பெரியோர்களே! “அனைவருக்கும் நல்வாழ்வு“ என்ற நோக்கத்துடன் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருவதுதான் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம். இந்த நோக்கத்திற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பல நல்வாழ்வு கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நடத்தி வருகிறது. சுதந்திரத்திற்குப் பின் மத்திய அரசு நியமித்த போரே கமிட்டியின் கூற்று எங்களின் தாரக மந்திரமாகும் “காசு இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது“ ஆனால் தற்போது நிலமை மோசமடைந்து மக்களை கசக்கிப் பிழியும் பிரச்சனையாக நல்வாழ்வு பிரச்சனை மாறியுள்ளது. எங்களது நடவடிக்கைகள் கீழ்க்கண்டவைகைள மையம் கொண்டதாக இருந்து வருகிறது • நல்வாழ்வு விஷயத்தில் அரசு தலையீடு அதிகம் இருக்க வேண்டும் • நோய் சிகிச்சையை விட நோய் தடுப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் • பொது சுகாதார அமைப்பு முறையை (Public Health System) பலப்படுத்த வேண்டும் • வணிகமயமாகிவிட்ட தனியார் மருத்துவ சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் • நியாயமான மருந்து விலைக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் • பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் லாபவேட்டைக்கு கடிவாளம் இட வேண்டும் • அனைவருக்கும் தடுப்பூசித் திட்டத்தை (Universal Immunisation Programme) முழுமையாக அமல்படுத்த வேண்டும் • நல்வாழ்விற்கு தேசிய மொத்த உற்பத்தியில் 5 சதம் ஒதுக்க வேண்டும் • மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் நமது நாட்டு நோயாளிகள் புறக்கணிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் • பெண்களின் நல்வாழ்விற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் இவ்விஷயங்களை வலியுறுத்தி நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகளை முழுமையாக ஏற்று நல்வாழ்விற்கென்று ஒரு விஷேஷ பிரசுரம் ஒன்றையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) க்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் உங்களை கேட்டுக் கொள்கிறது. வெறும் கோரிக்கைகளை வெளியிட்டால் மட்டும் அவைகள் நடந்து விடாது. இதற்காக அமைப்பு ரீதியாக போராட வேண்டும். எனவே தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தில் உறுப்பினராகி இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க பலமான இயக்கத்தை உருவாக்க உதவிடுங்கள் என்று உங்களை கேட்டுக் கொள்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வெளியிட்ட ஆங்கில பிரசுரத்தின் தமிழாக்கத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம். தலைவர்: டாக்டர் ரெக்ஸ் சர்குணம் செயலாளர்: வே.சம்பத் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் ஜிகே இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஆற்காடு ரோடு, போரூர், சென்னை 116 -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------காற்றில் பறக்கும் வாக்குறுதிகள் - கானல் நீராகும் நல்வாழ்வு மக்களின் அவசியமான நல்வாழ்வுத் தேவைகளை, புதிதாக அமைக்கப்பட்ட அரசு உடனடியாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள்தான் மக்களிடம் இந்த நல்லெண்ண நம்பிக்கைக்கு காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்த நல்லெண்ண நம்பிக்கையானது வாக்குறுதிகளின் தொடர்ச்சியான மீறல் காரணமாக கடுமையான துரோகமிழைக்கப்பட்ட உணர்வுதான் தற்போது மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. "அனைவருக்கும் நல்வாழ்வு" என்ற கோஷம் கோடிக்கணக்கான மக்களிடம் கானல் நீராக மாற்றப்பட்டுவிட்டது. ஐக்கிய முன்னணி அரசாங்கமானது சொல்லப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக, நவீன தாராளமய பாதையில் பயணித்து, 1991ம் ஆண்டு உருவாக்கிய