Associations‎ > ‎

TCA History

காலப் பாதையில் கழகம் பதித்த சுவடுகள்

மு இராமனாதன்

ஹாங்காங்கின் மக்களைப் போலவே ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் உயிர்ப்புள்ளது. ஹாங்காங்கின் நெடிதுயர்ந்த கட்டிடங்களைப் போலவே கழகத்தின் வரலாறும் நெடியது, நீண்டது. 

அறுபதுகளில்  ஹாங்காங்கில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவே. சொந்த  மண்ணிலிருந்து வெகு தூரம் விலகியிருந்தாலும், அவர்கள் தம் மண்ணின் ஈர வாசனைக்காக ஏங்கினர்; அதனைத் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாக முகரத் தலைப்பட்டனர்.   வீடியோப் படங்கள் வராத காலமது. படச் சுருளைப் பெற்று, திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி, அபிமான நட்சத்திரங்களை வெள்ளித் திரையில் காண்பதற்குக் கூட்டு முயற்சி தேவைப்பட்டது.  மேலும் ஹாங்காங்கில் தமிழ்ப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கவும்,  தமிழர்களை ஒருங்கிணைக்கவும் ஒரு அமைப்பின் தேவை உணரப்பட்டது. ஆயினும் அது செயல் வடிவம் பெற்றது 1967இல் தான். தொழிலதிபர் பி.எஸ்.அப்துல் ரகுமானின் முன்முயற்சியில் கழகம் வடிவம் பெற்றது. 13-10-1967 அன்று கழகம் பதிவு செய்யப்பட்டது. செ.முஹம்மது யூனூஸ் தலைவராகவும், ஹமீது ஜலால் செயலராகவும், அப்துல் சுக்கூர் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கியது. 1968இல் கழகத்தின் முதற் பொதுக்குழு கூடியது. எச்.எம்.புகாரி ஹாஜியார் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

துவக்க காலங்களில், திரைப்படங்களை வருவிப்பதும் திரையிடுவதும் கழகத்தின் முதன்மைப் பணியாக இருந்திருக்கிறது. படங்கள் சிங்கப்பூர், மலேசியவிலிருந்து பெறப்பட்டன. தென்னாப்பிரிக்கா செல்லும் தமிழ்ப் படங்கள் ஹாங்காங் வழியாகக் கொண்டு செல்லப்பட்டதும் வசதியாகப் போனது. "படச்சுருளை முகவர்களிடமிருந்தும், பல சமயங்களில் விமான நிலையத்திலிருந்து நேரடியாகவும் பெற்று வருவோம்" என்று நினைவு கூர்கிறார் ஏ.எஸ்.ஜமால். அரசிச் சாலையில் அப்போதிருந்த யானைத் திரையரங்கம், நேத்தன் சாலையில் பள்ளிவாசலுக்கு எதிரிலிருந்த மில்டன் மாளிகை, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், வான்சாயிலிருந்த கத்தே திரையரங்கம் போன்றவற்றில் படம் பார்த்த நாட்களைச் சொல்லும் போது எம்.ஏ.ஜே.அப்துல் கரீமின் கண்கள் ஒளிர்கின்றன. 1975இல் பார்த்த 'ஆபூர்வ ராகங்க'ளுக்குப் பிறகு கழகம் திரையிட்ட  படங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வந்ததென்கிறார் எம்.ஒய்.முஹம்மது அஷ்ரப். 1979இல் தான் உறுப்பினர்கள் கடைசியாகத் திரையரங்கில் தமிழ்ப்படம் பார்த்திருக்கிறார்கள். பெரிய திரை நிகழ்த்திக் காட்டும் மாயாஜாலத்தை ஹாங்காங் தமிழர்கள் காலப்போக்கில் இழப்பதற்கு வீடியோவின் வருகை காரணமாக அமைந்து விட்டது. இப்போதெல்லாம் உறுப்பினர்கள், தமிழகத்தில் படம் வெளியாகிறபோதே சுங் கிங் மாளிகையில் கிடைக்கிற குறுந்தகட்டைத் தத்தமது வரவேற்பறையின் சின்னத்திரையில் வாரக் கடைசிகளில் காணத் தவறுவதில்லை.அதில் கோடுகளுக்கும், புள்ளிகளுக்கும், தீற்றல்களுக்கும் மத்தியில் ஆடுகிற படத்தை உத்தேசமாகப் புரிந்து கொண்டும் விடுகிறார்கள். 

