"ஒரு காளையின் ஆறுதல்: சிறு கதை" - சுவமாலீ கருனரத்தினா
"The Healing of the Bull: A Story", by Suvimalee Karunaratna

Click here for English version

ஒரு நாள் கபுரி என்ற பெண் யானையும், ஞானமிகுந்த ஆமையும், மயிலும் வசிக்கும் ஒரு கோயிலுக்கு, வேலையின் காரணமாக சோர்வடைந்திருந்த காளை மாடொன்று வந்தது. துயரக் கடலில் மூழ்கியிருப்பதைப்போலக் காணப்பட்ட அக்காளை துறவிகள் தங்குமிடத்திற்குப் பின்புறம் கோயில் புல்வெளியின் மத்தியில் சோகத்தோடு உட்கார்ந்திருந்ததைக் கபுரி பார்த்தது.

அன்றைய வேலை முடிந்ததும் கபுரியின் மாவுத்தன் அதை வழக்கமான பலா மரத்தடியில் கட்டிவிட்டுத் தீவனமாகப் பனை ஓலைகளை அதன்முன் குவித்துச் சென்றான். பிறகு, கபுரி அர்த்தமுள்ள பல பார்வைகளை அக்காளை மாட்டுப் பக்கம் செலுத்தியது. எலும்புகள் நிறைந்த சாக்குப்பையை அக்கரையில்லாமல் தரையில் கிடத்தியதைப் போல உற்சாகமின்றி அருகிலேயே அக்காளை உட்கார்ந்திருந்தது.

"நண்பனே, நீ எங்கிருந்து வந்தாய்? இங்கு நீண்ட நாள் தங்குவாயா?" என்று கபுரி கேட்டது.

காளை தன்தலையைத் தூக்கி, மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களையும், உண்ணிகளையும் விரட்ட, அதை ஆட்டிற்று.

"நான் அருகில் உள்ள ஊரிலிருந்துதான் வருகிறேன். என் எஜமான் என்னை இங்கு கொண்டு வந்து, கொஞ்ச காலம் என்னை வைத்திருக்குமாறு தலைமைப் பிக்குவிடம் கேட்டுக்கொண்டார். கோவிலில் உள்ள புல்லை உண்டு கொழுத்த பிறகு என்னிடம் அதிக வேலை வாங்க நினைக்கிறார் போலும்."

"உனது எஜமான் கொஞ்சமும் இரக்கமற்றவர் போலத் தோன்றுகிறதே."

காளை உணர்ச்சி கலந்த நீண்ட பெரு மூச்சு விட்டது.

"நண்பா, என் துயரம் பற்றி உனக்குத் தெரிந்தால் ...." என்று கசப்புடன் சொன்னது காளை.

"என்னிடம் சொல்" என்று கருணையோடு ஊக்கியது கபுரி.

"மாட்டு வண்டி ஓட்டித் தொழில் செய்யும் என் எஜமான், ஆரம்பத்தில் என்னிடம் அன்பாகத்தான் இருந்தார். ஆனால் திருமணமாகி ஒன்றன் பின் ஒன்றாகக் குழந்தைகள் வந்த பிறகு என்னை அலட்சியஞ் செய்ய ஆரம்பித்தார்."

"எப்படி?"

"உம் ... உதாரணத்திற்கு எனக்கு கொடுக்கும் உணவு குறைந்து கொண்டே வந்தது. அதை நான் அதிகம் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் என்னிடம் அவர் மிகுந்த அன்பு செலுத்தினார். நான் வண்டி நிறைய உலோகங்களையும், மணலையும், செங்கற்களையும் வெகு தூரத்துக்கு, விடியற்காலையிலிருந்து மாலை வரை இழுத்துச் செல்லும் போது தன் பொழுது போக்குக்காக என்பதைவிட என் துயரம் குறைக்கவே வண்டிக்காரர்கள் பாடும் சோகமான தெம்மாங்குப் பாடல்களைப் பாடுவார். எனினும், நான் முன்பு போலவே வேலை செய்யவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். வண்டி நிறைய உலோகத்தையோ செங்கல்லையோ மேடு பள்ளங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலில் இழுத்துச் செல்வதென்பது வேடிக்கையான செயலல்ல என்பது உனக்குத் தெரியுமல்லவா! ஒரு முறை, எனக்கு நினைவிருக்கிறது, என் வாயில் நுரை பொங்கி நெஞ்சு படபடத்தது. பின் தலை சுழன்று எல்லாமே இருண்டு அமைதியானது. ஒரு கணம், என் தோலின் மேல் சுலீரென்று ஒரு அடி விழும் வரை, எனக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. சற்றுத் தெளிந்த பின் எனது எஜமான் என்னை ஒரு தடியால் அடிப்பதும், நான் என் முழங்காலில் விழுந்து கிடந்ததும் தெரிய வந்தது. அவசர அவசரமாக எழுந்தேன். இருந்தும் சேர வேண்டிய இடம் போகும் வரை சற்றும் நிதானமற்றவராக என் எஜமான் என்னை அடித்தார், காது கிழியத் திட்டினார். இப்படி என்னை அவர் நடத்தியதைப் பார்த்து நான் ஆடிப்போய் விட்டேன்."


"உன் எஜமான் உன் மீது வைத்திருந்த அக்கறையையும், தன் தொழில் மேல் அவருக்கிருந்த கவலையையும், உன்னிடம் இப்படி வேலை வாங்குகிறோமே என்ற குற்ற உணர்வையும் இப்படித்தான் அவரால் வெளியாக்க முடிந்தது போலும்."

காளை சற்றுத் தயங்கி, தான் கேட்டதை எண்ணிப்பார்த்தது. "அப்படியும் இருக்கலாம்," என்று சொல்லித் தன் மேல் இருந்த ஈக்களையும் உண்ணிகளையும் விலக்கத் தன் தலையை ஆட்டி, தோலை இசித்து, வாலை இப்படியும் அப்படியும் தன் தோலின் மேல் லேசாக அடித்துக்கொண்டது. அதன் கழுத்திலிருந்த மணிகள் ஓசை எழுப்பின. அருகிலிருந்த தென்னை மரத்துக்கு சென்று சொரசொரப்பான மரபட்டையின் மேல் தன்னை உரசிக்கொண்டது.

"அந்த நிகழ்ச்சிக்குப்பின் என்ன நடந்தது?"

"என் எஜமானின் கோபம் எதனாலோ தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் இருந்த அன்பும் அக்கறையும் குறையத் தொடங்கியது. ஆனால், என்னைப் பொருத்த வரை அவர் மீதான அசட்டு அன்பும் விசுவாசமும் முன்போலவே தொடர்ந்தது."

