இரண்டாவது அத்தியாயம்

fuga.jpg

‘பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்,

-என்று பார்ப்பனர்களையே சாட்டை எடுத்து விளாசி இருக்கிறான் முண்டாசுக் கவி.
அது மட்டுமா-

‘ஒரு கிழச் சாம்பான் என்னிடம் வந்து “முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ? எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இருபிறப்பாளாவார்? என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறையென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும், அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறையென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதி என்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்ககொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப் பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மையடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடைய விடுதலையிலும், மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அக்கறையுடன் அழுதிருக்கிறான் பாரதி” என்று புல்லரிக்கும்  அறிஞர்களின் கவனத்திற்கு,

‘ஈனப் பறையர்களேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற இந்த விஷம் தோய்ந்த வார்த்தை அல்லது விஷமாகவே இருக்கிற வார்த்தை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

எம்முடன் என்பது யாருடன்?

ஆரியர்களா?

அவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்களோ?

அவர்கள்தான் மற்றவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு ‘குடியுரிமைப் பட்டயம்’ அளிப்பவர்களோ?

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமந்தாக சொல்லப்படும் இந்தக் கவி, தாழ்த்தப்பட்ட மக்களை ஈவு இரக்கமற்ற முறையில் நடத்தும் - இந்து மதத்தின் தலைமை கர்த்தாக்களான - பார்ப்பனர்களை அவர்களின் ‘மனுஸ்மிருதி‘ செய்கையைக் கண்டித்து,

‘ஈன்ப் பார்ப்பனர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங்கிருப்பவர் அன்றோ’

-என்று எழுதியிருந்தால்,

“தன் சொந்த ஜாதியை சேர்ந்த பார்ப்பனர்களையே வெளுத்து வாங்கியிருக்கிறான் முண்டாசுக் கவி” என்று அறிஞர்கள் ‘முண்டா’ தட்டுவதில் அர்தமிருக்கும்.

 

dalit_women.jpg 

 

‘ஈனப் பறையர்’ என்கிற இந்த மோசமான விளித்தலை, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பிடுகிற இந்த ஜாதியக் குறியீட்டை, சத்ரபதி சிவாஜி தன் சைனியத்திற்கு வீர உணர்ச்சி ஊட்டுகிற பாடலிலும் பார்க்கலாம்.

‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பாளோ பாரத தேவி’

‘மிலேச்சர்’ என்பது இந்தப் பாடலில் நேரடியாக அவுரங்கசீப் தலைமையிலான முகலாயர்களைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னும் அதை பாரதியின் காலத்தில் பொருத்தி வெள்ளையர்களைக் குறிப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மிலேச்சர்க்ள் - வேதநூலைப் பழிப்பதால் வெகுண்டெழுகிறார் பாரதி. வேதநூலைப் பழித்தால் வெகுண்டெழுவது பாரதியின் பிறப்புரிமை! சரி.

‘ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்’

இப்படி குறிவைத்து ஆலயத்தையும்-பசுக்களையும் அழித்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவில் இருக்கும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் பலகோடி முதலீட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலை வைத்திருக்கும், அசைவ ‘ஹை-டெக்’ பார்ப்பானுக்குக் கூட கோபம் வரும். பாரதிக்கு வராதா பின்னே, வந்திருக்கிறது.
அடுத்து பாய்கிறார்,

‘வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்’

பசு மாமிசம் உண்ணும் பழக்கமுடைய முகலாயர்களை, வெள்ளையர்களை இழிந்துக் கூறவந்த பாரதி, அதே உணவு முறைப் பழக்கமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை குறியீடாகப் பயன்படுத்தி ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களாக அல்லாத - ஜாதி இந்துக்கள், ஜாதி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் இப்படி யாரயினும் தங்களுக்குள் ஒருவரை மட்டுப்படுத்தி பேசும்போது ‘பறைச்சி மாதிரி’ ‘பறையன் மாதிரி’ ‘போடா பறையா’ என்று திட்டிக் கொள்வது போல் - அதே பதத்தில், ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பறையர்களேனும் - அவர்
 எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ?
என்ற வரியில் ‘எம்முடன்’ என்பது ஆரியர்கள்தான் என்று- ‘ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்’ என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

‘ஈனப் பறையர்களேனும்’ என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

‘பேரசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்’

என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

பின் குறிப்பு; ‘புலையன்’ தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கிற இன்னொரு சொல். பெரிய புராணத்தில் ‘நந்தனை’ அவருடைய ஆண்டையான பார்ப்பனர், ‘மாடும் தின்னும் புலையா’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கேரளாவில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள், இந்த சொல்லால்தான் அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.

'ஈனப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திருங் கிருப்பவர் அன்றோ
?

என்ற வரியில் 'எம்முடன்' என்பது ஆரியர்கள்தான் என்று- 'ஆரியர் புலையருக்கடிமைகளாயினர்' என்ற வரியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
'ஈனப் பறையர்களேனும்' என்கிற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே தெரிந்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
'பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்'
என்ற வரிகளுக்கு அறிஞர்கள் புல்லரித்தால், இந்த வரிகளுக்கெல்லாம் என்ன செய்யலாம்?

