தமாகதி என்னும் வேறு பாகத மொழிச்சொற்களும், சமஸ்கிருதமொழிச் சொற்களும் ஆருகத மதத்தவராகிய ஜைனர்களாலே தமிழில் கலந்து விட்டன. ஆருகதரும் பௌத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சமஸ்கிருத மொழிகளையும் பயின்றவர். இதனை,

        'ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
        பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள்...'

என்று சமணரைப் பற்றித் திருஞான சம்பந்தர் திருவால வாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதினாலும் அறியலாம்.

    மாகதி என்னும்   பாலிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறியதிலிருந்தும் உணரலாம். 410 ஆம் தாழிசை உரையில், 'ஐயை - ஆரியை. இதன் பொருள் உயர்ந்தோனென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகததென்னலுமாம்' என்று எழுதியிருப்பதைக் காண்க. அன்றியும் 485ஆம் தாழிசையுரையில் 'தளம் - ஏழு; இது பஞ்சமா ரூடபத்திர தளம்; இது மாகதம்' என எழுதியிருப்பதையுங் காண்க.

    தமிழ்நாட்டிலே, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டிநாட்டுத் தஞ்சை, மானாவூர்,துடிதபுரம், பாடலிபுரம் சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாலிமொழியை நன்கறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக் காலத்திருந்தனர் என்பது பௌத்த நால்களாலும் பிற நூல்களாலும் தெரிகின்றது. பாலிமொழியை நன்கு கற்றுத் தேர்ந்து, அந்த மொழியில் நூல்களை இயற்றிய தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர்களின் வரலாற்றினைத் ' தமிழ்நாட்டுப் பௌத்தப்பெரியார்; என்னும் தலைப் பெயரையுடைய அதிகாரத்தில் காண்க. இது நிற்க:

    தமிழில் கலந்து வழங்கும் பாலிமொழிச் சொற்கள் அனைத்தினையும் எடுத்துக்காட்ட இயலவில்லை. அவ்வாறு செய்வது, தமிழ், பாலி என்னும் இருமொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால் மட்டிமே இயலும். ஆயினும், பாலிமொழிச் சொற்கள் தமிழில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. யாம் அறிந்தமட்டில் தமிழில் வழங்கும் பாலிசொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

    உய்யானம், ஆராமம்:  பூந்தோட்டம் என்பது பொருள். பௌத்தரின் பள்ளி, விகாரை, தூபி முதலியவை இருக்கும் இடத்தைச் சேர்ந்த பூஞ்சோலைகளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இச்சொற்கள் மணிமேகலையில் வந்துள்ளன.

    சமணர்: இப் பெயர் ஜைன, பௌத்தத் துறவிகளுக்குப் பொதுப்பெயர். ஆயினும், இப்போது தமிழ்நாட்டில் ஜைன மதத்தினரை மட்டும் குறிக்கத் தவறாக வழங்கப்படுகின்றது. வடமொழியில் இது 'ஸ்மரணர்' என்று வழங்கப்படுகிறது. இச்சொல் தேவாரம், மணிமேகலை முதலிய நூல்களில் காணப்படுகின்றது.

    சைத்தியம் சேதியம் தூபம் தூபி: இச் சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டடங்கள், ஆலயங்கள், முதலியவற்றைக் குறிக்கின்றன. 'தூபம்', 'தூபி', என்பனவற்றை 'ஸ்தூபம்' 'ஸ்தூபி' என்னும் வடமொழிச் சொற்களின் தமிழ்த் திரிபாகவும் கொள்ளலாம். ஆயினும் பாலி மொழியிலிருந்து தமிழில் வந்ததாகக் கொள்வதுதான் வரலாற்றுக்குப் பொருத்தமுடையது. இச்சொற்களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.

    தேரன், தேரி: இவை பௌத்தத்துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ஆண்பால் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணிமேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்துள்ளன.

    பிக்ஷு, பிக்ஷுணி: (பிக்கு, பிக்குணி) முறையே பௌத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.

    விகாரை, விகாரம்: பௌத்தக் கோயிலுக்கும் பிக்ஷுக்கள் வாழும் இடத்துக்கும் பெயர்.

    வேதி, வேதிகை: திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின் கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்கும் பெயர்.

    போதி: அரசமரம்.

    பாடசாலை: பள்ளிக்கூடம்

    விகாரை: பௌத்த பிக்குகள் வசிக்கும் கட்டடம்.

    வேணு, வெளு: மூங்கில்

    சீலம்: ஒழுக்கம்

    அர்ஹந்தர்: பௌத்த முனிவர்.

