நலங்கள் அருளும் நவகோடி நாராயணப் பெருமாள் - ராமானுஜர் அருள்பெற்ற அதிசயத் தலம்!
முன்னொரு காலத்தில், கொங்குநாடு 24 உட்பிரிவுகளை கொண்டதாக இருந்தது. அதில் வாராக்கா நாடு என்பதும் ஒன்றாகும். ஒத்தக்கால்மண்டபம் என்ற ஊர் வாராக்கா நாட்டில், கோவை-பொள்ளாச்சி நெடுவழியில் அமைந்திருந்தது. கொங்குநாட்டு மன்னர்களின் ஒற்றர்கள், சேர, பாண்டிய நாடுகளுக்கு இவ்வழியாகவே சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் வழியில் ஓய்வு எடுக்கும் பொருட்டு ஒத்தக்கால்மண்டபத்தில் மூன்றடுக்கு சுற்றுசுவர் கொண்ட கோட்டையும் கோட்டையின் உள்ளே பெருமாள் கோயிலும் அமைத்திருந்தனர் என்பது செவிவழிச் செய்தியாகும். காலப்போக்கில், கோட்டையும் மதில்சுவர்களும் அழிந்துவிட்ட நிலையில், பெருமாள் கோயில் மட்டும் எஞ்சியிருந்தது. மேலும் விஜய நகர மன்னர்கள் காலத்தில் மக்களிடம் வசூலித்த நவநிதியங்களை இப்பெருமாள் திருக்கோயிலில் வைத்து வழிபட்டு வந்தனர். இதுவே காலப்போக்கில் நவகோடி நாராயணப்பெருமாள் என பெயர்பெற்றது. மிகவும் பழுதடைந்த திருக்கோயிலை பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 13வது நிதி ஆணைய நிதி உதவிப்பெற்று புனரமைத்து தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இத்திருக்கோயில் தல விருட்சம் வெடதலை மரமாகும்.
இத்திருக்கோயிலில் சிதலமடைந்த ஒரு கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ செகாப்சம் 1410 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருக்கோயில் வழிபாட்டிற்கு வெற்றிலை, பாக்கு, சந்தனம், வெல்லம் போன்றவை கொடையாக அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதையுற்றுள்ளதால், மன்னர்கள் காலம் மற்றும் தமிழ் ஆண்டு அறிய இயலவில்லை.
மிகவும் சிறப்பு செய்தியாக மதுரையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் எம்பெருமான் ஸ்ரீ ராமானுஜர், இத்திருக்கோயிலில் வழிபட்டதாகவும், பின்னர் மொண்டிபாளையம் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றதாகவும் செவிவழிச் செய்தியாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அமைப்பானது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. இத்திருத்தலத்தின் உள்ளே நுழையும்போது, மகாமண்டபத்தில் கருடாழ்வார் பெருமாளைத் தரிசனம் செய்த நிலையில் இருக்கிறார்.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கும் பெருமாளின் தோற்றம் கண்களைக் கொள்ளைக் கொள்ளச் செய்கிறது. மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமானு ஜரும் எழுந்தருளி இருப்பது அபூர்வக் காட்சி என்று வியக்கின்றனர் பக்தர்கள்.
திருச்சுற்றுப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் அருள் வழங்குகிறார்.
பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம். செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி மாத சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி போன்ற விசேஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தனை அருமை பெருமைகளைக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனை தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள பெரியோர்கள்.
முகவரி : தண்ணீர்பந்தல், ஒத்தக்கால்மண்டபம், கோயம்புத்தூர் - 641 032.
Address : Thanneerpandhal, Othakalmandapam , Coimbatore - 641 032.