sivaji.jpg

சிவாஜி-அவுரங்கசீப் சண்டையை உதாரணம் காட்டி முகலாயர்களுக்கு எதிராக, 'நம் கலாச்சாரத்தையும், நம் புனித மண்ணையும் பாதுகாக்க போர் புரிந்த மாபெரும் இந்து மன்னன் சிவாஜி, என்று நிறுவி, அதை கிறித்துவ வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கடந்த காலவரலாற்றில் இருந்து மிகத் தந்திரமாக பாடம் கற்பிக்கும் பாரதி, அதே சிவாஜி மன்னாகும்போது,  'நீ சூத்திரன், மன்னனாகக் கூடாது' என்று ஆகமங்களை அள்ளிப்போட்டு குறுக்கே நின்ற பார்ப்பன பட்டர்களைப் பற்றி, ஆதரித்தோ, எதிர்த்தோ ஒரு வார்த்தைக் கூட பாடவில்லை, பாட்டுக்கார பாரதி.இஸ்லாமியர்களை விரோதிகளாகச் சித்தரித்து தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களை அடியாட்களாக மாறி, மாறி பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கே குழிபறிக்கும் பார்ப்பனீய இந்து மதச் சிந்தனை இதில் இருக்கிறதா இல்லையா?

barathi001.jpg

 வேதத்தில் ஜாதிய வேறுபாடு கிடையாது,

‘வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே’

என்றெல்லாம் ஜாதிய எதிர்ப்பாளர் மாதரி, கவிதையளக்கிற சுப்பிரமணிய பாரதி - மனுஸ்மிருதியையோ, நாலு வர்ணத்தையோ-தன் நெருப்புக் கவிதைகளால் ‘தீமூட்ட’ மறுக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் நாலு வர்ணத்துக்கு நல்வாழ்த்து ஒன்று பாடியிருக்கிறார்,

‘வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
  வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் - தண்ட
 நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
  பட்டினி தீர்ப்பவன் செட்டி.

…………………………………………………………………………
…………………………………………………………………………

நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த
 நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே - செத்து
 வீழ்ந்திடும் மானிடச் சாதி’

-என்று ராஜகோபால ஆச்சாரியருக்கே குலக்கல்வி திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த ராஜகுரு.

“அந்தப் பாடலில், பாரதி தனக்கே உரிய முறையில் - ஜாதி ஒற்றுமையை வலியுறுத்துகிறார். ஜாதியக் கல்வியை ஆதரிக்கவில்லை”
-என்று அவரின் பாடலுக்கு ஒட்டுப் போட முயற்சிப்பவர்களை, உருட்டுக் கட்டை எடுத்துக் கொண்டு ஓட, ஒட விரட்டுகிறார்-தன் கட்டுரையில்.

‘அந்நிய-வஸ்து - வர்ஜனம், ஜாதீயக் கல்வி, பஞ்சாய்த்து, சரீரப் பயிற்சி - இந்த நான்குமே சுதேசியம் என்ற புண்ணிய பலத்தைத் தாங்குகின்ற நான்கு தூண்களாகும். இவற்றை ஆதரிப்பது நமது கடமை. இதில் சட்டத்திற்கு எவ்விதமான விரோதமும் கிடையாது. இவற்றை ஆதிக்காமலிருப்பவர்கள் தேசத் துரோகிகள் ஆவார்கள்.’

-என்று தன் நாலுவர்ண தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்.

bharathi4.jpg

திக்க வெறி கொண்ட முகலாயர்களும், ஏகாதிபத்திய வெறியர்களான வெள்ளையர்களும் - பல்லாயிரம் மைல் கடந்து வந்து இந்த மிதவாத, தீவிரவாத சுதந்திரப் போராட்ட கோஷ்டிகளைவிடவும் அதிகமாக ரத்தம் சிந்தி - இந்த ‘போங்கு’ மன்னர்களிடம் சண்டையிட்டுத் தியாகம் செய்து - பாடுபட்டு உருவாக்கிய இந்த நாட்டை, கவிராஜன் பாரதி கொஞ்சமும் கூசாமல்,

பாரதம் என்கிறார்

ஆரிய பூமி என்கிறார்

ஆரியர் என்கிறார்

‘இந்தியா’ என்பது கூட ‘இந்து’ என்பதின் திரிபு என்பதில் பெருமை கொள்கிறார்.
சற்றே கீழ் இறங்கி வந்து,

தமிழ் நாடு என்கிறார்,

தமிழர் என்கிறார்.

ஆனால் நிரம்ப ஞாபகத்தோடு திராவிடம் என்பதையே மறந்து போகிறார்.

ஏன்?

ஆரியம்-ஆரியர்-தமிழ் நாடு-தமிழர்-இந்தியா-இந்தியர் இப்படி- எப்படி மாற்றிச் சொன்னாலும் அதனுள் பார்ப்பனரும் அடங்குவர்.

திராவிடம் - திராவிடர் என்று சொன்னால் - அதில் பார்ப்பனர்களை எப்படிச் சேர்ப்பது?

இந்தக் கேள்வி சுப்பிரமணிய பாரதியை புரட்டி எடுத்திருக்கிறது.
அதன் பொருட்டே ‘ஆரிய நாடு - ஆரிய பூமி’ என்று அழுத்தந்திருத்தமாக சாட்சிகளோடு பொய் சொல்கிறார்.
         

***

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

-என்று சூதில் மன்னனான கண்ணன், கீதையில் சொன்னதாக சொல்லப்பட்டதை, சூதாட்ட சகோதரரான அர்ஜுனன் மேற்கோளாகச் சொல்வது போல், ‘பாஞ்சாலி சபதத்தில்’ சொல்கிறார்.
அதையே நாம் பாரதியின் சிந்தனைகளுக்கும் சொல்லி வைப்போம்,

‘தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்’

தோழமையுடன்

வே. மதிமாறன்

டிசம்பர் 2002

`பாரதி` ய ஜனதா பார்ட்டி நூலின் இரண்டாவது அத்தியாயம்

…..தொடரும்

 

முகப்பு