கழகம் துவங்கப்பட்ட ஆண்டிலேயே அப்போதையத் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு ஹாங்காங் வழியாகச் சென்றார். கழகத்தின் முதல் பெரிய அரங்க நிகழ்ச்சி அண்ணாவின் வரவேற்பாய் அமைந்தது. இதே ஆண்டில் பேராசிரியர் க.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினராயிருந்த முரசொலி மாறன் ஆகியோருக்கும் கழகம் வரவேற்பளித்தது. 

முதல் இருபதாண்டுகளில் கழகம் பிரமுகர்கள் பலருக்கு வரவேற்பு நல்கியது. நாவலர் இரா.நெடுஞ்செழியன் (1970), அப்துல் சமது(1976), குமரி அனந்தன்(1985) போன்ற அரசியல் தலைவர்கள், லேனா தமிழ்வாணன்(1988), சாவி(1989) போன்ற பத்திரிக்கையாளர்கள், நீதிபதி மு.மு.இஸ்மாயில் (1970), கல்வியாளர் கி.வேங்கிடசுப்பிரமணியன் (1980), சிந்தனையாளர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி(1986) போன்றோர் இதில் அடங்குவர். நாகூர் ஹனிஃபாவின்(1971) இசைநிகழ்ச்சிக்கு வந்திருந்த வட இந்தியர்களுக்காகப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் முஹம்மது யூனூஸ். குன்றக்குடி அடிகளாரின் சொற்பொழிவை மட்டுமல்ல, அவர் பேசிய நாளையும், 22-8-1982 என்று நெஞ்சில் நிறுத்தி நினைவில் குறித்து வைத்திருக்கிறார் பி.குருநாதன்.    

1970இல் 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் எடுப்பதற்காக வந்திருந்த எம்.ஜி.ஆருக்குக் கழகம் வரவேற்பளித்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு மண்ணரிப்புத் தடுப்பு மற்றும் சரிவுப் பாதுகாப்பு முறைகளைப் பார்வையிட வந்திருந்த நிபுணர் குழுவிற்கு தலைமையேற்று அவர் மீண்டும் ஹாங்காங் வந்தபோது தமிழக முதல்வராகியிருந்தார். படப்பிடிப்பிற்காக ஹாங்காங் வந்திருந்த சிவாஜி கணேசன்-கே.ஆர்.விஜயா(1978), கமலஹாசன்(1985), விஜயகாந்த்-நதியா(1986) முதலிய கலைஞர்களையும் கழகம் விருந்தோம்பியிருக்கிறது. 

வரவேற்புகள் அன்னியில் ஒரு சில கலை நிகழ்ச்சிகளையும்  துவக்க காலங்களில் கழகம் நடத்தியிருக்கிறது. 1975இல் அனுராதா ஜகந்நாதனின் பரதநாட்டியம், 1977இல் ரம்யா நாகராஜின் நடன நிகழ்ச்சி, 1986இல் குமாரி ராஜியின் 'கௌதமனின் கண்ணீர்' நாட்டிய நாடகம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

முதல் இருபதாண்டுகளில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் பின்வருங் காலங்களில் மெல்ல மெல்லக் குறைந்துவிட்டது. ஆயினும் ஆரம்ப நாட்கள் முதல் இன்றளவும் தொடர்வது சுற்றுலாக்கள். கடந்த 36 ஆண்டுகளில் உறுப்பினர்களின் கால் பாவாத சுற்றுலாத் தலமொன்றும் ஹாங்காங்கில் மீதமில்லை. தமது அன்றாடக் கவலைகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு பகற் பொழுதைத் தமிழ்ச் சூழலில் கழிக்க முடிவதுதான் இந்தத் தொடர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டும். அண்மைக் காலங்களில் அதிகம் விரும்பப்படுவது படகுச் சுற்றுலா.  விண்ணை முத்தமிடும் கட்டிடங்களுக்கும், கட்டு மரங்களுக்கும், கப்பல்களுக்குமிடையே படகில் மிதக்கிற யாரும், கவலைகளின்றி நீந்தித் திளைக்கும் மீன்களைப் போல் உணரக்கூடும்.