போக்கையே தொடர ஆரம்பித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாசகரமான கொள்கைகளையே பல்வேறு தளங்களில் கடைப்பிடித்தது. இந்திய மக்களின் நல்வாழ்வின் முகத்தோற்றம் மோசமாகி வரும் இன்றைய நாட்களில், மத்திய அரசால் உதவி செய்யப்பட்ட பரந்துபட்ட ஒரு நல்வாழ்வு காப்பீட்டு திட்டம் கூட நமது மக்களுக்கு கிடைக்கவில்லை. அமையவிருக்கும் அரசாங்கத்தின் முன்னுரிமையாக இது மாற்றப்பட வேண்டும். குழந்தைகள்: இருண்ட எதிர்காலம் பிறக்கும் குழந்தைகளில் 18ல் ஒன்று ஒரு வயது பூர்த்தியாவதற்குள் இறந்துவிடுகிறது. பதிமூன்றில் ஒன்று ஐந்து வயது பூர்த்தியாவதற்குள் இறந்துவிடுகிறது. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதமானது மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளின் சராசரிக்கு சமமாக இருக்கிறது. சீனாவைவிட இரண்டரை மடங்கு அதிகம், வளர்ச்சியடைந்த நாடுகளைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. இவ்வளவு அதிகமான குழந்தை இறப்பு விகிதத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வான போக்கை மூடி மறைக்கும் கணக்கீட்டு அமைப்பு முறையையே நாம் கொண்டிருக்கிறோம். ஆம், நகர்ப்புற குழந்தை இறப்பு விகிதத்தைவிட கிராமப்புற குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதம் அதிகம். தலித் மற்றும் பழங்குடியினக் குழந்தைகள் இறந்து போவதற்கான அபாயம் மற்ற பகுதி குழந்தைகளைவிட அதிகம். சாதாரணமாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம் (Universal Immunisation Programme - UIP) பார்க்கப்பட்டது. சமீபத்தில் கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் போடப்படாத குழந்தைகள் 56 சதவீதத்தினர் இன்னும் இருந்து வருகின்றனர். ஆந்திரம், குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி கிடைக்கப்பெறுதலில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அனைத்து தடுப்பூசிகளும் போடப்படுவதை உத்தரவாதப்படுத்த தவறியதானது, நமது பொது சுகாதார அமைப்பு முறையின் (Public Health System), அமைப்பியல் பலகீனத்தை காட்டுகிறது. முடமாக்கும் நோய்களில் முக்கியமானது தவிர்க்கும் வாய்ப்புள்ள இளம்பிள்ளைவாதம் என்பதால், அரசினுடைய இளம்பிள்ளைவாத தடுப்புத் திட்டமானது, குழந்தைகள் முடமாவதை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் அமலுக்கு வந்தபின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உடனடி துவள் பக்கவாதத்தால் (Acute Flaccid Paralysis - AFP) பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1997ம் ஆண்டு 3047லிருந்து 2006ல் 31,973ஆக உயர்ந்துவிட்டது. தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை மூட முடிவெடுத்திருப்பதை ஐக்கிய முன்னணி அரசு குழந்தைகளுக்கு அளித்த நன்கொடையாகக் கூறலாம்! இதன் விளைவாக தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையும், விலையேற்றமும் ஏற்பட்டது. இது அரசின் தடுப்பூசித் திட்டத்தை செயலிழக்கச் செய்துவிட்டது. அரசு தடுப்பூசி நிறுவனங்களை மூடிவிடுவது என்று அரசு எடுத்த முடிவை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்சிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவாக, இந்த நிறுவனங்களை மீண்டும் திறப்பதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இது சம்பந்தமாக அரசு தரப்பில் தீர்க்கமான நடவடிக்கை எதுவும் இல்லை. உலகின் பட்டினி கிடப்பவர்களின் தலைநகரமாக இந்தியா திகழ்வதால், நமது நாட்டில் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளில் சரிபாதிப்பேர் குறை வளர்ச்சியுடனும் உயரம் குறைவாகவும் இருக்கின்றனர். இது அவர்கள் ஊட்டச்சத்தின்றி சில காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் இந்த எண்ணிக்கையானது மிக அதிகம். வடஆப்பிரிக்க நாடுகளைப் போன்ற ஏழை