"அது ஒரு நற்பண்பல்ல" என்று கபுரி மெதுவாக சொன்னது. "நீ உனக்கு பாதுகாப்பு என்று எண்ணியதன் மீது ஒட்டிக் கொண்டு விட்டாய். உன்னைப் பொருத்தவரை உன் எஜமான் தான் உன் பாதுகாப்பாக விளங்கினார்."

காளை கண்டு கொள்ளாததுபோலத் தன் தோளைக் குலுக்கியது. "அப்படியும் இருக்கலாம். எப்படியாயினும், என் எஜமான் என் அடிப்படை தேவைகளைக்கூட நிறைவு செய்யாமல் என்னைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் ஒரு வாளியில் மூன்றில் ஒரு பங்கு கூட நிரம்பாத புண்ணாக்கை வைத்து விட்டு, சற்று ஆக்ரோசத்துடன் ஏதோ அவர் உடம்பிலிருந்த ஒரு எலும்பைக் கொடுப்பது போலச் சொன்னார்: 'ஏய், இந்தா எடுத்துக்க. இவ்வளவு தான் இருக்கு. இது கிடைக்குதேன்னு நன்றியோட இரு. மத்தவங்களைவிட உன் நிலைமை எவ்வளவோ மேல்' . எல்லாவற்றையும் விட அவர் இறுமாப்பாக இரக்கமில்லாத மாதிரி பேசினது எனக்கு வேதனையை உண்டாகியது. எனக்குள்ளே எப்படிப்பட்ட ஒரு எரிச்சல் உண்டாயிற்று என்று உன்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனக்குள்ளே இருந்த குமுறலினால் நான் என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. இப்படி என்னை மோசமாக நடத்தியது தொடர்ந்ததால் நானும் எதிர்த்துச் செயல்பட ஆரம்பித்தேன்." காளை தென்னை மரத்தை விட்டு வந்து மறுபடியும் புல் தரையில் உட்கார்ந்து அசைபோட ஆரம்பித்தது.

"நீ எப்படி எதிர்த்து செயல்பட ஆரம்பித்தாய்? நான் ரொம்ப விசாரிக்கிறேனோ?"

"ஒரு நாள் அவன் மனைவியை ஏறத்தாழத் தாக்கி விட்டேன்". என்று காளை சொன்னது.

"அவன் மனைவியையா? அவளை எதுக்குத் தாக்கின?"

"ஏன் என்றால் அவன் உணர்ச்சியற்ற நடத்தைக்கு அவள் தான் காரணமென எனக்கு உறுதியாகப் பட்டது. அவள் தான் அவன் முதுகெலும்பை கடுமையாக்கி என்னை மோசமா நடத்தச் சொல்லியிருக்கவேண்டும். இல்லையென்றால் என் எஜமான் என்னை இரக்கமில்லாமல் நடத்தியிருக்க மாட்டார்."

"எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியும்?"

"அவள் அவன் காதில் என்னைப்பற்றி கசமுசாவென்று பேசியதைப் பல முறை கேட்டிருக்கிறேன். அவள் எப்போதும் என்னைப்பற்றி வசைபாடிக் கொண்டே இருப்பாள்."

"அப்படி என்ன சொன்னாள்?"

"நான் வீட்டைச் சுற்றிச் சாணம் போடுகிறேனாம். அதனால் நிறைய ஈக்களின் தொல்லையாம். இல்லாவிட்டால், என்னால் பெரிய செலவென்றும் தொல்லையென்றும் கூறுவாள். அவனிடம் என்னை விலக்கிவிட்டுக் காளை தேவைப்படாத வேலை யொன்றைத் தேடச் சொன்னாள்."

"உன் மீது அவளுக்கு அப்படி என்னதான் கோபமோ?"

"எனக்குத் தெரியவில்லை. என் மேல் பொறாமைப் படுகிறாளோ என்று நினைக்கிறேன். நான் வண்டிக்காரரின் நம்பிக்கையான நண்பன் என்பதாலும் எப்போதும் அவருடனேயே இருப்பதும் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்."

"அப்படியும் இருக்கலாம்," என்று ஒத்துக்கொண்டது கபுரி. "சில மனைவிமார்கள் மிகப் பொறாமைக்காரிகள். கணவன்மார்களைத் தங்கள் கைக்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்புவார்கள்."

"அப்படித்தான் நானும் கேள்விப்படிருக்கிறேன். அதனால் தான் ஆரம்பத்தில் நான் மிகவும் பொறுமையாக இருந்தேன். நான் நன்றாக நடந்து கொண்டு அவளிடம் அன்னியோன்யமாகவும் அன்போடும் இருந்தால் என் மேல் அவளிக்கிருந்த வெறுப்பும் சந்தேகமும் தீர்ந்துவிடும் என்று நினைத்தேன். அப்படியில்லாமல் வருடங்கள் செல்லச் செல்ல எங்கள் இடையில் ஒரு வெறுப்பாளான சுவரையே எழுப்பிவிட்டாள். அந்த வெறுப்பை நான் குழந்தைகளுடன் விளையாடும் போதும் காட்டிக்கொண்டாள்."

"எப்படி?" 

"சில சமயம் நான் குழந்தைகளை விளையாட்டாகத் துரத்துவேன். அவர்களுக்கும் விளையாட்டென்று தெரியும். மகிழ்ச்சியாக என்னிடமிருந்து ஓடுவார்கள். பின் திரும்பி வந்து விளையாட்டாக என் பின்பகுதியில் அறைவார்கள். நானும் அவர்கள் பக்கம் திரும்பித் தலையைக் குனிந்து என் கொம்புகளால் அவர்களைத் தாக்கப் போவது போல் தோட்டத்தினுள் சுற்றிச் சுற்றி விரட்டுவேன். சில சமயம் என் மேல் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். ஒரு சமயம் அப்படிச் சிறியவன் என்மேல் உட்காரப் பெரியவன் ஒருவன் என்னை இழுத்துச்செல்லும் போது சிறியவன் வழுக்கித் தரையில் விழுந்து கத்தோ கத்தென்று கத்தவும் அழவும் தொடங்கிவிட்டான். ஓடி வந்த அவன் தாய் அவனைத் தூக்கிக்கொண்டு என்னை ஏச ஆரம்பித்தாள். 'பாலாய்ப்போன கிழட்டு எருதே! நீ வேண்டுமென்றே செய்வதைப் பார்த்தேன். நீ ஒரு பொல்லாத பிசாசு!' என்று அந்த எதிர்பாராத சம்பவத்தைப் பற்றியே மணிக் கணக்காகப் புலம்பிக்கொண்டிருந்தாள்."