எழுபதுகளில் துவங்கப்பட்ட, பொங்கலையொட்டி நடத்தப்படுகிற 'தமிழர் விழா' இன்றளவும் தொடர்கிறது. இது மிகுதியும் குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நிறைந்தது. குழந்தைகள் ஆடிப் பாடுவதைப் பெற்றோர்களும் நண்பர்களும் பெருமிதத்துடன் பார்ப்பது வாடிக்கையானது. கழக மேடைகளில் சின்னக் கால்கள் பதித்து ஆடவும், கீச்சுக் குரலில் பாடவும் துவங்கிய சிறார்களின் திறன் பின்னாளில் மெருகேறி உயர்ந்து, ஒளிர்விட்ட எடுத்துக்காட்டுகள் பல. தமிழர் விழா, உள்ளூர்க் கலைஞர்களின் திறனை வெளிக்கொணர்கிற ஊடகமாகவும் இருந்து வருகிறது.

தொண்ணுறுகளின் மத்தியிலிருந்து மேடை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை கூடிவரத் தொடங்கியது.1997 முதல் சராசரியாக ஆண்டிற்கு ஐந்து நிகழ்ச்சிகள் வீதம் நடக்கலாயின. மெல்லிசை பெரும் பங்கு வகிக்கிறது. இசைக் கருவிகளின் துணையோடு திரைப்படப் பாடல்கள் அதிகம் ஒலிக்கலாயின.1997இன் 'திரையிசை விழா'வும், 2002இன் 'சங்கீத மாலை'யும் குறிப்பிடத்தக்கன. சங்கீத மாலை நிகழ்ச்சிக்கு 'வந்தே மாதரம்' எனும் தமிழக மெல்லிசைக் குழுவிலிருந்து இரண்டு கலைஞர்கள் வந்திருந்தனர்.

அரசியலையும் சமூகத்தையும் ஆய்வுக்குள்ளாக்கும் பட்டிமன்றங்கள் 1998 முதல் ஆண்டுதோறும் நடக்கின்றன (2003 நீங்கலாக); உறுப்பினர்களின் விவாதங்களில் கருத்தும் விவேகமும் தமிழும் சேர்ந்திருந்தன. 1996 முதல் நாடகங்கள் முன்னணிக்கு வந்தன. குறு நாடகங்கள் முழுநீள நாடகங்களாயின; நாடக விழாக்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன; தமிழகத் தொழில் முறைக் குழுக்களின் சபா நாடகங்கள் வந்தன. 

2002 முதல் காத்திரமான நவீன நாடகங்கள் மேடையேறின. இதற்கான துவக்கம் குறித்தது மார்ச் 2002-இல் மேடையேறிய சுந்தர ராமசாமியின் 'யந்திர துடைப்பான்'. ஐக்யாவின் அந்த நாடகம் ஒரு சாமியாரின் உள்ளுக்குள் இருக்கும் மனிதனை வெளிக்கொணர்ந்தது. இயக்கம்: எம். ஸ்ரீதரன். 

அடுத்து, ஜெர்மானிய நாடகாசிரியர் ஸீக்ப்ரெட் லென்ஸின் 'நிரபராதிகளின் காலம்' ஸ்ரீதரனின் இயக்கத்தில் ஜுன் 2002இல் அரங்கேறியது. மனித மனங்களில் அமிழ்ந்து கிடக்கும் குற்ற உணர்வை நாடகம் கலாபூர்வமாய்ச் சொல்லியது. நல்ல இசையமைப்பு, நேர்த்தியான ஒலி-ஒளியமைப்பு, கதைக்கேற்ற உடையலங்காரம் என்று நாடகத்தின் எல்லாக் கூறுகளிலும் கவனம் செலுத்திய நாடகம் இது.

