தனியார்மய சதியால் முடக்கபப்டும் தடுப்பூசி நிறுவனங்கள்! சுதந்திரம் பெற்ற இந்தியாவில், மனிதனின் சராசரி ஆயுள் 35. தற்போது 72. இது சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைளின் விளைவே. நோய்தடுப்பே அப்போதைய அரசின் முக்கிய சுகாதாரக் கொள்கை. நோயை வரவழைத்து குணப்படுத்துவதே தற்போதைய அரசின் கொள்கை! நோய் இல்லாவிட்டால் தனியார் சுகாதாரசேவை நிறுவனங்களுக்கு சந்தை ஏது? தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்கைக்கு ஊறு விளைவிக்கும் அனத்தையும் தகர்ப்பதே தற்போதைய அரசின் கொள்கை. இப்படித் தகர்க்கப்பட்டு கொண்டிருப்பதுதான் குன்னூரிலுள்ள பா°ட்ர் இன்°டிட்யூட், சென்னையிலுள்ள பிசிஜி ஆய்வுக்கூடம், இமாச்சல் மாநிலத்தின் கசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் இவைகளின் நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றது சுதந்திரத்திற்கு பின்புதான். தற்போது மாண்புமிகு அமைச்சர் அன்புமணி தலைமையிலான சுகாதார அமைச்சகம் இவைகளை மூடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் மருந்துகளாவன: தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி, குடல்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம், சிவப்பம்மை, வெறிநாய்கடி ஆகிய நோய்தடுப்பு மருந்துகள். இந்தியாவில் பயன்படுத்தப்படும் நோய் தடுப்பான்களில் இந்த மூன்று நிறுவனங்களிலிருந்து மட்டும் 70 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. இவைகளை முடக்கிவிட்டு 1000 கோடி வருவாய் தரும் நோய் தடுப்பான் சந்தையை திறந்து விட்டால் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் கொண்டாட்டம் நடத்தும். இச்சந்தையின் வளர்ச்சி ஆண்டுக்கு 25 சதம். பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது போட்டியிட முடியாததற்கு இவற்றின் மருந்துகளின் விலையானது அரசு நிறுவனங்களை விட மூன்றுமடங்கு அதிகம். எனவே நொண்டிச் சாக்கு கூறி இவைகளின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்டு விட்டது. உலக சுகாதார அமைப்பிலிருந்து சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த முறை (2007ல்) ஆய்வு செய்து இந்த நிறுவனங்கள் சிறந்த உற்பத்தி வழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை என்று விமர்சனம் செய்தது. சிறந்த உற்பத்தி வழக்கங்கள் என்பது ஏற்றுமதி பன்னாட்டுச் சந்தைக்கே பொருந்தும். உள்நாட்டு உற்பத்திக்கு எதற்கு இந்த சிறப்பு வழக்கங்கள்? இதுவரை இந்த நிறுவனங்களின் மருந்துகளின் செயல்தன்மை பற்றிய பிரச்சனை வந்ததில்லையே! இது இருக்கட்டும். சிறந்த உற்பத்தி வழக்கங்களை கடைப்பிடிக்கத் தேவையான முதலீட்டை அரசு கொடுக்க வேண்டியதுதானே! அதைவிடுத்து உரிமத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? நமது நாட்டில் ஆண்டிற்கு 2.5 கோடி குழந்தைகள் இந்த மருந்துகளை அனைவருக்குமான நோய்தடுப்பு திட்டம் (ருஐஞ) பயனாக இலவசமாக அரசு சேவை மூலமாக பெறுகின்றனர். திடீரென்று உற்பத்தி நின்றால் நோய் தடுப்புத் திட்டம் என்னாவது? அரசு தனியாரிடம் சென்று கோடிக்கணக்கில் செலவிடுவதற்கான சதி இதற்குள் அடங்கியிருக்கிறது. செங்கல்பட்டில் அரசு-தனியார் கூட்டில் உருவாக இருக்கும் ஒருங்கிணைந்த நோய்தடுப்பு மருந்து வளாகத்தை ஊக்கப்படுத்தவும் கும்மிடிப்பூண்டியிலுள்ள தனியார் நிறுவனமான கிரீன் சிக்னல் நிறுவனத்திற்கு சந்தை அமைத்துக் கொடுக்கவும் இந்த நிறுவனங்கள் முடக்கப்படுகின்றன. அரசு-தனியார் கூட்டு என்றாலே அது கடைசியில் எங்கு போய் முடியும் என்பது மாருதி நிறுவனத்தில் ஆரம்பித்து °பிக் நிறுவனம் வரை நாம் பார்த்தாயிற்று. ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கும் கதையாக, எல்லா பொருளாதார நடவடிக்கைகளுக்குள்ளும் புகுந்த தனியார்மயமானது, தற்போது மக்களின் ஜீவநாடியான சுகாதாரத்துறைக்குள் இயங்கும் உயிர் மூச்சான நோய்தடுப்பிலும் புகுந்துள்ளது. இவைகளை முடக்கினால் என்ன நடக்கும் என்பது கடந்த ஏப்ரல் மாதத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் பலியானதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். மத்திய சுகாதாராத்துறை அமைச்சகமே! ரத்து செய்த உரிமத்தை இந்த மூன்று நிறுவனங்களுக்குத் திரும்பத் தருக! தனியார்மய மோகத்தால் இந்தியாவின் எதிர்காலமான குழந்தைகளின் நோய்தடுப்பில் விளையாடாதே!! |