"மற்றொரு சமயம் ஒரு குழந்தை சமையல் அறைச் சன்னல் வழியே எனக்கு ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்தது. நான் விரும்பிச் சாப்பிட்டுவிட்டு எனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் அவளது சிறு கையின் மத்திப்பகுதியை என் வாயால் செல்லமாகக் கவ்வினேன். அதைப் பார்த்த அவள் தாய் என்னைத் திட்டி ஜன்னல் அருகிலிருந்து விரட்டினாள். பாசத்தோடு அக்குழந்தையின் கையை என் வாயில் வைத்தேன், ஆனால் வண்டிக்காரன் மனைவியோ நான் பழத்தைச் சாப்பிட்டது போல அக்குழந்தையின் கையையும் சாப்பிட முயன்றதாக நினைத்துக் கொண்டாள்! இன்னொரு முறை ஒரு குழந்தை புத்தாண்டன்று எனக்குப் பால் சோறு கொண்டுவந்தது. அதை மிகவும் ரசித்த நான் ஒரே முடக்கில் முழுங்கி விட்டு வேடிக்கையாக என் தலையை குனிந்து என் கொம்புகளை கொண்டு அக்குழந்தையின் வயிற்றைத் தொட்டேன். கொஞ்சமும் அழுத்தம் வைக்கவில்லையென்றாலும் அவன் தாய் வாய் கிழியக் கத்திக்கொண்டு எப்படி நடந்து கொண்டாள் தெரியுமா? கேட்பவர்கள் நான் அக்குழந்தையைக் கொல்ல முயன்றதாக நினைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளெல்லாம் வண்டிக்காரனிடம் பெரிது படுத்தப்பட்டு தவறாக எடுத்துக்கூறப்பட்டதனால் அவனும் என் மீது சந்தேகப்படவும் எச்சரிக்கையாக இருக்கவும் தொடங்கினான். அவன் என்னை அங்கிருந்து விரட்டும் வரை அவளுக்கு மகிழ்ச்சியே இருக்காது என்று மெதுவாக எனக்கு விளங்கத் தொடங்கியது. எங்களுக் கிடையே அவள் கட்டிய வெறுப்புச் சுவரை இடிக்கும் எண்ணம் அவளுக்குத் துளியும் இல்லை."

"பிறகு நீ என்ன செய்தாய்?"

"அவர்களை விட்டு விலகுவதே சரியான செயலாக இருந்திருக்கும். ஆனால் அவர்களை விட்டு விலகி நான் எங்கே போவது? அதனால் நான் எல்லா இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் அவள் செய்த அவலங்களையெல்லாம் நினைத்து நினைத்து என் தலையே வெடித்துவிடும் போல இருந்தபோது, ஒரு வாளியில் அவள் எனக்குத் தண்ணீர் கொண்டுவந்தாள். என் பின்னங் கால்களால் வாளியை எட்டி உதைத்தேன். வாளியின் விளிம்பு குனிந்துக்கொண்டிருந்த அவளின் முகவாயை வெட்ட, இரத்தம் கொட்டியது. நீயே கற்பனை பண்ணிப்பார் அவள் எப்படி என்னைச் சாபமிட்டு வண்டிக்காரனிடம் குற்றங்கூறியிருப்பாளென்று."

"நீ அப்படி செய்திருக்கக்கூடாது," என்று கபுரி மெதுவாகக் காளையைக் கண்டித்தாள். "அது தவறான செயல்."

"எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒரு காளை. புனிதனல்ல! அவர்கள் அவ்வளவு தூரம் எனக்கு வேதனை உண்டாக்கி, மோசமாக நடத்திய பிறகு நான் எப்படி அவர்களை எதிர்க் காமலிருக்க முடியும்?"

"என்றாலும், நீ எதிர்த்திருக்கக் கூடாது."

"அது சாத்தியமா என்ன?"

"முடியும். எதிர்க்காமல் இருந்தால் மட்டும் தான் உன்னையும் மற்றவர்களையும் நீ பாதுகாக்க முடியும்."

"என்ன, மற்றவர்களைப் பாதுகாப்பதா?"

"அவர்களைப் பாதுகாப்பதென்பது அவர்கள் உனக்கு மேலும் தீங்கு புரியாமல் இருக்கச் செய்வதும், நிலைமையை மேலும் மோசமாக்காமல் இருக்கவைப்பதும் தான். நீ மேலும் மேலும் எதிர்க்கத் தொடங்கினாயோ?"

"ஆமாம், ஆமாம். ஏனெனில் என் நிலைமை ஒரு அளவைத் தாண்டிப் போயிடிச்சு. நான் என்னவோ அவங்க மத்தியில் இருக்கிற அரக்கனைப் போலவோ, தீங்கு செய்யும் விஷப் பாம்பு போலவோ குழந்தைகளும் என்மேல சந்தேகப்படவும், எச்சரிக்கையாக இருக்கவும் ஆரம்பிச்சுட்டாங்க.அவங்க நடத்தை எனக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கிடுச்சு. அவங்க தாயார் அவங்களை என்னிடம் வம்பு செய்ய முடுக்கி விட்டாள் - வாலை இழுப்பதும், கல்லால் அடிப்பதும் போன்ற வம்புகள். ஒரு முறை ஒரு சிறுவன் என்னைக் கவண் கல்லால் அடித்தபோது உண்மையான கோபத்தோடு அவனைத் துரத்தினேன். எனக்குக் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்தச் சமயத்தில் நான் மிகவும் எரிச்சலோடும் கிளர்ச்சியோடும் இருந்தேன். கல் என் மேல் பட்டதோ இல்லையோ எனக்குள் எழுந்த கோபத்தாலும், ஆத்திரத்தாலும் அந்தப் போக்கிரியைத் தோட்டம் முழுவதும், அவன் வீட்டுக்குள் ஓடித் தப்பித்துக் கொள்ளும்வரை, துரத்தித் துரத்தி விரட்டினேன்.. "

"அது நீ செய்த மற்றொரு தவறு," என்று கபுரி தலையை உற்சாகமில்லாமல் ஆட்டிக்கொண்டே சொன்னது. வண்டிக்காரன் மனைவிக்கு உன்மேல் குற்றம் கூற அதிக வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டாய். அவள் அதை நன்கு பயன் படுத்தியிருப்பாள். அடுத்தமுறை நீ அப்படி ஏதாவது செய்தால் கண்டிப்பாக வண்டிக்காரன் அவள் சொல்வதைக் கேட்டு உன்னை வெளியே அனுப்பியிருப்பான்."

"எனக்குத் தெரியும்." என்று காளை முணுமுணுத்தது. "அது தான் வண்டிகாரனுக்கும் எனக்கும் ஏற்பட்ட திருப்புமுனையா ஆயிடுச்சு. அதன் பிறகு அவனும் அவளைப்போலவே கடினமானான். என்னை அவமதிக்கிறது மட்டுமில்லாமல் அடிக்கவும் தொடங்கி விட்டான்."