நாடுகளில் வாழும் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும். இந்தியக் குழந்தைகளின் ஊட்டத்தின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் தேக்க நிலையடைந்திருக்கிறது. சமீபத்திய புள்ளி விபரங்களின்படி உடனடி ஊட்டச்சத்தின்மையானது அதிகரித்திருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்னால் குறைந்தபட்ச செயல் திட்டம் அளித்த வாக்குறுதி: "ஆரம்பப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கு நன்கு சமைத்த ஊட்டச்சத்துடன் கூடிய மதிய உணவானது மத்திய அரசின் நிதியுதவியுடன் வழங்கப்படும். இதன் தரத்தை உறுதி செய்வதற்கான தகுந்த ஏற்பாடுகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு குடியிருப்புகளிலும் வாழும் குழந்தைகளுக்கு செயல்படக்கூடிய அங்கன்வாடிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத் திட்டம் (ICDS) மூலமாக உருவாக்கப்படும்." பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்கும் போக்கிற்கு எதிராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத் திட்டத்தை விரிவாக்கி அனைத்து பகுதி குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. பெண்களின் நல்வாழ்வு: தொடரும் உதாசீனம் பொது சுகாதார அமைப்பின் பார்வைக்கு அப்பாற்பட்டவர்களாக பெண்கள் திகழ்கிறார்கள். 17.3 சதம் பெண்கள்தான் நல்வாழ்வு பணியாளர்கள் பார்வையில் படுகிறார்கள் என்று மூன்றாவது தேசிய குடும்ப நல்வாழ்வு கள ஆய்வு கூறுகிறது. 15லிருந்து 49 வயதுக்குட்பட்ட ரத்த சோகை பிடித்த கர்ப்பிணிப் பெண்களின் விகிதமானது 1998-99ம் ஆண்டில் 49.7 சதவீதத்திலிருந்து 2005-06ல் 57.9 சதவீதமாக உயர்ந்திருப்பதிலிருந்து நல்வாழ்வு விஷயத்தில் பெண்கள் எப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். போதுமான பொது வசதியின்மையாலும், குறைவான நல்வாழ்வு தரத்தாலும் ஆண்டுக்கு 1,20,000 தாய்மார்கள் பேறுகாலத்தின் போது இறந்து போகிறார்கள். மகப்பேறுகால இறப்பு விகிதம் (1,00,000 கர்ப்பிணிகளில் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை) தொடர்ந்து 300ஆக இருந்து வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையை 2000ம் ஆண்டிற்குள் 200க்குள் குறைத்துவிட வேண்டும் என்று 1983ல் வெளியிட்ட தேசிய நல்வாழ்வு கொள்கை நிர்ணயித்த இலக்கை விட மிக அதிமாகும். பெண்களின் நல்வாழ்வு என்பதை மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் கருத்தவிர்த்தல் ஆகிய இரு விஷயங்களுக்குள் மட்டுமே சுருக்கிவிடும் நல்வாழ்வுத்துறையின் அற்ப ஆசையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. சுரப்பியல் கருத்தவிர்த்திகளுக்கான (Harmonal Contraceptives) ஆராய்ச்சிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடும்போது சோதனைப் பன்றிகளைப் போல் இந்தியப் பெண்களை பயன்படுத்துதை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் நடத்திய இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. இத்தகைய போராட்டங்களின் விளைவாக, பெண்களின் உடலை குறிவைத்து, அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீறலை உள்ளடக்கிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டங்களிலும் கொள்கைகளிலும் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பெண்களின் உடலியல் இனப்பெருக்க கட்டமைப்பு மாற்றியமைக்கப்படாமலேயே அவர்களுடைய நல்வாழ்வை பேணும் கொள்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மறு உருவாக்கம் பெற்ற தொற்றுநோய்கள் நமது நாட்டில் காசநோய், மலேரியா, சிக்குன் குன்யா, டெங்கு, மூளைக் காய்ச்சல், காலா அஜார், யானைக்கால் போன்ற தொற்று நோய்கள் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளன. மிக அதிக அளவில் காசநோயால் மரணம் ஏற்பட்டிருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், இது 3.7 லட்சத்தை எட்டிவிட்டது. மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 418 பேர் சிகிச்சையளிக்கும் அளவிற்கு காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80களின் மத்தியிலிருந்து மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்து வருடத்திற்கு 20லட்சம் பேர் என்று பதிவாகியுள்ளது. நிலைமை மேலும் மோசமடைந்து இவற்றில் பாதியளவுக்கு ஃபால்ஸிபேரம் மலேரியா வகையினதாகும். இதுதான் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய மூளை மலேரியா காய்ச்சலை உண்டாக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பு, சமூக இடப்பெயர்ச்சி போன்ற காரணங்களுடன் சேர்ந்து நாசமடைந்துபோன பொது சுகாதார அமைப்பு முறையும் இந்த நோய்களின் மறு உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டன. இந்த நோய்களை கண்காணிப்பதற்காக ஏற்கெனவே இருந்த அமைப்பு முறை சீரழிக்கப்பட்டதும் இந்நோய்களின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. நமது நாட்டின் நல்வாழ்வு பேணும் அமைப்பிற்கு மிகப்பெரும் சவாலாக எச்ஐவி/எய்ட்ஸ் நோய் முன்வந்துள்ளது. சமீபத்திய புள்ளி விவரப்படி எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31 லட்சமாகும். இது உலகத்திலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையுள்ள நாடாக நம்மை மாற்றியுள்ளது. கடந்த சில வருடங்களில் எச்ஐவி நோய்க்கான சிகிச்சை முறையிலும், அந்த சிகிச்சை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த விஷயத்தில் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது. பரம ஏழைகளுக்கும் சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த நோயானது, நோயாளிகளின் குழந்தைகளுக்கும் பரவுவதால், இதை ஒழிப்பதற்கு, திட்டமிட்ட நடவடிக்கையொன்றை, அனாதை குழந்தைகளுக்கும், பலவீனமான பகுதி குழந்தைகளுக்கும் விஷேஷமாக உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த நோய்க் கிருமிகள், முதல்நிலை மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால், இரண்டாம் நிலை மருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. இது முதல்நிலை மருந்துகளை விட 10 மடங்கு விலை அதிகம். ஆனால் இந்நோய்க்கான மருந்துகளில் பல காப்புரிமை பெற்றிருப்பதால், இதற்கான மூல அடிப்படை மருந்துகளை மலிவு விலையில் உற்பத்தி செய்வதற்கு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டமும், மற்ற எதனுடனும் சேராமல் துண்டாக செயல்படுவதால், இது பொது சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. இப்படி ஒருங்கிணைக்கவில்லையென்றால் எய்ட்ஸ் நோய் மூலம் நாம் சந்திக்கும் சவால்களை முறியடிக்க முடியாது. சுற்றுச்சூழல் சுகாதார அமைப்பில் முன்னேற்றம் காண முடியாததால், வயிற்றுப்போக்கு, பேதி, நுரையீரல் தொற்றுநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவை நமது மக்களை பலிகொண்டு வருகின்றன. சாதாரண வயிற்றுப்போக்கால் நமது நாட்டில் ஆண்டிற்கு 6 லட்சம் குழந்தைகள் மடிகிறார்கள். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும், சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்திருந்தாலேயே இந்த நோயினை பெருமளவிற்கு தடுக்க முடியும். சரியான நேரத்தில் சர்க்கரை உப்பு கரைசலை கொடுத்திருந்தால் மரணங்களை தவிர்க்க முடியும். எனினும் இந்த நோய் கண்டவர்களில், நகர்ப்புறங்களில் 33 சதவீதத்தினருக்கும் கிராமப்புரங்களில் 24 சதவீதத்தினருக்கும் மட்டுமே சர்க்கரை உப்புக்கரைசல் சரியான நேரத்தில் கிடைக்கிறது. இந்த நிலைமை கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலும் மோசமடைந்திருக்கிறது. நமது நாட்டில் 28 சதவீத வீடுகள் மட்டுமே நவீன கழிவு அகற்றும் ஏற்பாட்டிற்குள் இருக்கின்றன. 20 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஆரம்ப சுகாதார அமைப்பு முறையுடன், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் இணைக்க வேண்டும் என மார்க்சி°ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தனியாக செய்தால் ஏராளமான செலவுகளுடன் தேவையில்லாத அளவிற்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பெரும்பாலான நோய் தடுப்பு திட்டங்களானவை தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின் (National Rural Health Mission) வரம்புகளுக்குள் கொண்டு வந்துள்ளதால் இதில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது, ஏராளமான அதிகாரிகளுடன் அந்நிய நிதி உதவியுடனும் தனிப் பேரரசாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சமரசம் செய்யப்பட்ட பொது சுகாதார அமைப்பு முறை உலகிலேயே மிக அதிக அளவில் தனியார் மயப்படுத்தப்பட்ட பொது சுகாதார அமைப்பு முறையை கொண்ட நாடு இந்தியாதான். தனியார் மருத்துவத்துறையே பெரும்பாலான இந்தியர்களுக்கு மருத்துவசேவை வழங்கும் துறையாக இன்றைக்கு இருந்து வருகிறது. (நகர்ப்புறங்களில் 70 சதவீத குடும்பங்களும், கிராமப்புறங்களில் 63 சதவீத குடும்பங்களும் தனியார் மருத்துவத்துறையின் மூலமாகவே மருத்துவ சேவை பெறுகின்றனர்.) வீட்டிற்கு ஒருவருக்கு மட்டும் மருத்துவ காப்பீட்டு திட்டம் உடைய குடும்பங்கள் வெறும் 5 சதம் மட்டுமே. குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்ட விஷயங்களுக்கு இது நேர் எதிரானதாகும். "ஏழை குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தேசிய அளவிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் துவங்கப்படும்" என்று குறைந்தபட்ச செயல் திட்டம் கூறுகிறது. தற்போதைய பொது சுகாதார அமைப்பு முறையானது நமது மக்களை, எந்தவித கட்டுப்பாடும் இல்லாது இயங்கும் தனியார் மருத்துவத்துறையை நாடுவதற்கு நிர்பந்தப்படுத்துகிறது. இதன் விளைவாக நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் செலவிடும் மருத்துவச் செலவில் 80 சதவீதம் மக்கள் தங்களுடைய சொந்தப் பணத்தில் இருந்து செலவிடுகிறார்கள். மிகவும் மோசமாக நோய் வாய்ப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் பணம் இல்லை என்ற காரணத்திற்காக சிகிச்சையை மேற்கொள்வதில்லை என்று சமீபத்திய கள ஆய்வு ஒன்று கூறுகிறது. கிராமப்புரங்களில் பொது நல்வாழ்வின் கட்டமைப்பின் வளர்ச்சியானது, அதன் தேவையின் வளர்ச்சியைவிட குறைவாக இருக்கிறது. 2002க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் பொது வாழ்வு அமைப்பின் உப-மையங்களின் வளர்ச்சியானது 6 சதவீதத்தில் இருக்கிறது. இது மக்கள் தொகை வளர்ச்சியைவிட குறைவாகும். ஆரம்ப சுகாதார மையங்கள் 2 சதவீதம் குறைந்து போயிருக்கின்றன. சமூக நல்வாழ்வு மையங்கள் கணிசமாக உயர்ந்திருந்தாலும், இம்மையங்களுக்கு தேவையான ஊழியர்களும் உபகரணங்களும் போதுமானதாக இல்லை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளானவை, பத்தாவது திட்டத்தில் கூறப்பட்டுள்ள இலக்கைவிட மிகக்குறைவு. உப-மையங்களின் வளர்ச்சியில் நிர்ணயித்த இலக்கில் 76 சதவீதத்தை அடைந்திருந்தாலும், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியானது நிர்ணயித்த இலக்கில் முறையே 13 மற்றும் 37 சதவீதமே எட்டியிருக்கிறது. உப-மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவை இருந்தாலும் அவைகளின் தரமானது மிகவும் மோசமாக இருந்து வருகிறது. உப-மையங்களில் 50 சதவீதமும் ஆரம்ப சுகாதார மையங்களில் 24 சதவீதமும் சமூக சுகாதார மையங்களில் 16 சதவீதமும் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடத்திலோ தற்காலிக இடத்திலோ இயங்கி வருகின்றன. கிராமப்புற சுகாதார அமைப்புகளில் ஊழியர் பற்றாக்குறையும் கட்டமைப்பு பற்றாக்குறையும் நிலவுவதை கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். • "இயங்கிக்" கொண்டிருப்பதாக கூறப்படும் 4711 உப-மையங்களில் ஆண் சுகாதார பணியாளும், துணைச் செவிலியரும் கிடையாது. • ஆரம்ப சுகாதார மையங்களில் 68.6 சதவீதத்தில் ஒரு டாக்டரோ அல்லது டாக்டரே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. • 807 ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டரே கிடையாது. • சமூக சுகாதார மையங்களில் 64.9 சதவீதத்தில் மருத்துவ வல்லுனர்கள் கிடையாது. • 1188 ஆரம்ப சுகாதார மையங்களிலும், 1647 சமூக சேவை மையங்களிலும் மின்சார வசதியோ தண்ணீர் வசதியோ கிடையாது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் (NHRM) பொது சுகாதார அமைப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக அரசால் உருவாக்கப்பட்டதுதான் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம். முன்பு செயல்பட்டுக் கொண்டிருந்த இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நல்வாழ்வு (Reproductive and Child Health - RCH) என்ற திட்டம் மறு ஒப்பனை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதுதான் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம். மக்கள் பெருக்க கட்டுப்பாட்டையும் குழந்தைகள் நல்வாழ்வில் சில தலையீட்டையும் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதுதான் RCH அனைவருக்கும் இலவச மருத்துவ சேவையை நோக்கமாகக் கொண்ட பொது சுகாதார அமைப்பு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் அமைப்புகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியும் போராடி வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி கொடுத்த தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக, தேசிய ஊரக சுகாதாரத் திட்டமானது, மறு உருவாக்கம் பெற்று, பொது சுகாதார கட்டமைப்புகளை பலப்படுத்தும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன. எனினும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டமானது, போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததாலும் மற்றும் அரசு-தனியார் கூட்டு, கட்டண சேவை போன்ற கருத்துக்களின் தாக்கத்தாலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து 2012ல் ஆண்டிற்கு 55,000 கோடியை எட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இதற்கு ஒதுக்கும் நிதியானது ஆண்டிற்கு 10000லிருந்து 12000 கோடியைக் கூட தாண்டவில்லை. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு நல்வாழ்வு ஊழியர் வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் ஆலோசனையானது உருத்திரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார உதவியாளர் (Accredited Social Health Assistant - ASHA) என்ற பெயரில் போதுமான சம்பளம் இல்லாத தன்னார்வலர் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த தன்னார்வலர் தற்போது வாங்கும் சம்பளம் மாதத்திற்கு ரூ. 600 மட்டுமே. இது மிகவும் நியாயமற்றதாகும். குறைந்தபட்ச கூலி கூட இவர்கள் விஷயத்தில் அமல்படுத்தப்படுவதில்லை. தேசிய கிராமப்புர சுகாதாரத் திட்டத்தை விரிவாக்கி அனைத்து நல்வாழ்வு சேவைகளையும் உள்ளடக்கியதாக மாற்றி இதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்று, இதை நகர்ப்புரங்களுக்கும் விஸ்தரித்து மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும். தனியார் சேவையாலும், மருந்துகளாலும் திணிக்கப்பட்ட தாங்கொன்னா சுமை பொது சுகாதார அமைப்பின் இயலாமை காரணமாக தனியார்துறை செழித்து வளர்ந்து வருகிறது. தனியார் துறையின் ஆதிக்கமானது, ஏழை மக்களுக்கு மருத்துவ சேவைகளை எட்டாக்கனியாக்கியதோடல்லாமல், நகர்ப்புரம் சார்ந்தும், பிரதேசம் சார்ந்தும் ஒருவித மனச்சாய்வை ஏற்படுத்தி, அறிவுக்கு புறம்பாகவும், சமத்துவத்திற்கு புறம்பாகவும் லாபத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. மருத்துவ சுற்றுலா மூலம் தற்போது உருவாகியிருக்கும் போக்கானது, நமது நாட்டில் பயிற்சியளிக்கப்பட்ட சிறந்த