பாரதிக்காகத் தனியே கழகம் விழாவெடுக்கத் தொடங்கியது. அந்த மகாகவிஞனை உள்ளன்போடு நினைவுகூறும் விதமாக அவன் வாழ்வும் கவிதையும் உரை ஓவியங்களாக, சொற் சித்திரங்களாக, இசையாக, நாடகமாக, நாட்டியமாக வடிவு கொண்டு வெளிப்பட்டன. 1999இல் அவன் கவிதை குறித்த கருத்துப் பரிமாற்றம் விவாதமாகவும், 2002இல்  "விதியோ கணவரே" என்ற கோபம் திமிர்ந்த பாஞ்சாலியின் கேள்விகள் நாடகமாகவும், 2003இல் பாரதியின் கவிதைகளிலிருந்த இயற்கைக் கூறுகள் 'பஞ்ச பூதங்கள்' என்ற நாட்டியத் தொகுப்பாகவும் அமைந்து கவனத்தைக் கவர்ந்தன.

தன்னைப் பணயமாகச் சூதாடிய கணவர்களின்முன்மயிரைப் பற்றி கோபத்தின் உச்சத்தில் 'விதியோ கணவரே ' என்று  பாஞ்சாலி கேட்கும் நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  பாரதியின் கவிதை வரிகளே பயன்படுத்தப்பட்டன. சூத்ராதாரிப் பாத்திரம பழகு தமிழில் பேசிப் பார்வையாளர்களுடன் ஒரு பாலம் அமைத்தது. நாடகத்தை இயக்கியது மு. இராமனாதன். பார்க்க: பயணியின் கட்டுரை


கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, 2002இல் 'பயணி' எழுதிய 'சீன மொழி- ஒரு அறிமுகம்' என்கிற நூல் வெளியீடாகும். பயணி என்னும் புனைப் பெயர் கொண்ட எம்.ஸ்ரீதரன், சீனாவில் தங்கிச் சீன மொழியான 'மான்டரின்' கற்றவர். அப்போது ஹாங்காங்கிலும், தற்போது தில்லியிலும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். உலகின் கடினமான மொழிகளில் ஒன்றான  சீன மொழிக்குத் தமிழின் வாயிலாக எழுதப்பட்ட இந்த நூலைக் கழகம் பெருமையுடன் வெளியிட்டது. அப்போதைய இந்தியத் தூதர் அசோக் காந்த் நூலை வெளியிட்டார். டா குங் போ, வென் வாய் போ, லியான் ஹூஜா போ போன்ற சீன நாளிதழ்கள்; இந்து, தினத்தந்தி, தினமணி போன்ற இந்திய நாளிதழ்கள்; தமிழ் நேசன், மலேசிய நண்பன் போன்ற மலேசிய நாளிதழ்கள்; மற்றும் South China Morning Post(SCMP) போன்றவை நூலைக் குறித்தும் நிகழ்ச்சியைக் குறித்தும் செய்திகள் வெளியிட்டன. இணையத்திலும் இந்நிகழ்வு பதிவாகியது (பார்க்க பெட்டிச் செய்தி).

2003இல் நிகழ்ந்த 'இந்திய மாலை' முன்னோடி நிகழ்ச்சிகளுள் ஒன்றாக அமைந்தது. கழகத்தின் தலைமையில் 'மகாராஷ்ட்டிர மண்ட'லும், ஹாங்காங் வங்காளிகள் சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சி, கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் பாலத்திற்குமான ஒரு தொடக்கமாக அமைந்தது. இந்தியத் தூதர் பி.கே.குப்தா தலைமை வகித்தார்.