எவ்வளவு மடத்தனமா இருந்திருக்க! அவனையும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டியா?"

"ஆமாம், நான் பிடிவாதமாகவும் மனக்கசப்போடும் இருக்க ஆரம்பித்தேன். அவன் என்னை எவ்வளவுதான் அடித்தாலும் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நகராமலேயே இருப்பேன். அவன் என்னை அடி அடியென்று அடித்தாலும் நான் தலையைக் குனிந்து, காலை இறுக்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த இடத்திலேயே இருப்பேன். கடைசியில் அவன் கண்ணிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வரத் தேம்பி அழ ஆரம்பித்து விடுவான்."

கபுரி தலையைத் துயரத்தோடு ஆட்டிற்று. "இதையெல்லாம் கேட்க வருத்தமா இருக்கு," என்றது. "எதனால இப்படியெல்லாம் நடந்ததுன்னு எனக்குத் தெளிவாத் தெரியிது. நீயும் எரியும் நெருப்பில் எண்ணையைச் சேர்த்துட்ட."

"நானா?" என்று காளை கர்ஜித்தது, கண்களை வானம் நோக்கி உருட்டியவாறே. "இவையெல்லாம் என்மேல் ஏவப்பட்டவை. என்னைக் குற்றமிழைத்தவனென்று சொல்கிறாயே? ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

"காளையே உனக்குத் தெரியவில்லையா, அவள்தான் உனது முற்பிறவியிலிருந்து வந்த கருமம் என்று. அவளது பகைமைக்கு எதிர்த்துப் போராடாமல் இருப்பதை விட்டு விட்டு நீயாகப்போய் உனக்கும் உனது எஜமானனுக்கும் மேலும் அதிக தீய கருமத்தைச் சேர்த்துக் கொண்டாய். அவளது விரோதத்தையும் கீழ்க்குணத்தையும் புறக் கணித்துவிட்டு நீ அவளை மன்னித்திருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. அவளது பகைமைக்கு எதிராக உருக்குப்போல உறுதியாயிருந்து உனது நற்குணத்திலிருந்து வலிமையை ஈர்த்திருக்க வேண்டும். இது போன்ற நேரங்களில் தான் நமது நற்குணம் கேடயம் போல நமது உதவிக்கு வருகிறது."

"நற்குணமென்று எதைச் சொல்கிறாய்? ஐந்து நல்லொழுக்க உபதேசங்களையா?"

"ஆமாம், ஆனால், ஆழமான அர்த்தத்துடன். நான் என்ன சொல்கிறேன் என்றால் நம் எண்ணங்களில் துவங்கி எல்லாவற்றிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். கிடைக்கும் குறைந்த உணவிற்கும், தங்கியிருக்கும் இடத்திற்கும், கிடைத்த அன்பிற்கும் நன்றியோடு இருந்திருந்தால் நல்ல கருமத்தைச் சேர்த்து மெல்ல மெல்ல உனது பழைய தீய கருமத்தின் விளைவுகளையும் தணித்திருக்கலாம்."

"நானே ஒரு மாடு. என்னிடமிருந்து சாத்தியமற்ற நடத்தையை எதிர்பார்க்கிறாயே? என் எண்ணங்களெல்லாம் உணவு, தூக்கம், ஈ மற்றும் உண்ணிகளின் தொல்லையிலிருந்து சற்று நேரம் விடை பெறுவது, என்னைச் சுற்றியிருப்பவரிடமிருந்து அன்பை எதிர்பார்ப்பது போன்றவை மேல் தான்."

"துக்கத்தின் பிணையிலிருந்து தப்பவேண்டுமென்றால் அப்படிப்பட்ட அடி மாட்டு நிலையிலிருந்து மிக்க முயற்சியெடுத்து நீயே உன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். "

காளை சற்று நாணத்தோடு நிலத்தை நோக்கியது. "என் எஜமான் மட்டும் என்னிடம் அன்போடு நடந்திருந்தால் நானும் எதிர்த்திருக்கமாட்டேன்," என்று மெதுவாகச் சொன்னது. "நான் எவ்வளவு காலம் மிகவும் பொறுமையாக இருந்தேன்! எனது அன்பான எஜமான் என்னிடம் கடுமையாகவும் இரக்கமில்லாமலும் நடந்து கொண்டதும், எனக்கெதிராக மாறியதும் என் மனதைப் புண் படுத்தி விட்டது."

"உன்னுடைய வண்டிக்காரன் ஒன்றும் மற்ற இளம் குடும்பத் தலைவர்களைவிட மாறுபட்டவன் இல்லை," என்று கபுரி அறிவுரை கூறியது. "ஒரு இளைஞன் திருமணம் செய்து குழந்தைகள் வந்த பிறகு அதனால் ஏற்படும் பொறுப்புகளின் காரணமாக, மற்றவர்களின் தேவைகளும், உணர்ச்சிகளும் - அது அவனோடு நெருங்கியிருக்கும் ஊழியர்களானாலும் சரி, பெற்றோர்களானாலும் சரி அவன் கண்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன."

"நான் எப்படி மறுபடியும் எதிர்க்காமல் இருப்பது என்று சொல்லேன்," என்று இறைஞ்சிக் கேட்டது காளை.

"முதலில் இங்கு எப்படி வந்தாய் என்று சொல்" என்று வினவியது கபுரி.

"ஒரு நாள், ஒரு வார்த்தையும் பேசாமல், என் எஜமான் எனக்கு நிறையத் தீணி கொடுத்து, நான் பணிவோடும், அவர் சொல்லுக்குச் செவி சாய்க்கிற நிலையிலும் இருந்தபோது என்னை இங்கு கொண்டுவந்தார். கோவிலின் சூழல் எனக்கு நல்ல விளைவு ஏற்படுத்தும் என்று நினைத்திருப்பார் போலும். மேலும் இங்கு மேய்ச்சலுக்கு நிறைய இடமும் இருக்கிறது என்று சொல்லவே வேண்டியதில்லை."

கபுரி காளை சொன்னதைக் கருத்தில் வாங்கிக் கொண்டது. "அவர் திரும்ப உன்னைக் கூட்டிச் செல்ல வந்தால் நீ மிகிழ்ச்சியோடு அவரோடு போவாயா?"

"வந்தாலாவா?" காளை மெதுவாகத் திரும்பிக் கண் புருவத்தை உயர்த்திக் கபுரியைப் பார்த்தது. "நீ என்ன சொல்கிறாய், 'வந்தால்' என்று?"

"என் அன்புக்குரிய காளையே, அவர் திரும்பி வரமாட்டார் என்று உனக்குத் தோன்ற வில்லையா?"