    சீவரம்: பௌத்த பிக்குகள் உடுத்தும் ஆடை

    சேதியம்: கோவில்

    ததாகதர்: புத்தர்

    தம்மம்: தர்மம்

    நிர்வாணம்: பௌத்தருடைய வீடுபேறு

    சாவகர்: பௌத்தரில் இல்லறத்தார்

    ஹேது: (ஏது) காரணம்

    இவையன்றியும், நாவா (கப்பல்) , பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), நாயகன் (தலைவன்), தம்பூலம் (தாம்பூலம் - வெற்றிலை) முதலிய சொற்களும் பாலிமொழியிலிருந்து பௌத்தர் மூலமாகத் தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றன. பாகத, அஃதாவது பிராகிருத மொழிச் சொற்களுக்கும் சமஸ்கிருத மொழிச்சொற்களுக்கும் சிறு வேறுபாடுகள் தாம் உள்ளன. எனவே, இச்சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தனவா, பிராகிருத மொழிகளிலிருந்து வந்தனவா என்று முடிவுகட்ட இயலாது. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமதமும் சமணமதமும் முதலில் தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தன வென்பதும், பிறகுதான் வைதீகப் பார்ப்பனீயம் சிறப்புப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும். எனவே, பௌத்தரின் சமய மொழியாகிய மாகதி (பாலி) சமணரின் சமயமொழியாகிய அர்த்த மாகதி என்னும் இரண்டு பிராகிருத மொழிகளின் மூலமாகத்தான் திசைச்சொற்கள் தமிழில் கலந்திருக்கவெண்டும்

    பாலி சிங்களம், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளைக் கற்றவரும் பௌத்தருமாகிய முதலியார் ஏ. டி. எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்கள் 26-10-40 இல் எமக்கு இலங்கையிலிருந்து எழுதிய கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை ஈண்டுக் குறிப்பிடுவது அமைவுடையது. அவர் எழுதியது இது:-

    "பாலிச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து வழங்கி வருவதைக் காணலாம். சமனல என்னும் சிங்களச் சொல் தமிழில் சமனொளி என்பதாகவும் வழங்கி வருகின்றது. பாலிச் சொற்கள், சமஸ்கிருத மொழிச் சொற்கள் என்ற எண்ணத்துடன் வழங்குவதாகவும் காணப்படும். உச்சரிக்கையில் ஏறக்குறையச் சமமாயிருக்கும் ஒரு பொருட் சொற்கள் பாலிமொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் காணப்படுகின்றன. சமஸ்கிருதச் சொற்கள் எனப்படும் இச்சொற்கள் தமிழ்மொழியில் இருவிதமாக எழுதப்படுகின்றன. ஒருவிதம் பாலிமொழிக் கிணக்கமாகவுள்ளது; மற்றது சமஸ்கிருத மொழிக்  கிணக்கமாகவுள்ளது. பாலிக்கிணக்கமுள்ள சொல் பாலி மொழியிலிருந்து வந்ததாகவும் சமஸ்கிருததுக் கிணக்கமன சொல் சமஸ்கிருத மொழியினின்று வந்ததாகவும் துணியலாம். உதாரணங்கள் பின்வருமாறு:

பாலி                                தமிழ்            சமஸ்கிருதம்        தமிழ்
அத்த (பொருள்)              அத்தம்        அர்த்த                    அருத்தம்
கய (நிறைதல்)                கயம்            கய                         கயம்
காம (ஊர்)                        காமம்            க்ராம                  கிராமம்
ஸத்த (ஒலி)                    சத்தம்            சப்த                    சப்தம்
தம்ம (அறம்)                   தன்மம்         தர்ம                    தருமம்
தன (முலை)                    தனம்            ஸ்தன                தனம்
தல (இடம்)                       தலம்            ஸ்தல                தலம்
தான (இடம்)                    தானம்           ஸ்தான             தானம்
தோஸ (குற்றம்)             தோசம்         தோஷ                தோடம்
விஸய (பொருள்)           விசயம்        விஷய               விடயம்
ஸந்தோஸ (மகிழ்ச்சி)    சந்தோஷ     சந்தோஷம்        சந்தோடம்
பக்க (நட்பு, புறம்)            பக்கம்            பக்ஷ                   பட்சம்
பவாள (பவளம்)             பவளம்         பரவாள              பிரவாளம்
யக்க (கந்தருவன்)          இயக்கன்        யக்ஷ                 இயட்சன்
லக்கண (குறி)                இலக்கணம்   லக்ஷண            இலட்சணம்
வண்ண (நிறம்)              வண்ணம்      வர்ண                வருணம்
வத்து (பொருள்)            வத்து              வஸ்து              வத்து

    இக்கொள்கையை அறிஞர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக.