24.05.22- சாதாரண தரப் பரீட்சை எந்த சிக்கலும் இன்றி ஆரம்பம்..

posted May 23, 2022, 5:52 PM by Habithas Nadaraja

இன்று ஆரம்பமான 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளின் வருகை 99 வீதமாக பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நாடு பூராகவும் பரீட்சை நிலையங்களில் சிறப்பாக நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் இன்று காலை உரிய நேரத்தில் பரீட்சைகள் ஆரம்பமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை, நான்கு லட்சத்து ஏழாயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும், ஒரு லட்சத்து பத்தாயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சையில் தோற்றுகின்றனர். மூவாயிரத்து 844 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சை கடமைகளுக்காக 25 ஆயிரம் கல்வி சார் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக, மாகாண ஆளுனர்களுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை கடமைகளுக்கு செல்பவர்கள் தமது தொழில் அடையாள அட்டை, பரீட்சை கடமைக்காக வழங்கப்பட்ட கடிதம் என்பவற்றை பயன்படுத்த முடியும். மாணவர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையை காண்பித்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை எழுதும் மாணவர்கள், பரீட்சை கடமைகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து தரப்பினரையும் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின், அது குறித்து முறையிடலாம். இதற்காக, 0112 784 208, 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.

அத்துடன், 1911 என்ற துரித அழைப்பிலக்கத்திற்கும் அறிவிக்கலாம். அல்லது, மாகாண அல்லது வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க முடியும் என்று பரீட்சை திணைக்களம்  அறிவித்துள்ளது.


23.05.22- 2021 சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு ஆகக்கூடுதலான வசதிகள்..

posted May 22, 2022, 6:27 PM by Habithas Nadaraja

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை சரியாகக் கணிப்பிட்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு அனைத்துப் பரீட்சார்த்திகளிடமும் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இடையில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் திரும்பிச் செல்லாது பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரெயில் சேவையைப் போன்று ஏனைய போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறுகின்றன. நாளைய தினம் பகிஷ்கரிப்பு, வீதிகளில் இடையூறை ஏற்படுத்தல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை புறந்தள்ளி மாணவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சு அனைத்து சமூகத்தினரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

பரீட்சை கடமைகளுக்காக செல்வோருக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை தொடர்பில் தமக்குப் பிரச்சினைகள் இருக்குமாயின் 0112-784-208 அல்லது 0112-784-537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இந்தப் பரீட்சை மாணவர்களின் வாழ்க்கையின் முதல் கட்டமாகும். இதற்காக கல்வியமைச்சு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


22.05.22- கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது..

posted May 21, 2022, 8:03 PM by Habithas Nadaraja


கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி நிறைவடையும். ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர்.

பரீட்சை அனுமதி அட்டை

பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டை தற்போதைக்கு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கவில்லை எனின், கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திற்கு பிரவேசித்து தங்களின் அனுமதிஅட்டையினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை அனுமதி அட்டையில் ஏதாவது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளத்திற்குள் பிரவேசித்து திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிரிதியினை அனுமதி அட்டையுடன் இணைத்து பரீட்சை நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதி அட்டையில் தான் பரீட்சைக்கு தோற்றும் மொழி மற்றும் பாடங்களில் பிரச்சினை இருப்பின் அது பற்றி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் - 0112 284 208 அல்லது 0112 784 537 என்பதாகும்.

இதேவேளை, பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் தயாராகியுள்ளது. நாட்டின் தற்போதைய போக்கவரத்து நெருக்கடி நிலையினைக் கருத்திற்கொண்டு நேரகாலத்தோடு பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின்..

பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின் அது பற்றி முறையிடலாம். இதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  0112 784 208, 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக் க முடியும். அத்துடன் துரித அழைப்பிலக்கமான 1911ற்கு அழைப்பை ஏற்படுத்தி முறையிடலாம். அல்லது மாகாண அல்லது வலய கல்விப் பணிபாளர்களுக்கும் அறிவிக்கலாம்.

மின்துண்டிப்பு நேரம் மறுசீரமைப்பு

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறையும் பரீட்சை நிலையங்களில் தனியான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மின்துண்டிப்பு செய்யப்படும் நேரம் 
மறு சீரமைக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

21.05.22- இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு..

posted May 20, 2022, 8:57 PM by Habithas Nadaraja

2022 மே21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022மே 21ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன்.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


20.05.22- திருஞானசம்பந்தர் குரு பூஜை..

posted May 19, 2022, 6:59 PM by Habithas Nadaraja

சைவம் தழைக்க வித்திட்ட சமய குரவர்களில் ஒருவரான  திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரது குருபூஜை  திருக்கோயில் வினாயகபுரம் 
திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில்  பணிப்பாளர் கண்.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற போது....

 காரைதீவு   சகா


16.05.22- காங்கேசந் துறையிலிருந்து - பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம்– 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்..

posted May 15, 2022, 8:52 PM by Habithas Nadaraja   [ updated May 15, 2022, 8:54 PM ]

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இந்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2-5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.


15.05.22- இன்று வெசாக் நோன்மதி தினம்..

posted May 14, 2022, 7:53 PM by Habithas Nadaraja

புத்தபெருமானின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வாணம் அடைந்தமை ஆகிய முக்கிய நிகழ்வுகளை நினைவு கூருவதற்கே விசாக நோன்மதி  வெசாக்  நோன்மதி  தினத்தை பௌத்தர்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
 
பௌத்த மதத்தை ஸ்தாபித்தவரான கௌதம புத்த பெருமான் சுத்தோதன மன்னருக்கும் மகாமாயா அரசிக்கும் புதல்வனாக உதித்த சித்தார்த்த குமாரனாவார்.

வெசாக் பௌர்ணமி தினத்தில் அன்று உலக மக்களை நெறிப்படுத்த ஒரு உத்தமர் தோன்றி விட்டார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக ஏழு செந்தாமரைப் பூக்கள் தோன்றின என்றும்  திடீரென பரிணமித்த இந்த ஏழு தாமரைப் பூக்களில் காலடி பதித்து நடந்ததாக பௌத்த வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.
 
அரண்மனையில் வளர்ந்த சித்தார்த்தர் யசோதா என்ற பிறிதொரு நாட்டின் இளவரசியை மணம் செய்தார். அரண்மனை ஜோதிடர்கள் கணித்தபடியே இவரது திருமணமும் நடந்தது. 
 
சித்தார்த்தருடைய இல்லற வாழ்க்கை அரண்மனை வளாகத்தினுள்ளே களிப்புடன் இடம்பெற்றுக்கொண்டிருந்தது வெளியுலக மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள், அவஸ்தைகள் என்பவற்றை அடியோடு அறிந்திராத சித்தார்த்தருக்கு ஆண் மகன் பிறந்தார். அதற்கு ராகுலன் என்று நாமமும் சூட்டினார். ஒருநாள் அரண்மனைக் காவலர்களின் அசிரத்தை காரணமாக சித்தார்த்தர் அரச மாளிகையை விட்டு வெளியே வந்தார். 
 
வெளி உலகில் அவர் கண்ட முதல் காட்சி ஒரு பிரேத ஊர்வலமாகும்.வெற்றுடலைக் கண்ணுற்றதும் அவரது மனம் நெகிழ்ந்தது. பின்னர் ஒரு முதியவர் பொல்லொன்றுடன் தள்ளாடிய நிலையில் வீதியைக் கடந்து செல்வதையும் கண்டார் , மக்களின் துன்பத்திற்கு விமோசம் அளிக்கக்கூடிய விடயத்தில் சித்தார்த்த இளவரசர் அன்று இரவு முழுக்க ஆழமாகச் சிந்தித்து ஒரு திடமான முடிவை மேற்கொண்டார்.
நாம் வாழுகின்ற வாழ்க்கை நிரந்தரமற்றது வெறும் போலியானது என்பதை உணர்ந்தார். இதற்கு பிராயச்சித்தமாக மனதை ஒரு நிலைப்படுத்தி துறவறம் பூணுவதினால் தனக்கு வெற்றி கிட்டும் என்பதையும் உணர்ந்தார். காவியுடை தரித்தார். 

பின்னர் கருணாமூர்த்தியாகிய சித்தார்த்த இளவரசர் அன்புமனைவி யசோதாவுக்குக்கூட  அறிவிக்காமல் அரண்மனையைவிட்டு வெளியேறினார்.

யசோதா சித்தார்த்தரைக் காணாது அழுது புலம்பினாள். ஏதோ ஒருவிதமாக தனது கணவன் துறவறம் பூண்டு போதி மரத்தடிக்குச் சென்றதை அறிந்தார். உடனடியாகவே குழந்தை ராகுலனை கட்டி அணைத்த வாறு சித்தார்த்தரிடம் சென்று அவரை மாளிகைக்கு திரும்புமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் சித்தார்த்த குமாரன் தனது தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளாது போதி மரத்தின் கீழ் நிஷ்டையில் ஆழ்ந்தார்.

பல்லாண்டு காலம் அரச மரத்தின் கீழ் துறவறம் புரிந்த அவர் ஈற்றில் பரிநிர்வாணம் அடைந்து கொள்வதற்கு கடும் தவம் மேற்கொண்டார். சுமார் எட்டு தசாப்த காலத்தின் பின்னரே சித்தார்த்தர் பரிநிர்வாணம் அடைந்தார். 

இந்தியாவில் கபிவஸ்துவே சித்தார்த்தருடைய பிறப்பிடமாக உள்ளதினால் அவர் பௌத்த மதத்தைப் பரப்பும் பணியை முதன் முதல் பாரதத்திலேயே மேற்கொண்டார். இதன் பிரகாரம் இலங்கையிலும் பௌத்த மதம் வேரூன்றத் தொடங்கியது.

புத்தபெருமான் என்ற நிலையை அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக இதேபோன்றதொரு நாளில் அவர் கிம்புல்வத்புரவுக்கு விஜயம் செய்தார். அசுரர்களின் தொல்லைகளை நீக்கியதும் இதேபோன்றதொரு நாளிலாகும். புத்தபெருமானின் மூன்றாவது இலங்கை விஜயமும் வெசாக் போயா தினத்தன்று இடம்பெற்றது. மணி அக்கித அரசரின் அழைப்பை ஏற்று 500 பிக்குகளுடன் புத்தபெருமான் களனி பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். விஜய மன்னர் 500பேருடன்  வெசாக் தினத்தன்று இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் நிர்மாணப் பணிகள் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


14.05.22- பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகப்பரீட்சைகள் ஒத்திவைப்பு..

posted May 13, 2022, 6:52 PM by Habithas Nadaraja

2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான விதிகளின் கீழ்  நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சைகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


12.05.22- கல்முனையில் தமிழர்களின் காணி உரிமை கபளீகரம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் கண்டனம்..

posted May 11, 2022, 5:29 PM by Habithas Nadaraja

கல்முனை மாநகரத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தின் ஓரங்கமாக காணி பதியும் உரிமை கச்சிதமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒருபோதும் இன உறவை வலுப்படுத்த உதவாது.மாறாக விரிசல்களை ஏற்படுத்தும்.இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது....
கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு  செய்யப்பட்டு வந்தது.

13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கல்முனை காணி பதிவகம் இயங்கி வருகிறது.

காணி பதிவகத்தின் கீழ் கல்முனை வடக்கு செயலக பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் பதிவு செய்யப்பட்டு வந்தது.

கல்முனையின் இன வாதத்தையும், இன குரோதத்தையும் விதைத்து அரசியல் செய்து வரும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உரிய பதிவு நடவடிக்கை அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.

பதிவாளர் நாயகத்தின் கடித்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலிருந்தும் தமிழ்பிரதேச காணிப் பதிவுகளை அங்கு பதியவேண்டாம்.இனிமேல் எமது செயலகத்தின் பெயரின் கீழ்  மட்டுமே பதியவேண்டும் என பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம்.

இந்த விடயம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் இன விரிசலை மேலும் வலுப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உறவு கொண்டாடும் தலைமைகள் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களா..


( காரைதீவு  சகா)


11.05.22- வாணி அறநெறிப் பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு..

posted May 10, 2022, 9:20 PM by Habithas Nadaraja   [ updated May 10, 2022, 9:21 PM ]

இந்து கலாசார சமய அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவன அனுசரணையில் மத்திய முகாம் நான்காம் கிராமம் வாணி அறநெறிப் பாடசாலை கட்டிட திறப்பு விழா நேற்று இடம்பெற்றது .

கட்டிட திறப்பு விழா முன்னதாக கலாசார ஊர்வலம் சகிதம் இடம்பெற்று சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை இடம்பெற்றது.

பின்னர் வாணி அறநெறிப் பாடசாலை பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.ஆன்மீக அதிதி தேவகுமார் குருக்கள் முன்னிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டார் .

கௌரவ அதிதிகளாக சிவனருள் பவுண்டேஷன் அம்பாரை மாவட்ட தலைவி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகா தேவராஜா செயலாளர் கே வாமதேவன் பொருளாளர் ஜனார்த்தனன் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யோகேஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

அறநெறி பாடசாலை கட்டிடம் மற்றும் தளவாடங்கள் 4 லட்சம் ரூபாய் செலவில் சிவனருள் பவுண்டேஷன் அமைத்துக் கொடுத்தது மாத்திரமல்லாமல்  அவை அதிதிகளால் கையளிக்கப்பட்டன.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.இறுதியில் அன்னதான மும் இடம்பெற்றது.

(காரைதீவு சகா)  

1-10 of 2863