வல்லுநர்களும், நிபுணர்களும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு சேவை செய்யும் உள்நாட்டுக்குள்ளேயே மூளை வெளியேற்றம் (Internal Brain Drain) நடைபெறும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இதன் விளைவாக வரி செலுத்தும் இந்தியர்கள் வெளிநாட்டு மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகளுக்கு மானியம் வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் உபவிளைவாக மருத்துவ சேவைகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமல் இருக்கும் இந்தியர்களின் விகிதாச்சாரம் உயர்ந்திருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 40 சதவீதத்தினர் கடன் வாங்கும்படியாகவோ, சொத்துக்களை விற்கும்படியாகவோ நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். தங்களுடைய சொந்த வருமானத்திலிருந்து மருத்துவ சேவைக்கு செலவிடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதன் விளைவாக ஆண்டுக்கு 2 கோடிப்பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்படுகிறார்கள். பொது சுகாதாரத்துறையை பலப்படுத்தக் கோரியும், தனியார் துறைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பன்மடங்கு வளர்ந்திருந்தாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான மருந்துகளை வாங்கும் சக்தி 20லிருந்து 40சதவீதத்தினருக்கு மட்டுமே இருந்து வருகிறது. அடிப்படை மருந்துகள் பல்வேறு வணிகச் சின்னங்களில் (Brand Name) விற்கப்பட்டு 80,000 வணிகச் சின்னங்கள் தற்போது மருந்து சந்தையில் இருந்து வருகின்றன. பல மருந்துகள் 200லிருந்து 500சதம் லாபத்துடன் விற்கப்படுவதால் பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு இவைகள் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இருப்பினும் மருந்து விலைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு அரசுதரப்பில் தயக்கம் காட்டுவதால் மருந்து விலை கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்துவிட்டது. பெரும்பாலான அத்தியாவசிய மருந்துகள் மருந்துவிலை கட்டுப்பாட்டு அமைப்பிற்குள் வரவில்லை. இது குறைந்தபட்ச செயல் திட்டத்திற்கு எதிரானதாகும். "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது நியாயமான விலையில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துதல், ஆபத்தான மருந்துகளின் உபயோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தல் அல்லது அறிவுபூர்வமான பயன்பாடுகள் மட்டுமே உபயோகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான மருந்து விலைக் கொள்கை வேண்டும் என மார்க்சிஸ்கட்சி போராடி வருகிறது. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களுடைய மருந்துகளை பரிசோதனை செய்யும் சோதனைப் பன்றிகளாக இந்தியர்களை மாற்ற வகை செய்யும் இந்திய சட்டத்திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக நடத்தும். 1994ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் கையெழுத்திட்ட உலக வர்த்தக உடன்படிக்கையில் கூறப்பட்டதற்கு ஏதுவாக 2005ம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தால் ஏற்படும் உக்கிரமான தாக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன், பொது சுகாதார பாதுகாப்பு அம்சங்களை பாராளுமன்றத்தில் திருத்தங்களாக மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களைத் திரட்டிப் போராடி மார்க்சிஸ்ட் கட்சி ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாக, இச்சட்டத்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாகியது. இத்திருத்தங்கள் மற்ற வளரும் நாடுகளுக்கும் மாதிரி சட்டங்களாக இன்றளவும் திகழ்கிறது. எனினும் அரசானது பன்னாட்டு நிறுவனங்களின் நலனைக் காப்பதற்காக, பொது சுகாதார பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த மறுத்து வருகிறது. இதன் விளைவாக புதிய மருந்துகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுவிட்டன. எய்ட்ஸ் சிகிச்சைக்கும் புற்றநோய் சிகிச்சைக்கும் தேவைப்படும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கும் காப்புரிமை பெற்று இம்மருந்துகளை சாதாரண இந்தியர்களுக்கு எட்டாத் தொலைவில் நிறுத்திவிட்டன. சுருங்கிவரும் பொதுநல்வாழ்வு நிதி 1980களின் மத்தியில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன் மத்திய பட்ஜெட்டில் நல்வாழ்விற்கு 3.95 சதவீதம் ஒதுக்கப்பட்டது. 