இடி விழுந்தார்போலக் காளை அசையாமல் நின்றது. "அவர் என்னை அழைத்துச்செல்ல திரும்ப வரவில்லையென்றால் ...." நடுங்கிய குரலுடன் முணுமுணுத்தது, "உண்மையைச் சொல்லப் போனால், என்ன செய்யவேண்டுமென்று எனக்கே புரியவில்லை."

"வண்டிக்காரனின் மனைவியை மாற்றவே முடியாதென்றும் , அவள் உன்னை விலக்கும் வரை திருப்தியடையமாட்டாள் என்றும் நீயே என்னிடம் சொன்னாய். மேலும் உன் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்றும் சொன்னாய். அப்படி இருக்கும் போது உனது எஜமான் மீதான உனது பற்றின் இயல்பை நீ கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் - அவருடன் இருப்பதால் உனக்கு இருக்கும் பாதுகாப்பு உணர்வு உண்மையானது தானா என்று எண்ணிப்பார். பற்று ஒருவருக்கு அளவுக்கு மீறிய துக்கத்தைக் கொடுக்கக் கூடும்."

"தெரியும்," என்று காளை ஒத்துக்கொண்டது. "எனக்கு தெளிவாகிறது. வண்டிக்காரன் என்னிடம் அன்பாகப் பேசியபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். என் தொல்லை களெல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆனால் அவர் இரக்கமில்லாமலிருக்கும்போதும், எனது உணவைக் குறைத்தபோதும் என்னிடம் கடினமாகப் பேசியபோதும் மனச்சஞ்சலம் கொண்டு ஆழ்ந்த துயரத்திலிருப்பேன். கொஞ்சம் மட்டும் உணவு கொடுத்திருந்தாலும் அன்பாக இருந்திருந்தாரென்றால் அதுவே எனக்குப் போதுமானதாக இருந்திருக்கும். அவரது வறுமையை நான் ஏற்றுக்கொண்டு எரிச்சலூட்டியிருக்கமாட்டேன். என்னிடம் கொஞ்சம் அன்பும், எனது நலத்தின் மேல் கொஞ்சம் அக்கரையும் காட்டியிருந்தால் நிலைமை இப்படியாயிருக்காது. ஆனால் அவர் தன் மனைவியைப்போலவே ஆக்கிரமிக்கவும் அடக்கியாள்பவராகவும் ஆகிவிட்டார். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்! எல்லோரையும், எல்லாவற்றையும் நான் வெறுக்கிறேன்!" என்று காளை திடீரென உரக்கக் கூச்சலிட்டது.

"அட, அட, நண்பனே, நிதானமாக இரு. உனது நிலை குலைந்த செயலினால் உன்னையே அழித்துக் கொள்கிறாய். உனக்குள் என்ன நடக்கிறது என உனக்கு விளங்குகிறதா? உனது குறைபாடுகளைப் பற்றிய உணர்ச்சிகளிடம் துரதிர்ஷ்டவசமாகச் சிக்கிக் கொண்டாய். அந்த உணர்ச்சிகள் உன்னைச் சுற்றிச் சுற்றித் துரத்தி வருகிறது."

"இதை எப்படி அகற்றுவது என்று சொல். என்னுள் இருக்கும் இந்த பலாத்கார உணர்வையும் வெறுப்பையும் எப்படி நீக்குவது? என் உள்ளம் எரியும் நிலக்கரியைப் போலத் தகிக்கிறது. மூளையிலும் குழப்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை."

"நானும் ஒருநேரத்தில் அதே நிலைமையில் இருந்திருக்கிறேன்," என்று கபுரி சொன்னது. "நண்பனே, உன் வலி நீங்க நீண்ட காலம் ஆகும்."

"காலம் எனக்கு ஆறுதலளிக்க வேண்டாம்!" என்று காளை எதிர்ப்போடு கர்ச்சித்தது. "நானே எனக்கு ஆறுதலளிக்க விரும்பிகிறேன்!"

"நல்லது, அப்படியானால் தம்மபதத்திலிருந்து இந்த வரிகளைக் கவனமாகக் கேளும்:

"பற்றிலிருந்து பிறப்பது துயரம்,
பற்றிலிருந்து பிறப்பது அச்சம்,
பற்றிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றவருக்கு
துயரமும் இல்லை, அச்சமும் இல்லை."

காளை மிகவும் குழம்பிப்போய் விட்டதாகத் தோன்றியது. அதன் வாலையும் காதையும் ஆட்டியது.

"ஆமையிடம் சென்று மேலும் அறிவுரை கேள்," என்று கபுரி மெதுவாகச் சொன்னது. "அவர் ஒரு ஞானி. நீ குணம் அடையத் தக்க மருந்து தருவார் - புத்தர் நியமித்த மருந்தும் அதுவே. சும்மாவா நம் புத்தரை 'ஒப்புயர்வில்லாத மருத்துவர்' என்று சொன்னார்கள்."

"ஆமையை எங்கே காண்பேன்?"

"வேலியோரம் தினம் ஒருமுறை தீனி தேடி வருவார். அப்போது அவருடன் பேசலாம்."

அடுத்த நாள் காளை கோயிலருகில் இருந்த வேலியோரம் மூலை முடுக்கெல்லாம் துருவித்துருவி ஆமையைத் தேடியது. கடைசியில் ஆமையைக் கண்டது.

"ஐயா, உங்களிடம் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். உங்களைத் தொல்லை செய்கிறேனா?" என்று காளை சற்றுத் தயக்கத்துடன் கேட்டது.

"இல்லை, இல்லை. கேள். என்ன வேண்டுமானாலும் கேள்."

"ஐயா, எனது தலை பற்றி எரிகிறது. எனக்குள் எரிந்து கொண்டிருக்கும் நிலக்கரி இருக்கிறது. எனக்குள் அவ்வளவு வேதனை இருக்கிறது. என் உடலே விஷமாகிவிட்டது. என் எலும்பினுள் உள்ள ஊனிலும் விஷம் ஏறிவிட்டது போலத் தோன்றுகிறது. நான் ஊக்கமில்லாமல் இருக்கிறேன். எனக்கு ஒரு மருந்து கொடுங்கள்."

"உடனடியாகக் குணப்படுத்தக்கூடிய மருந்து ஏதும் இல்லை," என்று ஆமை மெதுவாகச் சொன்னது, காளையின் சிவந்த கண்களைப் பார்த்து ஆழமாக ஊடுருவி அதன் துன்பத்தை அறிந்தது போல. "உனது அருவருப்பையும், பற்றினையும், போலியான பாதுகாப்பின் மீதான ஒட்டுதலையும் விலக்க நீ கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். பயிற்சியைத் துவக்க உன் மனதிலிருந்து எல்லாக் கோப எண்ணங்களையும் நீக்கி விடு. எல்லோர் மீதும் கருணை உணர்ச்சிகளைக் கவனமாகப் பேணிவளர்."