கழகத்தின் நிகழ்ச்சிகளைக் குறித்து உறுப்பினர்கள் சொல்வெதென்ன? கடந்த சில ஆண்டுகளாகவே கழக மேடைகளில் நல்ல தமிழை அதிகம் கேட்க முடிகிறது என்கிறார் சி.டி.குமரப்பன். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளும் அறிவிப்புகளும் அரங்கேறுவது விவாதத்திற்குள்ளாகி வருகிறது. தமிழைப் பாடமாகப் படிக்காதவர்களை ஆங்கில-இந்தி நிகழ்ச்சிகளை அனுமதிப்பதன் மூலம் கழக நிகழ்வுகளில் பங்கேற்க வைக்க முடியும் என்கிறார் எஸ்.நாரயணமூர்த்தி. ஆனால் ஜெ.ராஜேஷ் "தமிழ் மொழி கழகத்தின் முகம், அடையாளம். அதில் சமரசம் கூடாது" என்கிறார். மேலும் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் அல்லது படிக்க வாய்ப்பில்லாமல், வீட்டு மொழியாக மட்டும் பயன்படுத்துபவர்களை, குறிப்பாகக் குழந்தைகளை, தமிழ் நிகழ்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் அவர்களுக்கு மொழியைப் பயிற்றுவிக்கிற வாய்ப்பாக மாற்ற முடியுமென்பது ராஜேஷின் கருத்து. எம்.அப்துல் காதருக்கு கழத்தின் மின்னஞ்சல்கள் ஆங்கிலத்தில் வருவது ஒரு குறையாக இருக்கிறது; "இன்றைக்கு கணனியில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தித் தமிழிலேயே அஞ்சல் அனுப்ப ஏலாதா", என்பது அவரது கேள்வி. இப்படியான ஆக்கபூர்வமான கருத்துக்கள் கழகத்தின் செயல்பாட்டை ஜனநாயகப்படுத்தவும் மென்மேலும் கூர்மைப்படுத்தவும் செய்கின்றன.

மேடை நிகழ்ச்சிகளுக்கும், உல்லாசச் சுற்றுலாக்களுக்கும் அப்பால் சமூகப் பொறுப்பிலும் கழகம் முத்திரை பதித்திருக்கிறது. தாய் நாட்டில் இயற்கையின் சீற்றமோ நெருக்கடியோ ஏற்பட்டு இந்திய அரசு நிதி திரட்டிய போதெல்லாம் கழகம்  உவந்து பங்களித்திருக்கிறது. குஜாராத் நிலநடுக்க நிவாரண நிதி (2001), ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி (1999), எம்.ஜி.ஆர் வெள்ள நிவாரண நிதி (1978), பங்களாதேஷ் நிவாரண நிதி (1971) போன்றவை அவற்றில் சில. உறுப்பினர்கள் வாழுகிற மண்ணுக்கு நன்றியறிதலை வெளிப்படுத்துகிற வாய்ப்பு ஒன்று கழகத்திற்கு வாய்த்தது. 2003இல் ஸார்ஸின் கொடுங்கரங்கள் ஹாங்காங்கின் குரல்வளையை நெரிக்கத் தலைப்பட்டபோது, மருத்துவப் பணியாளர்கள் தன்னலமின்றி நோயுடன் பொருதினார்கள். அவர்களுக்குத் தேவைப்பட்ட தனித்தன்மையுள்ள பாதுகாப்புக் கவசங்கள் வாங்க SCMP நிதி திரட்டியது. திட்டம் அறிவிக்கப்பட்டவுடேனேயே முந்திக் கொண்டு நிதியளித்தவர்களில் கழகமும் இருந்தது. தமிழ்ச் சமூகத்தின் இந்தப் பங்களிப்பை, நாளிதழ் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தது (பார்க்க பெட்டிச் செய்தி).

கழகத்தின் சமூகப் பொறுப்பு அது போற்றி வந்திருக்கிற மத நல்லிணக்கத்திலிருந்து புலப்படும் என்கிறார் ஜி.விஸ்வநாதன். மதம் சார்ந்த பண்டிகைக் கொண்டாட்டங்களையோ, சமயச் சொற்பொழிவுகளையோ கழகம் நடத்தியதே இல்லை. தோழமையும் நட்புணர்வும் உறுப்பினர்களிடையே எப்போதும் நிலவி வந்திருக்கிறது என்கிறார் எஸ்.முஹம்மது யூனூஸ். புனித ரம்ஜான் மாதத்தில் கழகம் நிகழ்ச்சிகளேதும் நடத்தியதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் வி.அய்யப்பன். தீபாவளியன்று பொழுது புலர்வதற்கு முன்னால் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார் ஏ.எஸ்.ஜமால்.