2001ல் இது 2.7 சதமாக குறைந்து 2005ல் 2.4 சதமாக குறைந்துவிட்டது. பொது நல்வாழ்விற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை 80களின் மத்தியில் இருந்த நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால், தற்போது ஒதுக்கப்படும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும். பொது சுகாதார செலவீனங்களை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியானது குறைந்துபோய்விட்டது. நிதிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதன் விளைவாக மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக பொது சுகாதார செலவானது தேசிய மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) 0.9 சதவீதமாக தேக்கமடைந்துவிட்டது. அரசின் நல்வாழ்வுச் செலவில் உலகிலேயே மிகக் குறைவாக செலவு செய்யும் நாடாக நமது நாடு திகழ்கிறது. நமக்கு கீழே பரூண்டி, மியான்மார், பாகி°தான், சூடான் மற்றும் கம்போடியா ஆகிய ஐந்து நாடுகளே உள்ளன. தாராள மயக் கொள்கைகளை 1991ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் அமல்படுத்த துவங்கியபோதே இந்தச் செலவானது தேசிய மொத்த உற்பத்தியில் 1.3 சதமாக குறைந்துபோயிருந்தது. தேசிய மொத்த உற்பத்தியில் 5 சதவீதத்தை நல்வாழ்விற்கு ஒதுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் வற்புறுத்தலின் பேரிலேயே குறைந்தபட்ச செயல் திட்டத்தில் "ஆரம்ப சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தும் முகமாக தேசிய மொத்த உற்பத்தியில் நல்வாழ்விற்காக 2லிருந்து 3 சதவீத அளவிற்கு அடுத்த ஐந்தாண்டுக்குள் ஒதுக்கப்படும்" என்று அறிவித்தது. ஆனால் இந்த ஐந்தாண்டுகள் உரக்க கூச்சலிடும் ஆண்டுகளாக அமைந்ததே தவிர, வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றி செயல்பட்ட ஆண்டுகளாக கழியவில்லை. நல்வாழ்வைப் பற்றி நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ரூடால்ஃப் விர்கோவ் கூறுகையில் "நல்வாழ்வு என்பதும் ஒரு பரந்துபட்ட அரசியலே" என்றார். இந்திய மக்களின் நல்வாழ்வு தற்போது சந்திக்கும் பிரச்சனைகளானவை இந்தக் கூற்று எப்படி உண்மையாகியிருக்கிறது என்பதை நிரூபணம் செய்கிறது. நல்வாழ்வு சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வானது, உலகிலேயே மிக அதிக தரம் வாய்ந்த நல்வாழ்வு சேவைகள் நமது நாட்டில் இருந்து வருவது ஒருபுறமும், அதே நேரத்தில் இது எதுவும் கிடைக்காத பெரும்பாலான ஏழை மக்கள் இன்னொரு புறமும் இருக்கின்ற நிலையை வைத்து, நவீன தாராளமய பாதகக் கொள்கைகளினால் சமூக ஏற்றத்தாழ்வு எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பதை பிரதிபலிப்பதாக கூறலாம். முடிவுரை: தங்குதடையற்ற தனியார் மயப்படுத்தப்பட்ட நல்வாழ்வு அமைப்பு முறையானது, லாபம் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படத் தூண்டும், நவீன தாராளமயக் கொள்கைகளை தூக்கியெறிந்தாலொழிய, நமது மக்களின் நல்வாழ்வுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியாலோ பாரதீய ஜனதா கட்சியாலோ மக்கள் ஆதரவு மாற்றுக்கொள்கைகளை முன்வைக்க முடியாது. வாக்களியுங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு! இடது ஜனநாயக சக்திகளை பலப்படுத்துங்கள்! ஒரு மாற்று கொள்கைகளையுடைய மதசார்பற்ற அரசு அமைக்க உதவிடுங்கள்! |