"எப்படி?"

"உதாரணத்திற்கு, உன் வாழ்நாளில் மற்றவர்கள் உனக்குச் செய்த சிறு சிறு அன்பான செயல்களையெல்லாம் எண்ணிப்பார். அப்போது எழும் நன்றியுணர்ச்சிகளை வளர விட்டு விரிவாக்கு. பின் அந்த அன்பான எண்ணங்களை அனைவருக்கும் பரப்பு. எப்போதெல்லாம் கோப எண்ணங்களோ வெறுப்பான எண்ணங்களோ தோன்றினால் அவை தோன்றியுள்ளன என்பதை உணர்ந்து கொள். அந்த எரியும் நிலக்கரிகளை மிதித்து அணைத்துச் சாம்பலாக்கி விடு. அன்பான என்ணங்களைப் பயிர் செய். எப்போதும் கவனமாக இரு. உன் எண்ணங்களை அவதானி. அறிஞர் சொல்வதுபோல 'தீவினை செய்யாதே, நல்லதைப் பேணி வளர், மனதைத் தூய்மையாக்கு: இதுவே புத்தர்களின் வாக்கு.' "

"அவ்வளவுதானா? இது தானா மருந்து?"

"அவ்வளவு தான். ஆனால் நண்பரே, சொன்னபடி மருந்தெடுப்பது சுலபமான விஷயம் இல்லை. சரியாக மருந்தினை எடுத்துப் பழக வாழ்நாள் முழுதும் கூட எடுக்கக்கூடும். இருந்தாலும் அது பயனுள்ள செயல். கோபத்திலிருந்தும், வெறுப்பிலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுபட்ட பிறகு சுதந்திரத்தினுடனும் திருப்தியுடனும் வாழலாம். ஒப்புயர்வில்லாத பேரின்பத்தினை இந்த வாழ்நாளிலேயே அனுபவிக்கலாம். "

"உண்மையாகவா? நீங்கள் என்னை ஏமாற்றவில்லையே?"

"அட, கண்டிப்பாக உன்னை நான் ஏமாற்றவில்லை. அடங்கா ஆசையையும், வெறுப்பையும், சோம்பலையும், சோர்வையும், பரபரப்பையும் கவலையையும், சந்தேகங்களையும் நீக்கிய யாவருக்கும் வரும் மன சுதந்திரத்தினைச் சூத்திரங்களும் வர்ணிக்கின்றன. அந்த சுதந்திரம் எப்படி இருக்குமென்றால்:

கடன் வாங்கிய ஒருவன், அதை வைத்துத் தொழில் செய்த பிறகு இலாபம் பெற்றதனால் கடனைத் திரும்பக் கட்டிவிட்ட பிறகு ஏற்படும் உணர்ச்சி போன்றதென்றும்,

நோய்வாய்ப்பட்ட ஒருவன் உடல் நிலை சரியான பிறகு அவனுக்கு ஏற்படும் நல் உணர்ச்சி போன்றதென்றும்,

சிறைக்குச் சென்ற ஒருவன் விடுதலையடைந்த பிறகு அவனுக்கு ஏற்படும் உணர்ச்சி போன்றதென்றும்,

அடிமையாய் இருந்த ஒருவன் அவன் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவனுக்கு ஏற்படும் உணர்ச்சி போன்றதென்றும், கடைசியாக, 


பாலைவனச் சாலையில் தொலைந்து போய்ப் பசிக்கும் ஆபத்திற்கும் உட்பட்ட ஒருவன் ஒரு கிராம எல்லையை அடைந்து பாதுகாப்பான இடம் வந்ததனால் அவனுக்கு ஏற்படும் உணர்ச்சி போன்றதென்றும் கூறப்படுகின்றது."

"இந்த அமைதிக்கு குறுக்கு வழி ஏதும் இல்லையா?"

"நீ ஒட்டிக் கொண்டிருக்கும் பொருட்கள் மீதான பிணைப்பை விட்டு விட்டால், நீ பெரும் சுதந்திரத்தினை அனுபவிப்பாய்."

"எப்படி?" என்று காளை கேட்டது. "பிணைப்பை விட்ட பிறகு எப்படிச் சுதந்திரம் அனுபவிப்பது?"

"உணர்வால் அறிகிற பொருட்கள் எல்லாம் நிலையற்றவை. நிலையில்லாத எப்பொருளும் துக்கம் விளைவிக்கக்கூடிய இயல்புடையது. எனவே எங்கு இருக்கிறது நீடித்து நிலைத்திருக்கிற பாதுகாப்பு? பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் துயரம் உண்டாகிறது. பிடிக்காத ஒன்றைத் திடீரெனச் சந்தித்தால் அங்கும் துயரம் உண்டாகிறது. எனவே தேவை என்று நினைப்பதையும், தேவை இல்லை என்று நினைப்பதையும் விட்டுவிட்டால் அங்கு ஒரு பெரும் சுதந்திரத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும். ஒருவரின் மகிழ்ச்சி உணர்வால் அறிகிற நிலையில்லாத பொருட்கள் மீதும், உணர்ச்சிகள் மீதும் சார்ந்திராமல், பற்றினைக் கைவிடுவதனால் வரும் அமைதியின் மீது சார்ந்திருந்தால் அதுவே அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி வெளி உலகில் கிடைக்கும் எந்த இன்பத்தைக் காட்டிலும் மேலானது."

"அப்படியென்றால் நான் என் எஜமான் மீதும், உணவின் மீதும் உள்ள பற்றை விட்டு விட வேண்டுமா?"

"ஏதோ அவை தான் எல்லாமே என்றும், அவை இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லாதது போலும் அளவு கடந்த பற்று வைக்கவேண்டாம். இருப்பதை வைத்துத் திருப்தி அடை. உன்னிடமும், எல்லோரிடமும், எல்லாவற்றினிடமும் சாந்தமாக இரு."

"என்ன, என் எஜமானின் மனைவியிடமும் அவளது கடுமையான சுடுசொல்லுடனுமா? அது எப்படி முடியும்?" என்று காளை இகழ்ச்சியாகச் சிரித்தது. "அதை எப்படி நிறைவேற்றுவது?"

"அட காளையே! வெறுப்பின் மீதான பிணைப்பை விட்டொழி," என்று ஆமை சற்று கடினமாகச் சொன்னது. "உனது வேதனையை அணைத்துக்கொண்டு மற்றவர்மீதான எதிர்ப்பைப் பேணி வளர்த்துக் கொள்கிறாய். ஏதோ அவை தான் விலைமதிப்பற்ற புதையலைப்போல. வண்டிக்காரன் மனைவி அவள் பேச்சால் வேதனை உண்டாக்குகிறாள் - அதனால் என்ன? அதை மறந்துவிடு. விட்டு விடு. வேதனையையும் வெறுப்பையும் விட்டுவிட்டு அவைகளோடு தொத்திக் கொள்ளாமல் இருந்தால் எவ்வளவு சுதந்திரத்தோடு இருப்பாய் என்று உணர்ந்து பார்."