கழகத்தின் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை மட்டுமின்றித் தரமும் கூடிவருகிறது என்கிறார் ஆர்.சோமசுந்தரம் (தலைவர் 1987-88). ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் மேற்கொள்கிற கடும் உழைப்பின் அயர்ச்சி மற்றும் கடைசி நேரப் பதற்றம்- அனைத்தையும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததும் ஏற்படும் மட்டற்ற மகிழ்ச்சி ஈடு செய்துவிடும், என்கிறார் கே.ஆர்.சுப்பிரமணியன் (தலைவர் 1996-97). இன -மொழி உணர்வுகளல் உறவும் ஒற்றுமையும் வளரவும், இலக்கிய ஆர்வம் தழைக்கவும், நம் பண்பாட்டைப் போற்றவும் துவங்கப்பட்ட கழகம், அதன் நோக்கங்களைச் செவ்வேனே நிறைவேற்றி வருகிறது என்கிறார் எல்.எம்.நிஜாமுத்தீன் (தலைவர் 2000-01). கழத்தின் சிறப்பு அதன் எளிமையிலும், தங்கள் உழைப்பையும் நேரத்தையும் கழகத்திற்காக உற்சாகமாகச் செலவிடும் உறுப்பினர்கள் இடத்திலுந்தான் இருக்கிறது என்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் (தலைவர் 1998-1999).

கழகத்தின் வலிமை எதிலிருக்கிறது? "ஐயமின்றி அதன் உறுப்பினர்களிடத்தில்தான்" என்கிறார் சஃபியூர் ரகுமான். உறுப்பினர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் கூடி வந்திருக்கிறது. ஏறத்தாழ 70 ஆயுட்கால உறுப்பினர்களையும், 150 சாதாரண உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது கழகம். தமிழர்கள் தவிரப் பிற மாநிலத்தவர் சிலரும் உறுப்பினர்களாயிருப்பதும், கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கன. பெரும்பாலான கழக நடவடிக்கைகள் உறுப்பினர்களின் சந்தாத் தொகையிலேயே நடத்தப்படுகிறது. ஆயுட்கால உறுப்பினர் கட்டணம் வைப்பு நிதிகளில் தொடர்வதன் மூலமாகவும், நுழைவுக் கட்டணங்களும் நன்கொடைகளும் வசூலிக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலமாகவும் கழகத்தின் நிதி நிலைமை திருப்திகரமாகவே இருந்து வருகிறது. கழகத்திற்கென்று ஒரு இணையத் தளம், ஒரு நூலகம், ஒரு அலுவலகம் போன்ற எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுகிற ஆர்வமும் ஆற்றலும் கழகத்திற்கு இருக்கிறது.

-ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழக மலர் (2004)
This article was published in the Hong Kong Tamil Cultural Association's Souvenir published in 2004 

***********************

சீன மொழி- ஒரு அறிமுகம்

தமிழும் சீனமும் உலகில் மிகப் பழமை வாய்ந்த மொழிகளில் முக்கியமானவை. இரண்டுமே காலத்தின் சோர்வு தழுவாத இளமையுடன் இன்றும் வளர்ந்து வருகின்றன. உலகின் ஒரே பகுதியில் வழங்கி வந்தாலும், இவற்றினிடையே உறவு அரிதாகவே இருந்து வருகிறது................... 

நேரடியாகத் தமிழிலிருந்து சீன மொழியைக் கற்பது எளிதானது என்கிற அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது. இந்திய மொழிகளிலேயே இது போன்ற நூல்களில் இது முதலாவதாக இருக்கலாம். இந்நூல், ஹாங்காங்கின் முதன்மைப் பிரதிநிதி திரு. அசோக் காந்த் (Consul General Mr.Ashok Kantha, Consulate General of India) அவர்களால் 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாள், ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்டது.

-திண்ணை.காம் அக்டோபர் 6, 2002


Chinese Language- An Introduction in Tamil


After studying Putonghua in Beijing for two years, Sridharan Madhusudhanan, Consul(Commercial) in the Consulate General of India, Hong Kong, tried hand at dictionary -writing. Under the pen name Payani, he has just published Chinese Language-An Introduction in Tamil, which introduces written and spoken Chinese to Tamil speakers and can also be used for learning the basics of Putonghua. For inquies contact the Tamil Cultural association of Hong Kong..........................


