The following Tamil poems were written by Ann at various times from childhood to this day. We are glad to share them with you. © Ann Ariel Wilson 2009 (1)பிறை நெற்றியில் பசலை படர இரு விழிகளில் நீர் பெருக சிறு நித்திரை யின்றி இரவெலாம் விண்மீன் ஒளிரும் வானம் பார்த்து தலைவன் வரும் வழி பார்த்து கண் துஞ்சாது சோர்ந்து நிற்கும் எம் தலைவியின் தலைவன் எங்கென்று சொல்லாயோ எழில் முல்லை மலரே! பாலும் தேனும் செங் கழையும் கடும் துவர்ப்பு என்றே மொழிகின்றாள் மல்லியும் முல்லையும் செந் தாமரையும் கயல் விழிகள் தீண்டவே மறுக்கின்றாள் விழுப் புண் பட்ட தோள்களிலே நிதம் சாய்ந்து றங்கவே தவிக்கின்றாள் தலைவன் உண் டெஞ்சிய அமுதினையே உடன் தானும் பருக நிணைக்கின்றாள் அருஞ்சொற்பொருள்: பசலை-தலைவரைப் பிரியும் தலைவிக்கு உண்டாகும் நோய் நித்திரை-உறக்கம் கழை-கரும்பு _________________ (2) அடிமை கைகளிலே விலங்கு வயிற்றினிலே நெருப்பு ஆழ்மனதில் விடுதலை வேட்கை... கனல் மிகுத்து நாவெடிக்க உடம்பிலும் மனதிலும் ஆறாத வெட்டுக்காயங்கள்... வற்றாத ஊற்றுதனில் வழக்கம்போல் வைரங்கள் வேகமாய்த் தீயணைக்க... வஞ்சக ஊதுகுழல் வலிமையொடு தீவளர்க்க... வீழ்ந்தது மனிதநேயம் _________________ (3) ஒளிமிகு விழிகளைக் கண்டடைந்தேன் அவற்றின் எழில்தனி் லெனைமறந்தேன் மலைபோன்ற தொள்களிலே மனமிழந்தேன் மடைபோன்ற கரங்களுக்குள் எனையளித்தேன் பரந்தனின் மார்பினில் உணர்விழந்தேன் சிவந்தனின் இதழ் தீண்ட இமைதிறந்தேன் Another One Contrast to the Above: சிவந்தநின் விழிகளுள் சினமிழந்தேன் சந்தனத் திலகத்துள் சிந்தையிழந்தேன் மலைபோன்ற தோள்களிலே மனமிழந்தேன் மடைபோன்ற கரங்களிலே மதியிழந்தேன் பரந்தனின் மார்பினில் உணர்விழந்தேன் சிவந்தனின் இதழ்தீண்ட இமைதிறந்தேன் _________________ (4) தென்னைமர நிழல் பிடிக்கும் தேன்கரும்பு சுவை பிடிக்கும் புலியிருக்கும் குகை பிடிக்கும் பூந்தளிரின் மணம் பிடிக்கும் சிங்கத்தின் சினம் பிடிக்கும் சிந்தும்பனி மழை பிடிக்கும் வெண்ணிலவின் ஒளி பிடிக்கும் வெண்பனியின் குளிர் பிடிக்கும் கண்ணிமைக்கும் நொடி பிடிக்கும் கண்ணங்களின் எழில் பிடிக்கும் முத்துக்களின் நகை பிடிக்கும் முத்துதிர்க்கு மதரம் பிடிக்கும் அருஞ்சொற்பொருள்: அதரம்-உதடு __________________ (5) உன்புகழ் தாய்நாடு பாடிடவே புன்னகையுடன் போர்க்களம் சென்றாயோ? அரிதோல் போர்த்திய நரிகளை புலியாய் சென்று வீழ்த்திடப் பிறந்தாயோ? தாயகம் திருட வந்தவர்களைப் பாய்ந்துயிர் போக்கிட சென்றாயோ? போர்க்களமே பஞ்சு மெத்தையென்று போர்முனைக்கு எழுந்து சென்றாயோ? உன்குருதி வெள்ளத்தால் தாய்மண்ணைப் புனிதப் படுத்திட சென்றாயோ? தமிழர் இதயம் கலந்த என் உடன்பிறப்பே! தமிழ்த் தாயகம் போற்றிடும் ஒளிவிளக்கே! உன்பெயரைத் தாயகம் போற்றும்! உன் திருவடிகளை வையகம் வணங்கும்! சாதனை செய்யப் பிறந்தவனே! - உன் சாதனை சொல்லிட வார்தையில்லை! தமிழீழம் ஈன்ற குலக்கொழுந்தே! - தாய்த் தமிழகம் போற்றும் சுடர்விளக்கே! உன் சாதனை கண்டு வியக்கிறேன்! உன் ஆற்றல் கண்டுனை வணங்குகிறேன்! அருஞ்சொற்பொருள்: அரி-சிங்கம் |
