‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 12            

dravidian_1779.jpg

(நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் தியாகராயர், நடேசன், மாதவன் நாயர், பனகல் அரசர் இவர்களுடன் நீதிக்கட்சி பிரமுகர்கள்)

மூன்றாவது அத்தியாயம்

“வேதியராயினும் ஒன்றே - அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே”

-இது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் பிரிவையே குறிக்கிறது.

“வேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ் நாடு

வேதம் என்பது பார்ப்பனர்கள். வீரம் என்பது பார்ப்பனரல்லாதவர்கள் என்றே இது அர்த்தமாகிறது. இப்படி பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் பிரிவை சாதகமான நேரங்களில் பெருமையோடு நுட்பமாக உணர்த்துகிற பாரதி,நீதிக் கட்சித் தலைவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதவரின் உரிமையைப் பேசியபோது - கோபமுற்று கமண்டலத்தில் இருந்து ‘மந்திர ஜலம்’ எடுத்துத் தெளித்து சாபிமிடுகிறார்:

“இந்த ‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி’ கால கதியில் தானே மங்கி அழிந்துவிடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற அய்க்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலியவற்றில் கவுரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்றே ஆவலுடையவர்களே இக்கிளரச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.”

1906இல் முனிசிபல் சார்பாக சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட மாதவன் நாயரை ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரையில், தியாகி, அறிவாளி என்று போற்றிய பாரதி, 1916க்குப் பிறகு ‘பார்ப்பனரல்லாத கிளர்ச்சி’ யில் மாதவன் நாயர் பங்கெடுத்த பின் அவரையும் சேர்த்தே இங்கு திட்டுகிறார்:

“திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம் சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருள்ளே ‘அல்லாதார்’ கிளர்ச்சியைச் சேர்நதிருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடன் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறு யாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.

‘பிராமணரல்லாதார்’ என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.

ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர்.

இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது.

எல்லா வகுப்பினரையும் சாரும். பிராமணரும் மற்ற வகுப்பினரைப் போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம், சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே, இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்.”

-என்று பஞ்சாயத்துப் பேசுகிற மகாகவி,

பார்ப்பனர்கள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டபோது - நானாடவில்லையம்மா…. சதையாடுது…’ என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு ‘டேய்… எவன்டா அவன் எங்க ஆளுங்கள அடிச்சது’ என்று எகிறிக் குதிக்கிறார்.

“என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அடே! பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகிறார்கள். எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா? பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா? எதற்கும் இந்து மதவிரோதிகள் பேச்சைக் கேட்கலாமா?

 நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற இந்துக்கள் கும்பிடவில்லையா?”

இந்த வரிகளைப் பின் தொடர்கிற வரிகள், ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவது போல, ‘தாழ்த்தப்பட்ட மக்களே உண்மையான இந்துக்கள்; அவர்களைக் கைதூக்கி விட வேண்டும்’ என்ற கதையெல்லாம் வருகிறது.

சுப்பிரமணிய பாரதியின் இந்த சிந்தனை, குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 13

calvary.jpg

மூன்றாவது அத்தியாயம்

இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி…..

அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான் அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மத்ததிலே சேர்த்து மேன்மைபடுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள்.

இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்தீரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள்.

நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.”

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தெரு வழியாக நாம் நடந்து வந்த காலத்தில் எதிரே 10 அல்லது 11 வயதுள்ள இரண்டு அழகிய பிராமண கன்னிகைகள் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏதோ ஏசுநாதன்‘ ‘கடவுள்என்று பேசிக்கொண்டு வந்தார்கள். இந்தச் சிறிய குழந்தைகள் கடவுளைப் பற்றியென்ன பேசுகின்றன என்பதையறிய ஆவலுற்று அதைச் சிறிது நின்று கவனித்தோம். சில சில வார்த்தைகள் காதில் விழந்தற்கப்பால் அக்கன்னிகைகள் துரிதமாக நடந்து அப்பால் போயிவிட்டார்கள்.

ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள்வாசித்துக் கொண்டு வரும்பொருட்டாகத்தானா? வருங்காலத்தில் இந்தப் பெண்கள் தாய்மாராகி நமது ஜாதி (Nation) க்கு காப்புத் தெய்வங்களாக இருக்கப் போகிறார்கள்?

நமது கிருஸ்துவ நண்பர்கள் நாம் சொல்வதிலிருந்து மனஸ்தாபமடைய வேண்டியதில்லை. அவர்களுடைய தெருவுக்கு நடுவிலே நாம் போய் ஒரு பள்ளிக்கூடம் வைத்து சில இந்து சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தால், அந்தப் பள்ளிக் கூடத்துக்கு தமது குமாரத்திகளை அனுப்புவார்களா? அதுபோலவே இந்துக்களும் தமது சகோதரிகளைக் காப்பாற்றிக் கெள்வது இவர்களுடைய கடமையல்லவா

-இராம. கோபாலன், தலைவர், ‘இந்து முன்னணி

இதைச் சொன்னது இராம. கோபாலன்தான் என்று நம்பி விட்டீர்கள் அல்லவா? நீங்கள் உண்மையென்று நம்பியது பொய். சொன்னது அவரல்ல,

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்

வன்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வானமேனியில் அங்கும் விளங்கும்`

-என்று உண்மையான கிறித்துவர் போல் வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் சுப்பிரமணிய பாரதியே அந்த ஆர்.எஸ்.எஸ். வரிகளுக்குச் சொந்தக்காரர்.

பாரதியின் இந்த சிந்தனையும் குமாரில பட்டரை ஞாபகப்படுத்துகிறதல்லவா?

பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ - 14

vishnu2.jpg

மூன்றாவது அத்தியாயம்

“மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற் கடைக்கண் வைத்தாளங்கே

ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”

என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்)

பேய், பிசாசு, மாகாளி, பராசக்தி, மாரியம்மா இப்படி எல்லா சக்திகளும் ஒன்றாய் கலந்த கொடுங்கோலன் ஜார் மன்னனின் அரசையும், இன்னும் சரஸ்வதி, லட்சுமி, மேரியம்மா, ஏசு போன்ற மென்மையான ‘மென்ஷிவிக்கு’ களையும் - மக்கள் சக்தியென்ற மாபெரும் சக்தியின் துணையோடு தூக்கியெறிந்த - புரட்சித்தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:

“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும், ஸமத்வத்தையும் ஸ்தாபிக்கப்போகிறோம் என்று சொல்வோர்தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன். ‘இதற்கு நாம் என்ன சொய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக் கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடிக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.”

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர்,

பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்ச பாண்டவர் - கவுரவர் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்,

வீமன் செய்த சபதம்

நாய்மக னாந்துரி யோதனன் றன்னை
மாணற்ற மன்னர்கண் முன்னே - என்றன்
வண்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,
தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன் - தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன் - அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்
நடைபெறுங் காண்பி ருலகீர்! - இது
நான் சொல்லும் வார்த்தைகள்என் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை - இது
சாதனை செய்க பராசக்தி’ என்றான்

அர்ஜுன் சபதம்

பார்த்த னெழுதந்துரை செய்வான்: - ‘இந்தப்
பாதகன் கர்ணனைப் போரில் மடிப்பேன்
தீர்த்தப் பெரும் புகழ் விஷ்ணு - எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலாணை:
கார்த்தடங் கண்ணி எந்தேவி - அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்தொழில் விந்தைகள் காண்பாய் - ஹே!
பூதலமே! அந்தப் போதினில்! என்றான்

பாஞ்சாலி சபதம்

தேவி திரௌபதி சொல்வாள்; - ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.

எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து.
சுப்பிரமணிய பாரதியின் இந்தச் செயல், குமாரில பட்டரை ஞாபகப் படுத்துகிறது அல்லவா?

சீச்சீ…. சீச்சி… குமாரில பட்டர் எவ்வளவோ பரவாயில்லை.