என்னைப் பற்றி கூற என்ன இருக்கிறது, என்னைப் பற்றிப் படிப்பதில் உங்களுக்கு
ஆர்வம் இல்லையென எனக்கே தெரியும்போது, உங்களுக்குப் புரியாதா என்ன?
அதையும் மீறி நீங்கள் என்னைப் பற்றி அறிந்தே ஆக வேண்டுமென்றால் அடிக்கடி
இந்தப் பக்கம் வந்து போங்கள்! அவ்வப்போது என்னைப் பற்றி நானே ஏதாவது
பிதற்றிய படி இருப்பேன்! இங்கே "படைப்பு" எனும் பக்கத்தில் பிறர் படித்துப்
பார்த்து "ச்சீ!" என்று ஒதுக்கித் தள்ளிய இக்காலப் புதுமைகளையும், அக்கால
ஆய்வுகளையும் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருப்பேன்! "இதெல்லாம் ஒரு
வலைப்பக்கமா?" உங்களுக்கு எரிச்சல் தற்போது கிளம்பினால் அதற்கு நான்
பொறுப்பன்று! ஏனெனில் நீங்களேதான் இப்பக்கத்தைத் தேடி இங்கு வந்திருப்பீர்
என்று என்னால் 100 விழுக்காடு இல்லையென்றாலும் ஒரு 47 விழுக்காடாவது கூற
முடியும்! "என்னடா இவன் ஒரு பைத்தியக்காரன் மாதிரி உளறிட்டு இருக்கிறான்"
என்று உடனடியாக தத்தலை மூடும் நடவடிக்கைகளில் எல்லாம் ஈடுபடவேண்டாம்!
ஏனெனில் இன்னும் கூற வேன்டியது நிறைய உள்ளது. "இரண்டாவது பத்தியா? முடியவே முடியாது" என ஓடப் பார்க்க வேண்டாம்! "எப்படி உங்களால் மட்டும் இப்படி ஒன்றுமே இல்லாமல் இரண்டாவது பத்தி வரை ஓட்ட முடிந்தது?" என்ற வினா உங்கள் மனதில் எழுந்திருக்கும்! எழவில்லை என்றாலும் தற்போது எழுப்பிக் கொள்ளுங்கள். "எப்படி ஒன்றுமே இல்லாமல் இரு பத்திகள் இவரால் ஓட்ட முடிகிறது?" எழுப்பியாயிற்றா? இப்போது அதற்கான விடை. அது ஒன்றும் பெரிதன்று, பத்தியைத் தொடங்குகையில் ஏதேனும் கிறுக்குத்தனமாகக் கூறிவிட்டால் போதும், "இந்தக் கிறுக்கர் என்னதான் பிதற்றப் போகிறார்?" என்ற எண்ணம் படிப்போரிடையே ஏற்பட்டுவிடும்! அது ஒன்றே போதும். இதைப் போல் இரு பத்தியன்று இருநூறு பத்திகளைப் படிக்கவைத்து விடலாம்! சரி. "பொறுத்தது போதும்; பொங்கி எழு!" என்று மூட்டை கட்டத் துடிக்கும் துடிப்பானவர்களை எப்படி இழுத்துப் பிடிப்பது? அது அடுத்த பத்தியில்... அவர்களை முடிந்தவரை இதைப் போன்று பத்தி பத்தியாய் அலையவைத்து ஒருவாறு இழுத்துப் பிடித்து நிறுத்தலாம். அது முடியவில்லையெனில் இப்போது நான் இந்த மூன்றாம் பத்தியில் என்ன கூறப் போகிறேனோ அதைப் போன்று எதையேனும் கூறி சற்றே எரிச்சலுடனாவது இங்கேயே இருக்க வைக்கலாம். "பாம்பை வெளிய விடமாட்டேங்குறாரே!" என்று உங்களுள் ஒருவர் குமுறப்போவது எனக்கு இதனை எழுதும்போதே தெரிந்திருந்திருக்கக் கூடும் போலும்! :-இப்படியே சில உப்புச் சப்பற்றவற்றைப் பேசி கூடுமானவரை இது வரை இழுத்து வரலாம். "இதற்கு மேலும் இப்படியே பேசினால் உறுதியாக எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது" என்று கூறிவிட்டு, ஏதேனும் ஒரு சுவாரசியமான செய்தியைப் பற்றி பேசத் தொடங்க வேண்டும்! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், எடுத்துக்காட்டாக சென்ற வாரம் நீங்கள் மேற்கொண்ட பேருந்துப் பயணம், உங்களுக்கு வந்த ஒரு பொருளற்ற கனவு, உங்கள் மனைவியிடம் நீங்கள் அடி வாங்கியது, துணி துவைக்க மறுத்த உங்கள் கணவரை நீங்கள் துவைத்தெடுத்தது இது போல எண்ணற்ற கருப்பொருள்கள் உள்ளன. இவற்றுள் உங்களுக்குப் பொறுந்தாத ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதை உங்களுக்குப் பொறுத்திப் பார்த்து பொறுத்திப் பார்த்தே பத்திகள் பலவற்றை ஓட்ட வேண்டும். அவ்வாறு ஓட்டுகையில் நினைவில் கொள்ள வேண்டியவற்றை அடுத்த பத்தியில் காணலாம். பத்தி பத்தியாக ஓட்டுகையில் அவர் சோர்ந்து விடாதபடியிருக்க ஏதேனும் நீங்கள் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் அவர் "உங்க மொக்கையக் கேட்டு காதில் குருதிய வரவெச்சுக்க நான் ஆளில்லை!" என்று இதனை அவரது நண்பர்கள் யாரேனும் படித்து தான் பட்ட வலியை அனுபவிக்கட்டும் என்று, ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவர். ஆதலால் எழுத்துலகில் புகுந்து 'நானும் ஏதேனும் எழுதுகிறேன் பேர்வழி' என்று எதையேனும் கிறுக்கி வைத்தால், இணைய உலகில் உங்கள் தலை உருளப் போவது உறுதி. ஆதலால் எழுதும்போது இது போன்ற பலவற்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறி என்னைப் பற்றிய அறிமுகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். |