(6) சோலையிலே மலரிருக்க செம்பவள இதழிருக்க தோகைமயில் மஞ்சமதை வேண்டாவென விளம்பிவிட்டு ஆற்றங்கரை சேற்றினிலே அழுக்குமீனுண்டு வாழும் நாரையின் அலகினுக்குள் அகப்பட்டுத் துடிப்பதேனோ? அருஞ்சொற்பொருள்: விளம்பிவிட்டு-சொல்லிவிட்டு ________________ (7) மனித மிருகங்கள் கைகளில் சிக்கியதால் மனக்கோட்டைக்குள் குழந்தையின் அழுகுரல் பிறருக்காக சாகடிப்பதெப்படி - நான் பிறக்கும்போதே பிறந்த அதனை? ________________ (8) துண்டிரண்டாகும் கடுஞ்சொல் மொழிநா மனம் புண்படப் புன்னகைக்கு முத்துக்களுதிரும் பிறர் தீங்குறக் கண்டுமகிழ் விழியொழியும் நல்லாரைப் பழிக்குமாக்களுயிர் காலன் கொள்ளும் ________________ (9) (written for a stage performance at 11th grade) மனித மாண்பினால் மகிழ்ச்சி பிறக்கிறது மகிழ்ச்சியால் உலகம் தழைக்கிறது பாரினை அறியா சிறு குழந்தை தாய்முகம் கண்டு மகிழ்கிறது பனித்துளி விழுந்த புல்வெளிகள் எழுந்து அளவிலா மகிழ்ச்சியால் சிலிர்க்கிறது கதிரவன் வரவால் செந்தாமரைகள் மகிழ்ந்து பொன்னிதள்களைத் திறக்கிறது தென்றல் வயல்களைத் தீண்டுவதால் மகிழ்ந்த நெற்பயிர்கள் நடனம் ஆடுகிறது மாலையில் மதியவள் வரவுகண்டு மல்லிகை மொட்டுக்கள் மலர்கிறது கார்முகில்கள் வானில் கூடுவதைக் கண்ட மயில்கள் மகிழ்ந்தாடுகிறது மனித நேயத்தை மண்ணில் பரப்பியே மகிழ்ந்து நாமும் வாழ்ந்திடுவோம்! ____________________ (10)கர்த்தரின் கரங்கள் தாயைப் பிரிந்த துயரத்தால் - பெற்ற தாயைப் பிரிந்த துயரத்தால் துவண்டு துவண்டு அழுதது - பிள்ளை துவண்டு துவண்டு அழுதது துன்பம் துடைக்க எண்ணியே - அதன் துன்பம் துடைக்க எண்ணியே தூய கரமொன்று வந்தது - அதன் தூய்மை பனியையும் வென்றது அணிச்ச மலரொத்த அக்கரம் - அள்ளி அன்னை போலவே அணைத்தது அன்பு வெள்ளத்தில் சிக்கியே - பிள்ளை அல்லி மலர்போல் சிரித்தது _____________________ (11) முல்லை அரும்பென மனம் வீசி மலரான என்மேல் மழையாய் விழுந்து மனத்தினுள் என்னை மனமாற விரும்பி மணமே மணமே என்றன்போடு அழைத்த மலர்வனமே உனக்குள் ஒளிந்துகொள்கிறேன் மாலையென உனை நான் சூடிக்கொள்ள _________________________ (12) அண்ணன் அம்மா எனும் வார்த்தை மறந்தது அழுதாலும் நா அண்ணா என்றது ஆசானென உனை இதயம் ஏற்றது ஆருயிர் பிரிகையிலும் உன்னருள் கேட்டது இனிய உன்செயல் கண்டுள்ளம் மகிழ்ந்தது இன்றே உயரறம் உன்னால் வென்றது ஈதல் உன்னியல்பென் றுலகம் சொன்னது ஈவேன் என்னுயிர் என்றுள்ளம் சொன்னது உலகம் வியக்க உன்னறம் வென்றது உன்னையே இருப்பிடமாய் அன்பு கொண்டது ஊரே உன்னுயரம் கண்டு வியந்தது ஊடல் கொள்ள நின்மனம் மறந்தது என் அண்ணன் மடியில்லிமை சாய்ந்தது என் அன்னை மடியாய்க் கருத்தில்கொண்டது ஏனையோர் வாழ்வில் நிணையும் உள்ளம் ஏற்றத் தாழ்வு நினையா உள்ளம் ஐயம் இல்லா அண்ணன் உள்ளம் ஐயம் கொள்ளா அன்பு உள்ளம் ஒருதாய்ப் பிள்ளைகள் நாம் என்றே ஒருசேர நதிகள் உரக்கச் சொல்லும் ஓடுநீர் தீட்டிய உயிர்கவி நாம் ஓருயிர் ஈந்த ஈருயிர் நாம் ஔதசிய நிறமொத்த தூய உள்ளம் ஔதகத்தின் ஒளிசிந்தும் அண்ணன் உள்ளம் அருஞ்சொற்பொருள்: ஔதசியம்-பால் ஔதகம்-நீலரத்தினம் |