"ஆனால் அதை எப்படிச் செய்வது? அதன் இரகசியத்தைச் சொல்லுங்கள் - செயற் படுத்தும் முறை என்ன? எனக்குத் தெரிந்ததெல்லாம் என்மேல் சற்று விஷத்தோடு சொல்லப்படுவதெல்லாம் எனக்கு வேதனையை உண்டாக்குகிறது என்பது தான். என் இதயத்தை அம்பு துளைத்தார்ப்போல வலிக்கிறது. அதன் விளைவினால் என் உடலே நடுங்குவது போலத் தோன்றுகிறது. அப்படி இருக்கும் போது நான் எப்படி ஒன்றும் நடக்காதது போலப் பாசாங்கு செய்வது? என்னை எதுவம் தாக்காதது போல எப்படி நடிப்பது?"

"பாசாங்கு செய்யாதே. உனது மன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிசெய். காளையே, கவனமாகக் கேள். அந்த அமைதியும் சாந்தமும் தானாக வராது.- முயற்சியெடுத்து ஒரு வகையான தியானம் செய்தாக வேண்டும். அந்த வேதனையின் இயல்பையும் ஏன் உண்டாகியது என்பதைத் தெரிந்தகொள்ளவும் உள்ளத்தில் ஆழ்ந்து தேடவேண்டும். சொல்லப்பட்டதை மட்டுமே கவனத்தில் கொள் - வேறு கற்பனைகளைச் செய்யாதே. பழைய நிகழ்வுகளை நினைத்து அதே மாதிரியாக முன்பே சொல்லப்பட்டதாகவோ பழைய நிகழ்வுகளுடன் ஒட்டிக்கொண்டோ முந்திரிக்கொட்டை போல அவரசப்பட்டுத் தவறான முடிவெடுக்காதே. அப்படிப்பட்ட குழம்பிய எண்ணங்களை பெருக்கித் தள்ளு. கேட்டதை வைத்து உனது பாதுகாப்பு என்று நீ தவறாகக் கருதுவதற்கு இடைஞ்சல் வருமோ என்று எண்ணிப் பயத்தால் தவறான முடிவெடுக்காதே. கூறப்பட்டதை மட்டுமே உணரவேண்டும், பின் எதனால் அதைக்கேட்டு மனச்சஞ்சலம் கொள்கிறாய் என்று தெரிந்துக்கொள்ளவேண்டும்."

"இப்படிச் சுய விசாரணை செய்யும் போது மெல்ல மெல்ல உணர்வது என்னவென்றால், அச்சொற்கள் உன்னைப் புண்படுத்துவதற்கான காரணம் உனது 'நான் என்ற ஆணவ' நோக்கம் தான். நீ யார் என்று நீ கருதுவதும் மற்றவர் எப்படி உன்னைக் கருதவேண்டும் என்ற உனது கற்பனையும் தான். உண்மையில் அப்படிப்பட்ட ஆணவமும் இல்லை; 'தாம்' என்றும் ஒன்றும் இல்லை. எல்லாம் மனதாலும் உடலாலும் உணரக்கூடிய கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் யாதொருவரிடமும் சேர்ந்திராத பொருட்கள் தான் . இப்படித் தெளிந்து புரிந்து கொள்ளும் தன்மை நமது மனம் தூய்மையாயிருந்தால் தான் வரும். எப்போதுமே ஆழ்ந்து கவனமாக இருக்கும் தன்மையைப் பேணிவளர்த்தால் தான் மனதைத் தூய்மையாய் வைத்திருக்க முடியும். மனதின் தூய்மையைக் கெடுப்பவைகளை நீக்கியபின், உனது பிரச்சனைகளை மனதை ஒருமைப்படுத்திக் கவனிக்கமுடியும். அப்போது தான் தெளிவாகத் தெரியும் 'நான்' என்று எதுவும் இல்லை என்பது. இருப்பதெல்லாம் நிலையற்ற எண்ணங்களும், உணர்ச்சிகளும் - உடலின் மனதின் உணரக்கூடிய பொருட்கள் மட்டுமே. இந்த உண்மையைப் பார்த்து உணர்வது ஒரு பெரும் கண்டுபிடிப்பு. இதுவே கைவிட வேண்டியதற்கான அடிப்படையான தேவை."

"தியானத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு இதை நீயே பார்க்க முடியும். இப்படி உணர்கிற பொருட்களெல்லாம் ஒரு காரணத்தினால் இல்லாமல் பல தொடர்புகளுடைய காரணங்களாலும், நிபந்தனைகளாலும் உண்டாகின்றன. அதனால் சூத்திரங்கள் இவ்வாறு சொல்கின்றன:
'இந்த உடல் நான் இல்லை என்பதையும், 
உணர்ச்சிகள் நான் இல்லை என்பதையும், 
மனச் சிந்தனைகள் நான் இல்லை என்பதையும், 
(மனத் திரையில்) தெரிந்திருத்தல் நான் இல்லை என்பதையும் 
சிந்தித்துப்பார். இவையெல்லாமே நிலையற்றவை. நிலையற்றவை எல்லாம் துக்கம் உண்டாக்கும். துன்பப்படுவது நான் இல்லை.' இவை எதிலும் 'நான்' என்ற ஒன்று இல்லை. இதை நீயே பார்த்த பிறகு கைவிடக் கற்றுக்கொள்வாய். எதிர்க்காமல் இருக்கக் கற்றுக் கொள்வாய். பின் உன்னுள் உள்ள வேதனையைக் குறைத்து அமைதி காண்பாய்."

"அதாவது நீங்கள் என்ன சொல்கிறீர்களென்றால், என் எஜமான் என்னைத் திரும்ப ஏற்றுக்கொண்டு மீண்டும் என்னைத் துன்புறுத்தினால், உண்மையில் 'நான்' என்று ஒன்றும் இல்லை என்பதால், நான் பொறுத்துக்கொண்டு கோபப்படாமலும் ஆட்சேபிக்காமலும் இருக்கவேண்டும், என்றுதானே?"