-South China Morning Post, October 5, 2002

*******


Learning Chinese through Tamil

Hong Kong Oct. 3. A book about the Chinese language in Tamil, written by an Indian Foreign Service Officer, M. Sridharan, was released at a function organised by the Tamil Cultural Association in Hong Kong on September 28 by the Indian Consul General in Hong Kong, Ashok K. Kantha.

The book is the first using an Indian language to teach Chinese without going through the medium of English. Though both the languages have been spoken in Asia, the relation between these two languages is at best episodic. The author of the book, Chinese Language — an introduction, feels learning Chinese through Tamil is a far easier way for a Tamil speaker than most of the currently available method.

This book projects that Tamil and Chinese are not unrelated. The similarities in sound system, words, sentences and grammar are interesting. The research in this area needs to continue. It introduces and provides the initial steps of learning Chinese (Mandarin). The book includes 56 basic sentences for the learner, and sentences for seven important occasions (introduction, travel, hotel, food, shopping, sightseeing, emergency medical assistance).

This also includes a select word list for ready reference. In case the reader is yet to study a sentence, she can just show the Chinese words printed alongside and communicate the same. For the first time, this book introduces a direct Tamil to Chinese sound system whereby the reader can read the Tamil scripts to produce Chinese sounds. (He or she need not go through pinyin).

To assist the reader in avoiding the common mistake of reading pinyin as English, a list of pinyin to Tamil sounds are also given.

-The Hindu, October 4, 2002

******************************

A united stand can only be good for Hong Kong

Different cultures and religions are represented, all pulling together for greater good. Joining many Chinese people from all walks of life, some 250 Tamil families have pledged money under the umbrella of the Tamil Cultural Association. Some 1,500 Christians gathered for prayers and fund-raising in Chater Garden. The International Islamic Society of Hong Kong has donated funds on behalf of Muslims from 20 nations. The Sikh community is also active. The list clearly, is vast. 

These groups are coming forward in different ways but are undoubtedly joined by one inescapable fact- Hong Kong is their home and they want to help. …………. The government’s decision to allow South Asians to apply for Hong Kong passports- an acknowledgment of their Chinese Nationality was a painless and much welcome step, yet more are needed………………. The darkness of Sars, perhaps, may yet leave something positive in its crippling wake. A united Hong Kong is a considerable force for good. 

-South China Morning Post, Editorial, April 28,2003

********************************

விதியோ கணவரே?

பயணி

பாரதியின் பாஞ்சாலி சபதம், 'விதியோ கணவரே ? ' என்ற தலைப்பில்             மு இராமனாதன் இயக்கத்தில் ஹாங்காங் தமிழ்ச் சங்கத்தின் 14 டிசம்பர் 2002 அன்று நிகழ்ந்த பாரதி விழாவில் மேடையேற்றப்பட்டது. சூதாட்டத்தில் துவங்கி, பாஞ்சாலியின் சபதம் வரையிலான கதை சொல்லப்பட்டாலும், 'நம்பி நின்னடி தொழுதேன் - நாணழியாதிங்குக் காத்தருள்வாய் ' எனப் பாஞ்சாலி கண்ணனை வேண்டுவதும், அவனருளால் 'பொன்னிழை பட்டிழையும் - பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய் ' சேலைகள் வளர்வதும் இல்லை. அர்ஜுனன் மற்றும் பீமனின் சபதங்களும் இல்லை. வெறுப்பும் கோபமும் திமிர்ந்த பாஞ்சாலியின் கேள்விகளே நாடக இறுதியை நிறைத்தன.....

நவீனநாடகப் போக்குகளின் ஒரு கூறாக, முந்தைய காலத்து நாடகப்பிரதிகளும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. ஹாங்காங்கில் மேடையேறிய பாஞ்சாலி சபதம் இந்த அவசியமான முயற்சியில் ஒரு நிகழ்வு.

--திண்ணை, ஜனவரி 4, 2003

********************************

Comments