"என் இனிய நண்பரே," ஆமை கருணையுடன் சிரித்தது. "நீ மருந்து கேட்டாய், நான் உனக்குக் கொடுக்கிறேன். வேண்டுமானால் எடுத்துக்கொள், இல்லையேல் விட்டுவிடு. உன்னிடம் மனதைத் தூய்மைப் படுத்தித் தெளிவாகப் பார்க்கக் கற்றபின் உள் அமைதி காண மட்டுமே சொல்கிறேன். 'நான்' என்ற ஆணவம் இல்லை என்பதை உணர்ந்து உள்ளுக்குள் அமைதியாகவும் காற்றில் வளையாத கம்பம் போல உறுதியாகவும் இருந்தால் - பற்றினை விட்டொழிப்பது பெரிய பிரச்சனை இல்லை."

"இந்த மருந்து உறுதியாகத் துக்கத்திலிருந்து முழு விடுதலை தருமா?"

"உறுதியாக நீடித்து நிலைக்கும் நிவாரணம் தான் இது. தற்காலிக நிவாரணமோ அரைகுறை நிவாரணமோ அல்ல. நான் பல விதமான சடங்குகளையோ மந்திரங்களையோ கொண்ட மர்மமான மாயா ஜால மருந்து ஏதும் தரவில்லை. உள்ளத்தை முற்றாக மாற்றும் 'மந்திரம்' மட்டுமே புத்தரின் மருந்தின் நோக்கமாகும். அதன் குறிக்கோள் முழுமையாகப் பற்றினை விடுவதுதான். இருப்பின் மேலான பற்று, இருப்பில்லாததன் மேலான பற்று, உணர்வினால் ஏற்படும் இன்பத்தின் மேலான பற்று, வெறுப்பின் மேலான பற்று, நோக்கங்கள் மேலான பற்று - இவை எல்லாவற்றையும் விட்டால் தான் துக்கதிலிருந்து நீடித்த விடுதலை கிடைக்கும். நினைவில் கொள்: கோபமில்லாமலும் வெறுப்பில்லாமலும் மகிழ்ச்சியாக இறப்பது, மகிழ்ச்சியில்லாமல் வெறுப்புடன் இறப்பதைவிட மேல். ஏனென்றால் அடுத்த பிறப்பில் இருப்பதை விட மிக மோசமான நிலையில் பிறக்கக்கூடும்."

ஆமையின் பதிலைக் காளை எண்ணிப் பார்த்தது. பின் சற்று முறைத்தவாறு வாலையும் காதையும் அசைத்துத் தோலையும் இசித்தது. சற்று நேரத்தின் பின் நெற்றியின் சுறுக்கம் நீங்கி, கண்களிலிருந்து தெளிவான வெளிச்சம் வந்தது. அசை போட்டுக் கொண்டே தலையை விருப்பந் தெரிவிக்க ஆட்டியது.

"ஐயா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று விளங்கத் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன்."

"நல்லது. ஆனால், விடுதலை பெறத் தேவையான மாசற்ற கவனமும், தெளிந்து புரிந்து கொள்ளும் ஆற்றலும் கிடைக்கத் தியானம் செய்தாக வேண்டும். உடல் மற்றும் மன உணர்ச்சிகள் மீது கவனம் இருக்க வேண்டும். உன்னிடமே நட்புடனும் சாதுவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதே நட்பையும் அன்பையும் புரிந்து கொள்ளும் இயல்பையும் மற்றவரிடத்திலும் காட்ட முடியும். நான் என்ற ஆணவத்தை அழித்து எல்லோரிடமும் எல்லாவற்றினிடமும் ஒரு இணக்கத்தை அனுபவிக்க முடியும். உனது எண்ணங்களையும் மன உணர்ச்சிகளையும் புரிந்து கொள். அப்போது, நான், தாம், எமது என்று நாம் கூறிக் கொள்வதன் இயல்பினை அறிந்து கொள்ள முடியும். நிலையற்ற வெறுமையான, உறுதியில்லாத - உணர்ச்சிகளால் உணரக்கூடிய பொருட்களை கை விட்ட பின்பும், நான் என்ற ஆணவத்தை அழித்த பின்பும், (ஐந்து) குவியங்களின் மேல் உள்ள பிணைப்பை விட்டபின் உனக்கே விளங்கும் சுதந்திரம் எப்படி வருமென்று."

"ஆம், எனக்குக் கொஞ்சம் விளங்குகிறது. கண்டிப்பாக நான் மருந்தை உட்கொள்வேன் - முதலில் மனதைத் தூய்மையாக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்து எனது பற்றினையும் வெறுப்பினையும் அகற்றுவேன். இப்படிப் பாதுகாப்பு என்று நான் தவறாக எண்ணுவதன் மேல் உள்ள பிணைப்பை விட்டு விடுவேன்." என்று காளை தன்னம்பிக்கையோடு சொன்னது.

"நல்லது காளையே! மிக்க நல்லது! செய்ய வேண்டியது எளிதானது இல்லை. ஆனால் மருந்தைச் சொன்ன முறையில் பயன் படுத்தினால் மிக விரைவில் அதன் பலனான உள்ளடக்கத்தினையும், துக்கத்தின் இறுக்கமான பிடியிலிருந்து முழுச் சுதந்திரத் தினையும் பெறலாம்."


முற்றும்

Tamil Translation: P. I. Arasu, Toronto, Canada  Proof reading: Mr. P.K. Ilango M.A., Erode, India. 
தமிழாக்கம்பாஅரசுகனடா.   பிழை திருத்தம்:  திருபாகாஇளங்கோ M.A.ஈரோடுதமிழ்நாடு.

ஆசிரியரைப் பற்றி:
சுவமாலீ கருனரத்தினா இலங்கையில் 1939 அம் ஆண்டு பிறந்தார். ஆரம்பகாலக் கல்வியினை வாஷிங்டன் நகரத்திலும் கொழும்பு நகரத்திலும் பெற்றார். அவர் தந்தை இலங்கையின் ராஜதந்திரியாகப் பர்மா நாட்டில் 1957-61 முதல் இருந்த போது இரங்கூன் நகரத்தில் போற்றுதலுக்குரிய மஹாஸி சாயாதேவ் மற்றும் போற்றுதலுக்குரிய வெபு சாயாதேவ் அவர்களிடம் தியானப் பயிற்சி பெற்றார். முதலில் 1973 ஆம் ஆண்டு சிறு கதைகளின் தொகுப்பொன்றை வெளியிட்டார். அவரது கதைகள் பல இலக்கிய வெளியீடுகளில் இடம் பெற்றிருக்கின்றன.  

Provenance:
©1996 Buddhist Publication Society.
Bodhi Leaves No. 140 (Kandy: Buddhist Publication Society, 1996). Transcribed from a file provided by the BPS.
This Access to Insight edition is ©2005–2010.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge and, in the case of reprinting, only in quantities of no more than 50 copies; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
How to cite this document (one suggested style): "The Healing of the Bull: A Story", by Suvimalee Karunaratna. Access to Insight, June 7, 2010, http://www.accesstoinsight.org/lib/authors/karunaratna/bl140.html.